Last Updated : 24 Mar, 2017 12:36 PM

 

Published : 24 Mar 2017 12:36 PM
Last Updated : 24 Mar 2017 12:36 PM

அசோகமித்திரனை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை

எவ்வளவோ பேருக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதியவர் அசோகமித்திரன். அஞ்சலிக் கட்டுரைகள் எழுதுவதில் உள்ள நெருடல்களைப் பற்றியும் சில நேரங்களில் அதற்கு மெனக்கெடுவது பற்றியும் அதன் தேவைகுறித்த அனுபவங்களை சற்று விரிவாகவே எழுதியிருந்தார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி, சாந்தாராம் உள்ளிட்ட பிரபலங்களை இணைய தளங்கள் இல்லாத நாட்களிலேயே ஓரிரு மணிநேரங்களில் எழுதித் தந்துவிடும் அசாத்திய நினைவாற்றலும் தேடலும் கொண்ட அவரது உழைப்பை பத்திரிகை உலகம் நன்கறியும்.

ஒருமுறை 'எனக்கான அஞ்சலிக்கட்டுரையைக் கூட நானே எழுதி வைத்துவிட்டேன்' என்றும் அசோகமித்திரன் கூறியிருந்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்யவில்லை. மாறாக அவரது இந்தக் கூற்று நுட்பமான நகைச்சுவையின் பிரிதொரு தொடர்ச்சியாகவே வாசகர்கள் புரிந்து கொண்டனர்.

எண்பதுகளின் இறுதி. கிட்டத்தட்ட 'கணையாழி' ஆசிரியர் பொறுப்பில் இருந்து அசோமித்திரன் விடுபட்ட தருணம். அவர் ஆசிரியராகப் பணியாற்றிய அந்தக் கடைசி இதழில் அவர் திடீர் அதிர்ச்சியாக கணையாழி ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, அதுவும் இந்த இதழிலிருந்தே விலகுவதாகவும் எழுதிய தலையங்கம் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணையாழியின் ஒவ்வொரு இதழிலும் அவர் முதல் பக்கம் (உள்ளடக்கம்) தவிர அடுத்த இரண்டு பக்கங்களிலும் எழுதிவந்தது எனக்கு இலக்கியம் உள்ளிட்ட சக உலகத்தை இன்னொரு அணுகுமுறையோடு புரிந்துகொள்ள பெரிதும் உதவி வந்தது. இனி அதற்கு வாய்ப்பில்லை என்ற ஏமாற்றம் கவ்விப் பிடித்தது.

அவர் கணையாழி இதழின் முதல் பக்கத்தில் தலையங்கமாகவும் ஒரு கடிதம் போலவும் வாசகர்களுக்கு ஒரு தகவலை எழுதியிருந்தார். கணையாழி ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான காரணங்களை நேரடியாக பகிர்ந்துகொண்ட வருத்தங்கள் சில அதில் இருந்தன. எந்த கைம்மாறும் சன்மானமும் எதிர்பார்க்காமல் ஆசிரியர் பொறுப்பை ஏற்று இலக்கியம் மீதான அக்கறையின்பாற்பட்ட ஒரே காரணமாகவே 20 ஆண்டுகள் மிகுந்த சிரத்தையோடு செயல்பட்டுவந்தேன். பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினையோடு இணைந்து வந்து கொண்டிருக்கக் கூடிய இந்த பொறுப்பு மீது பெரிய பெருமைகள் தேவையில்லை. தனிப்பட்ட பாராட்டும் கூட வேண்டியதில்லை.

20 ஆண்டுகளாக பல்வேறு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய நிலையிலும் பரந்துபட்ட இலக்கிய உரையாடல்களை உருவாக்கிய நிலையிலும் விரும்பத்தகாத குறுக்கீடுகளும் நிபந்தனைகளும் தொடர்ந்து சங்கடத்தை ஏற்படுத்திவரும்நிலையில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியேயில்லை என்று எழுதியிருந்தார். அவருடைய சொற்களை அப்படியே சொல்லும் ஆற்றல் இல்லாததால் நினைவின் தடங்களிலிருந்து இந்த வாசகங்கள்தான் என்பதை ஏகதேசமாகச் சொல்லமுடியும்.

அவர் ஆசிரியராக இருந்த காலம் வரையிலும் கணையாழியின் இதழை வடிவமைப்பதில் அவருக்கிருந்த வெளிப்பாட்டுத் தன்மைக்கான அழகுணர்ச்சியை ஒவ்வொரு இதழிலும் அனுபவித்து செய்து வந்தார். 87ல் வெளிவந்த ஒரு இதழில் ஜெயமோகனின் முதல் சிறுகதை 'நதி'யை வெளியிடும்போது 'அப்பாவுக்கு' என்று ஒரு குறிப்பை பக்கவாட்டில் குறிப்பிட்டிருப்பார். அதே இதழில் முரளி என்பவர் எழுதியிருந்த ஒரு கதைக்கு பக்கவாட்டில் 'அம்மாவுக்கு' என்று குறிப்பிட்டிருப்பார்.

ஒருவகையில் கணையாழியிலிருந்து அவர் வெளியே வந்தது நல்லதாகப் போய்விட்டது. அதன்பிறகுதான் அவர் எண்ணற்ற சிறுகதைகளை, குறுநாவல்களை, எழுதிக் குவித்தார். அவர் நினைவுகளில் இருந்தது முழுக்கமுழுக்க இளம்வயது செகந்தராபாத் நாட்களே. அவை வெறும் அசைபோடும் நினைவுகள் மட்டும் இல்லை. வெவ்வேறு போர்களை உலகம் சந்தித்தபோது தென்னிந்தியாவின் அரசப் பாரம்பரிய நகரம் ஒன்று எதிர்கொண்ட கலகங்களையும் சண்டைகளையும் அரசியல் மாற்றங்களையும் தனது படைப்புகளில் முன்வைத்தார். அவரது பாணி என்று சொல்லவேண்டுமானால் எளிய நடுத்தர குடும்பத்து மனிதனின் வாழ்வில் வரலாறு குறுக்கிடுவதை போகிறபோக்கில் சொல்வார்.

78-ல் நக்சலைட் இயக்கங்கள் தமிழகத்திலும் இருந்ததை அவரது 'தலைமுறைகள்' சொல்கிறது. இதைப் படித்துவிட்டு என் தந்தையார் என்னிடம் நான் பெரிதும் சிலாகிக்கும் அசோகமித்திரன் இப்படி எழுதிவிட்டாரே என்று என்னிடம் குறைபட்டுக்கொண்டார். ஒரு மகன் தந்தையை அறைந்துவிடும் காட்சி அது. 'தலைமுறைகள்' குறுநாவல் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்து சிலகாலம் நடத்திய கல்பனா இதழில் வெளிவந்தது.

'சரிப்பா நான் அவரை நேர்ல சந்திக்கும்போது இதைப்பற்றி கேட்கறேன்' என்று என் தந்தைக்கு ஆறுதல் அளித்துவிட்டு சென்னை வந்து அவரைச் சந்தித்தேன். முன்னறிவிப்பு தகவல் எதுவும் இன்றி திடுமென்று தி.நகர் இல்லத்தில் காலை 7 மணிக்கு போய்ப் பார்த்தேன். கிட்டத்தட்ட கணையாழியிலிருந்து அவர் ஒருமாதத்திற்கு முன் வெளியே வந்த தருணம் அது.

அவரிடம் ஒரு மணிநேரம் பேச முடிந்தது. கிருஷ்ணவேணி தியேட்டருக்கு அருகே தாமோதரச் ரெட்டித் தெரு என்று நினைவு. சுற்றுமதில் கிராதி கேட்டைத் திறந்து சிறிது தூரம் நடக்கவேண்டும். அதன்பிறகு வீட்டின் குட்டி வராந்தா. அங்கேயே அவரது வரவேற்பரை போன்ற எழுத்து சார்ந்த தளவாடங்கள். யாரோ வெளிநாட்டு ஓவியர் வரைந்துகொடுத்ததுபோன்ற அவரது ஓவியம் ஒன்று. மேசையில் புத்தக அடுக்குகளுக்கு அருகே... ''பால்நிலவன்'' என்று சொன்னதும் ''யார் ஸ்ரீதரனா?'' என்றுதான் கேட்டார். எனக்கு ஒருவகையில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்கு முன்னதாகவே தொடர்ந்து அவர் சொன்னது செல்லமான கோபத்தைத் தூண்டியது. ''இந்த ஒருமணிநேரம் பால்நிலவன் வேண்டாமே... நான் உங்களை ஸ்ரீதரன்னு கூப்பிடறேன்.. உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா?'' என்று கேட்க. ''சரிங்க சார்'' என்று ஒப்புதல் வழங்கினேன்.

அவருடன் நடந்த உரையாடல்கள் அவ்வளவும் நினைவில் கல்வெட்டாக உள்ளன. ஆனால் இங்கு மேலே சொன்ன நாவல் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ''என் தந்தையார் உங்களிடம் கேட்க சொன்னார்... ஒரு மகன் தந்தையை அடிக்கலாமா அதற்கு பதில் சொல்லுங்கள்...?''

அவர் சொன்னார்.... ''கதையில் தந்தையை அடிக்கிறவன் ஒரு நக்சலைட். அவனது நடவடிக்கைகள் தந்தைக்குப் பிடிக்கவில்லை. படித்துவிட்டு ஏதாவது வேலைக்கு போகவேண்டும் என்பதுதான் ஒரு சராசரி தகப்பனின் ஆசையாக இருக்கும். போராட்டம் புரட்சி இயக்கம் என்று சுற்றிக்கொண்டிருப்பதை எந்த தந்தைதான் விரும்புவார். இதில் போலீஸுக்கு தெரியாமல் மறைந்து வாழும் நிலைவேறு... ஒருநாள் இரவு அவன் வீட்டுக்கு வருகிறான் யாருக்கும் தெரியாமல் அம்மாவுடன் வந்து பேசுகிறான். அம்மா அவனிடம் அழுகிறாள். சாப்பிடச் சொல்கிறாள். இந்த நேரம் பார்த்து அப்பா பார்த்துவிட அவனிடம் வந்து சண்டை போடுகிறார். இரு உன்னை போலீஸ்ல பிடிச்சிக்கொடுக்கிறேன் என்று போலீஸுக்கு போன் செய்கிறார். அவன் உடனே அங்கிருந்து தப்ப முற்படுகிறான். தந்தையோ அவனை இழுத்துப் பிடிக்கிறார். அவருக்கு அவனை போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அந்த நிலையில்தான் அவன் தன் தந்தையை அறைந்துவிட்டு தப்பிக்கிறான். இதில் என்ன தவறை உங்கள் தந்தையார் கண்டார் சொல்லுங்கள் என்று என்னை திருப்பிக்கேட்டார்.

எனக்கு அவரது விளக்கம் போதுமானதாக இருந்தது. ஊர் திரும்பிய நான் என் தந்தையிடம் இதைக்கூறினேன். சமாதானம் அடைந்தார் என்று சொல்லமுடியாது. ஆனால் அவர் கேட்டதற்கு விளக்கம் கேட்டுவந்த பிள்ளையை ஆசையோடு பார்த்துப் புன்னகைத்தார் என்றுவேண்டுமானால் சொல்லலாம்.

அசோகமித்திரனுடனான அந்த சந்திப்பில் இன்னொன்றும் நடந்தது. கணையாழியிலிருந்து வெளியே வந்த பிறகும் அவர் பொறுப்பில் இதழில் வெளிவர வேண்டிய சில கதைகள் இருந்தன. அதில் என்னுடையதும் ஒன்று. அதைப் பற்றியும் சொன்னார். 'சில திருத்தங்களோட பிரஸ்க்கு அனுப்பியிருக்கேன். அந்த திருத்தம் உங்களுக்கு சம்மதம்னா பரவாயில்லை. சம்மதம் இல்லைன்னா நீங்க அதை எடுத்துக்கலாம்' என்று கிருபாகரன் போன்ற ஏதோஒரு பெயரைச் சொல்லி அச்சகத்தில் என் கதை இருப்பதையும் சொல்ல, உடனடியாக 149 பெல்ஸ் ரோடுக்கு வந்தேன். பிரஸ்ஸில் மிகவும் நைந்த புடவைகளை அணிந்த பெண்கள் அச்சுக்கோக்கும் பணியில் ஈடுபட்ட காட்சியைக் கண்டதும் மனம் வலித்தது.

அடக்கடவுளே இவர்களா நமது எழுத்துகளை கோக்கிறார்கள். அடப்பாவமே என்று ஏதோ ஒரு ஏமாற்றம் மனசைப் பிசைந்தது. அங்கு பொறுப்பில் இருந்தவரை சந்தித்தேன். கதையை வாங்கிப் பார்த்தேன். அதில் 19 பக்க ஏ4 தாள்களில் கடைசி இரண்டரை பக்கத்தை சிகப்பு மையில் குறுக்கும்நெடுக்குமாக கோடுபோட்டு வைத்திருந்தார். என் கதை இப்படி திருத்தத்தோடு எப்போதுமே பிரசுரம் ஆனதில்லை. அதைப் பார்த்ததும் வெறுப்புமேலிட அசோகமித்திரன் சொன்னதை அவரிடம் சொல்லி கதையை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

அதன்பிறகு பலமுறை அசோகமித்திரனின் எழுத்துவன்மையை பல பத்திரிகைகளில் கண்டுவியந்தேன். கூட்டங்களிலும் சந்தித்துப் பேசினேன். ஆனால் அந்தக் கதையைப் பற்றி நானும் சொல்லவில்லை அவரும் கேட்கவில்லை. இதற்கிடையில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கப்பெற்று எனக்கு அவர் பாராட்டுக்கடிதம் எழுதுகிறார்.

அவர் திருத்தம் செய்த கதையை சில பத்தாண்டுகள் அதை எந்தப் பத்திரிக்கைக்கும் அனுப்பாமல் அப்படியே வைத்திருந்தேன். ஒருநாள் எதேச்சையாக எடுத்துப் படிக்கையில் என் கதையை எங்கே நிறுத்தவேண்டும் என்று அவர் குறிப்பிட்டு, மீதியுள்ளதை அவர் அடித்திருந்தது கதையின் பளிச் தன்மை புலப்பட்டதை அறிந்தேன். மனம் ஒருகனம் கிடந்து தவித்தது. ஐயோ அவர் கைவண்ணத்திலேயே பிரசுரமாகியிருந்தால் எவ்வளவு சரியாயிருந்திருக்கும். பின்னர் அவர் திருத்தியிருந்தவிதமாகவே வேறொரு பத்திரிகையின் முதல் இதழில் வெளிவந்தது.

தான் தன் வாழ்க்கை என்றுமட்டும் வாழாமல் சக உலக மாற்றங்களையும் மிகச் சிறப்பாக தனது எழுத்தின் ஊடாக எழுதியவரின் ஆன்மா விடைபெற்றுக்கொண்டுவிட்டது. குறுகுறுவென்று உலகை ரசிக்கும் இளவயது மாணவப் பருவத்தின் அழகுணர்ச்சியை அவரைப் போல் எழுதியவர்கள் இல்லை.

உலக சினிமா குறித்த ஹாலிவுட்டின் சிறந்த முயற்சிகள் பலவற்றையும் தன் எழுத்தின் வாயிலாக துவக்கத்தில் அவர்தான் பேசிக்கொண்டிருந்தார். அந்தவகையில் 'கான் வித் விண்ட்' நாவல், திரைப்படம் இரண்டையும் பற்றி அவர் குறிப்பிட்டபிறகே அமெரிக்க எம்பஸியின் நிகழ்வில் வேறெந்த வேலையும் ஒதுக்கிவிட்டு போய் 'கான் வித் விண்ட்' திரைப்படத்தைக் காணவேண்டியிருந்தது. மிகப்பெரிய படம் அது. நாவலைப் பற்றி அவர் வலியுறுத்தி எழுதியதன் அவசியம் புரிபட்டது. ஒரு மிகப்பெரிய குடும்பத்தின் வீழ்ச்சியின் வாயிலாக அமெரிக்க உள்நாட்டுக் கலங்களினால் நேர்ந்த அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை அந்த நான்குதலைமுறை கதையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது. அதேபோல அமெரிக்க எழுத்தாளர்களின் குறிப்பாக அமெரிக்காவை 'இதுஎன் நிலம் அல்ல' என துணிச்சலாக ஒரு படைப்பு ஒன்றில் உள்ளுறை எனப்படும் மறைபொருளாக எழுதிய வில்லியம் பாக்னரையும் தமிழில் அவர்தான் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

'தண்ணீர், கரைந்த நிழல்கள்', '18வது அட்சக்கோடு' போன்ற அவரது நாவல்கள் உலகத்தரம் வாய்ந்தவை. இதில் 'தண்ணீர்' நாவல் திரைப்படமாக்கும் முயற்சிகளும் நடந்து அப்படியே கிடப்பில் உள்ளது. சிலநேரங்கள் அவரது நேர்காணல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன. சர்ச்சைகளையும் உண்டாக்கின. அவரது எழுத்தின் வாயிலாக மனித உறவுகளின் ஊடாட்டங்களை உணர்ந்தவர்கள் நிச்சயம் அவரது கூற்றை சந்தேகிக்கவில்லை. ஆனால் அதுவும் மிகவும் குறைந்த எண்ணிக்கையான வாசகர்கள்தான்.

ஒவ்வொரு முறையும் தமிழுக்கு ஞானபீடம் குறித்த விவாதங்கள் உருவாகிக்கொண்டேயிருக்கும். சமீப சில ஆண்டுகளில் அவருடைய பெயர் முதன்மையாக இடம்பெற்றது. ஆனால் அதை மத்தியில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் மட்டும் இல்லை. அவருக்கு அருகாகவே இருந்த பலரும்கூட அவரை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நான் உட்பட.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x