Published : 30 Nov 2013 10:46 AM
Last Updated : 30 Nov 2013 10:46 AM

அன்புள்ள தல, தளபதிகளுக்கு...

ரஜினிக்கும் கமலுக்கும் ஒருசேர ரசிகராக இருக்கும் பலரைப் போல, உங்கள் இருவரின் படங்களையும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க விழையும் ஃபேன் நான்.

தமிழ் திரையுலகில் வாரம்தோறும் படங்கள் வெளியாகின்றன. இந்தப் படம் வெற்றி, அந்தப் படம் தோல்வி என்று கணிப்பது யார் கையிலும் இல்லை.

உங்களது ரசிகர்களிடமும்கூட உங்களது படத்தின் வெற்றி, தோல்வி கிடையாது. உங்களது படம் வெளியாகும்போது, முதல் நாள் படத்தைப் பார்த்துவிட்டு, "தலைவா பின்னிட்டீங்க" என்று கூறிவிட்டால், நீங்கள் நடிக்கும் படம் ஒன்றும் வெற்றி படம் கிடையாது. அது உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

படத்தில் நடிக்க சம்பளம் வாங்கிவிட்டு, நடிக்கும் படம் முடிவடையும் தருவாயில் இருக்கும்போது அடுத்தப் படத்தினை தேர்வுசெய்து, அதில் நடிக்கச் சென்றுவிடுகிறீர்கள். ஆனால், உங்களது படத்தினை வைத்துக்கொண்டு, உங்களது ரசிகர்கள் இணையத்தில் அடிக்கும் கூத்துகளைச் சொல்லவே இந்தத் திறந்த மடல்.

காசு கொடுத்து படம் பார்க்கும் ஒருவர், படம் பிடிக்கவில்லை என்றால், தனது கருத்தை அவரது சொந்த ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உரிமையுண்டு. அவ்வாறு வெளியிடக் கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை. ஆனால், அது போல் கருத்துக்களை வெளியிடும் நபர்களை உங்களது ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

வேலாயுதம், மங்காத்தா இரண்டு படப்பிடிப்பும் அருகருகே நடித்தபோது, விஜய் 'மங்காத்தா' படப்பிடிப்பிற்கு சென்று, அஜித்திற்கு கடிகாரம் அணிவித்து, "நாங்கள் எதிரிகள் அல்ல, நண்பர்கள்" என்று கூறி, நட்பு பாராட்டப்பட்டது. இப்படி நீங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கும் போது, உங்களது ரசிகர்களால் இணையத்தில், உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பெயர்களைக் களங்கப்படுத்தி வருகிறார்கள்.

சாதாரண பழிவாங்கல் கதைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று பலர் 'ஆரம்பம்' படத்தைப் பற்றி கருத்து கூறினார்கள். அதே போல், 'தலைவா' படத்திற்கும் எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகின. இவ்வாறு கருத்து கூறியவர்கள் அனைவரையுமே உங்களது ரசிகர்கள் ஒன்றிணைந்து கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தீர்த்து விட்டார்கள். அர்ச்சனை என்றால் நீங்களே அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டிருக்க மாட்டீர்கள். படத்தை நன்றாக இல்லை என்று சொல்பவர்களை மட்டுமல்ல, அவர்களது மொத்த சந்ததியினரையும் திட்டித் தீர்த்து விட்டார்கள்.

ட்விட்டரில் உங்களையும், உங்கள் படங்களையும் போற்றுவதற்காகவும், தூற்றுவதற்காகவும் அவ்வப்போது ஹேஷ்டேக்-குகளை உருவாக்கி, அதை இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முக்கியத்துவம் பெற வைத்துவிடுகின்றனர். அவற்றில் பெரும்பாலானவையும் சும்மா வெட்டித்தனமாகவே உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் என்பது தெளிவு. அதில், உங்களது பெயருடன் இணைத்து வருகின்ற சில வாசகங்கள் இங்கே பதிய முடியாத அளவுக்கு முகம் சுளிக்க வைப்பவை. அவை அனைத்தும் இந்திய அளவில் இணையத்தில் கவனத்தை ஈர்ப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரிலாவது பரவாயில்லை... 140 எழுத்துக்கள்தான். கெட்ட வார்த்தை அர்ச்ச்னையும் குறைவாகவே இருக்கும். ஃபேஸ்புக் பக்கம் போனால், அய்யய்யய்யோ... உங்கள் ரசிகக் கண்மணிகள், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல், அந்த கர்மத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் ஏராளம். அவற்றைச் சுட்டியுடன் சுட்டிக்காட்டுவது, போர்னோவுக்கு எதிரான கட்டுரையில் போர்னோ தளங்களின் முகவரியைக் கொடுப்பது போன்றது.

தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நீங்கள் நண்பர்களாக இருந்து வருகிறீர்கள் என்பது மிகவும் ஆரோக்கியமான, சந்தோஷமான விஷயம். அப்படியே, உங்களது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இத்தகைய 'அவதூறு' பக்கங்களை நீக்கச் சொல்லலாமே. அவர்கள் உங்களது தீவிர ரசிகர்கள் என்பதால், உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட வாய்ப்புண்டு.

உங்களுக்கு என்று ரசிகர்களால் நடத்தப்படும் பக்கங்கள் இருக்கின்றன. அதில் உங்கள் படங்கள், செய்திகள், சுவாரஸ்ய தகவல்கள் ஆகியவை மட்டும் வெளியிடுவதில்லை. உங்களை யாராவது விமர்சித்துவிட்டால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தினை வெளியிட்டு, "இவன் நம்ம தலைவரை கிண்டல் செய்துவிட்டான். திட்டித் தீருங்கள்" என்று போர்முரசு கொட்டுகிறார்கள்.

இப்படி உங்களது ரசிகர்கள் அடிக்கும் காமெடி கூத்துக்களுக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. நீங்கள் உடனே இந்த விஷயத்தில் தலையிடாவிட்டால், வரும் காலத்தில் வேறு விபரீதங்கள் நேரவும் வாய்ப்புண்டு.

உங்களை கேட்டுக்கொள்வது எல்லாம், ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்பது மட்டுமே. இல்லையேல் வரும் காலத்தில் உங்களது ரசிகர்களின் உச்சகட்ட இணைய மோதல்களால் அவப்பெயரைச் சம்பாதிக்க போவது நீங்கள்தான்.

மரத்தினை கரையான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவது போல், உங்களது ரசிகர்கள், உங்களுக்கு இருக்கும் நற்பெயரைத் தங்களையும் அறியாமல் சமூக வலைதளங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்.

விரைந்து முடிவெடுங்கள்.

இப்படிக்கு,

தல, தளபதி ஃபேன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x