Published : 13 Aug 2016 10:48 AM
Last Updated : 13 Aug 2016 10:48 AM

அதிசய உணவுகள் 7 - புழுக்களைத் தின்னும் பழங்குடியினர்!

‘நாங்கள் எங்கள் சுற்றுச்சூழலில் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல; அது எங்களை உருவாக்குகிறது. நாங்கள் அதை உருவாக்குகிறோம்!’ - யனோமாமி

அமேசான் காடுகளில் வாழ்கிற பழங்குடிகள்தான் இந்த ‘யனோ மாமி’ இனத்தவர்கள். அவர்கள் காடுகள் கொடுப்பதை உண்டு, அவற்றை அழிக்காமல் வாழும் தேவதைகள். வெனி சுலா, பிரேசில் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் அமேசான் காட்டுப் பகுதிகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘யனோமாமி’ பழங்குடியினர் வாழ்கின்றனர்.

ஒவ்வொரு கிராமங்களிலும் 50 முதல் 400 வரை வாழும் ’யனோமாமி’ பழங் குடியினர், தங்களுடைய வீடுகளுக்குப் பின்னால் சிறுசிறு தோட்டங்களை அமைத்து அதில் காய்கறிகளையும், பழங்களையும் பயிரிடுகின்றனர். இதில் மனியாக் (manioc) மிக முக்கியமான உண வாகத் திகழ்கிறது. வேறொன்றுமில்லை. நாம் விரும்பி உண்ணும் மரவள்ளிக் கிழங்குதான் அது. சோளம், பீன்ஸ், வாழைப்பழம் போன்றவற்றையும் அவர் கள் உண்கிறார்கள். அசைவ உணவு வேண்டுமென்றால், வேட்டையாடுவதன் மூலம் கிடைப்பதை, தீயில் வாட்டி சாப்பிடுகிறார்கள்.

நான் அமேசான் காட்டில் தங்கி யிருந்த நாட்களில், ‘யனோமாமி’ பழங் குடி மக்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிட்டியது. நாங்கள் தங்கியிருந்த விடுதி யில் இருந்து படகுகளில் புறப்பட்டோம். இந்த முறை எங்களைச் சுமந்து சென்ற படகு கொஞ்சம் பெரியதாகவும், 15 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் வசதியாகவும் இருந்தது.

பல திரைப்படங்களிலும், பல புத்தகங் களிலும் அமேசான் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டவர்களை, உயிரோடுப் பிடித்து கொன்றுத் தின்கிற நரமாமிசம் சாப்பிடும் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தும், படித்தும் இருந்ததால், மனம் முழுவதும் ஒருவித பய உணர்ச்சி பரவியிருந்தது.

‘‘யனோமாப்மி பழங்குடி மக்கள் மிகவும் சாதுவானவர்கள், நட்போடு பழகுவார்கள். அவர்கள் எப்படி வாழ் கிறார்கள்? என்னென்ன சாப்பிடுகிறார்கள் என்பதை பார்க்கவே நாம் எல்லோரும் அவர்கள் வாழும் கிராமத்துக்குப் போகி றோம். தயவுசெய்து அவர்களை யாரும் கிண்டல் செய்யாதீர்கள். அது வம்பில் போய் முடிந்துவிடும்’’ என்று எங்களை எல்லாம் எச்சரித்தார் எங்கள் வழிகாட்டி.

நதியின் போக்கில் படகு சென்றது. ஒரு மணி நேர பயணத்துக்குப் பிறகு ஆற்றங்கரையின் ஓரத்தில் சற்றுத் தள்ளி அழகான குடில்கள் தென்பட்டன. படகை விட்டு இறங்கி, ஆற்றங்கரையில் நடக்கத் தொடங்கினோம்.

அப்போது எங்கள் முன் எதிர்பட்ட வரைப் பார்த்து ‘அட, யார் இவர்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.

பல வர்ணங்களைக் கொண்ட பறவை களின் சிறகுகளால் ஆன கீரிடத்தை அணிந்து, முகத்தில் சிவப்பு நிறக் கோடுகளோடு, கோவணம் கட்டி, இடுப் பைச் சுற்றி இலை, தழைகளால் ஆன இடைவாரை (belt) அணிந்து, கைகளில் ஈட்டியை ஏந்தி, புன்முறுவலோடு எங்களை வரவேற்க வந்தவர்தான் அந்தக் கிராமத்துத் தலைவர்.

பிறகு எங்களை வரவேற்ற பெண் களும், ஆண்களும் ஆரோக்கியத்தின் சின்னங்களாகவே திகழ்ந்தனர். தொப்பை என்பது மருந்துக்கும் கூட அவர்களிடம் இல்லை. பெண்களின் மார்பகங்களைக் கொட்டாங்கச்சியிலான பிரேசியர்கள் அலங்கரித்தன.

‘‘இந்தாருங்கள்… இந்தச் சிசாவை (chicha) குடியுங்கள்’’ என்று எங்களை உபசரித்தனர்.

எல்லோருடைய புருவங்களும் உயர்ந்தபோது, எங்கள் வழிகாட்டி விளக்கினார்: ‘‘இது இவர்களுடைய பாரம்பரிய பானம். இதை மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிப்பார்கள். பலர் சோளத்தையும் உபயோகிப்பார்கள். சோளத்தை வாயில் போட்டு நன்றாக மென்று, பிறகு பற்களை உபயோகித்து வாயிலேயே சிறு சிறு உருண்டை களாக்கி, பிறகு வெளியே எடுத்து வெய்யிலில் காய வைப்பார்கள். உமிழ் நீரில் இருக்கும் என்சைம்கள் (Enzymes) சோளத்தில் உள்ள சர்க்கரையைப் புளிக்க வைக்கும். அதில் இருந்து பிறப்பதுதான் சிசா’’ என்றார்.

அதைக் கேட்டு என் முகம் திடீரென மாறியதைப் பார்த்த வழிகாட்டி, ‘‘இந்தப் பானத்தை நன்றாகக் கொதிக்க வைத்து, பின்பு ஆற வைத்துதான் பறிமாறுவார்கள்’’ என்றார்.

சிசாவை பல வெளிநாட்டவர் ருசி பார்த்தனர். ஆனால், நாங்களோ அதை ‘ச்சீ… இந்தப் பழம் புளிக்கும்’ என்று அன்பாக மறுத்துவிட்டோம்.

பிறகு, அமேசான் காட்டுக்குள் பழங் குடி மக்கள் வேட்டையாடும் முறைகளை யும், அவர்கள் உபயோகிக்கும் உபகரணங்களைப் பற்றியும், காட்டுக்குள் அழைத்து சென்றபடியே விளக்கிய வழிகாட்டி, திடீர் என்று நின்று பழங்குடி ஒருவரிடம் ஏதோ சொன்னார். அதைக் கேட்ட அவர் சடசடவென்று அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறி அதைச் சுற்றியிருந்த கொடியை (நன்றாக முற்றிய மரத்தின் கிளையைப் போன்று இருந்தது அது) வெட்டி எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.

கூரிய கத்தியைக் கொண்டு அந்தக் கொடியின் முனை சீவப்பட்டது. அதன் உள்ளே இருந்து தண்ணீர் கொட்டியது. அதை வழிகாட்டி ஆவலோடு வாங்கிக் குடித்தார். எங்களில் சிலரும் ருசித்துக் குடித்தனர்.

‘‘இந்தக் கொடியின் பெயர் ‘தண்ணீர் கொடி’ (water vine). இது அமேசான் காடு களில் காணப்படும். நாம் வெளியே செல் லும்போது குடிப்பதற்காக தண்ணீர் பாட் டில்களை சுமந்து செல்கிறோம். ஆனால், அமேசானில் வாழும் பழங்குடியினர் வேட்டைக்காக சில நாட்கள் காட்டி லேயே தங்க நேரிடும். பல சமயங்களில் அருகில் நீர்நிலைகள் இருக்காது. அப் போதெல்லாம் இந்தத் தண்ணீர் கொடிகள் தான் அவர்களுடைய தாகத்தை தீர்க் கும். இந்தத் தண்ணீரில் புரதச் சத்துக்கள் மிகுந்து இருக்கும். வேட்டைக்காக அலைந்து திரியும் ‘யனோமாமி’ பழங்குடிகளின் சோர்வை இந்தத் தண்ணீர் போக்கும்’’ என்றார்.

அதைக் கேட்டு, இயற்கை அன்னை யின் கருணையை எண்ணி நெக்குருகிப் போனேன். அவளையே நம்பி காட்டில் வாழும் மக்களுக்காக அவள் தரும் கொடைகள்தான் எத்தனை!

தொடர்ந்து நாங்கள் காட்டுக்குள் சென்றோம். பனை மரத்தையொத்த ‘பாலா’ (palla) மரங்கள் தங்களுடைய இலைகளைக் காற்றில் அசைத்தபடி இருந்தன. ‘அட, நம்மூர் தென்னங்கீற் றைப் போலவே இருக்கின்றனவே’ என்று எண்ணி முடிக்குமுன்பே வழிகாட்டி சொன்னார்: ‘‘இந்தப் பாலா மரங் களின் இலைகளைக் கொண்டு கூரைகள் அமைக்கலாம்; அழகுப் பொருட்களும் செய்யலாம்!’’

நாங்கள் சென்ற பாதையில் சிறிது அழுகிய நிலையில் ஒரு பாலா மரத்தின் அடிபாகம் விழுந்து கிடந்தது. வழிகாட்டி பரபரப்படைந்தார். அதே நொடியில் தன் கையில் பிடித்திருந்த கத்தியால் மரத்தின் அடிப்பாகத்தை ‘யனோமாமி’ பழங்குடி மனிதர் வெட்ட, உள்ளே இருந்து மஞ் சளும், வெள்ளையும் கலந்த நிறத்தில், கால்கள் இல்லாமல் உடல் முழுவதும் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஆழ்ந்த பழுப்பு நிற தலைக் கொண்ட நுண்புழுக் கள் வெளிப்பட்டன. அதில் இரண்டை கைகளில் எடுத்து அப்படியே வாயில் போட்டு மெல்லத் தொடங்கினார் அந்த ‘யனோமாமி’. நாங்கள் திகைத்து நின்றோம்.

- பயணிப்போம்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x