Last Updated : 29 Nov, 2016 04:11 PM

 

Published : 29 Nov 2016 04:11 PM
Last Updated : 29 Nov 2016 04:11 PM

அகதிகளுக்கு காதல் பாடம்: ஜெர்மனி ஆசிரியரின் ஒருமைப்பாடு முயற்சி

24 வயதான ஓமர் முகமது சிரியாவைச் சேர்ந்த ஒரு பொற்கொல்லர். ஜெர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான அகதிகளில் ஒருவர். ஜெர்மானியப் பெண்கள் தன்னை ஈர்ப்பதாகச் சொல்லும் இவர் அவர்களை எப்படி அணுகவது என்பது மர்மமாகவே உள்ளது என்கிறார்.

அந்த மர்மத்துக்கான தீர்வு ஜெர்மனியிலேயே கிடைக்கும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

பெண்களை அணுகுவது எப்படி என, பணக்கார மேல்தட்டு ஜெர்மானிய ஆண்களுக்கு பாடம் சொல்லித் தருவது ஹார்ஸ்ட் வென்ஸேயின் வேலை. 27 வயதான இவர் தற்போது ஜெர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு இந்தப் பாடத்தைச் சொல்லித் தர முன்வந்துள்ளார்.

லட்சக்கணக்கான அகதிகள் ஜெர்மனியில் தஞ்சம் புகுந்துள்ளனர். பெரும்பாலும் போரினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள் மற்ற நாட்டினரைப் பற்றி சரியாகப் புரிந்து, அவர்களுடன் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவே தான் இதை செய்வதாக வென்ஸே தெரிவித்துள்ளார்.

"தனக்கான துணையை தேடிக்கொள்வதே மக்களோடு மக்களாக கலக்க சிறந்த வழி. அதனால் தான் இந்த பாடங்களை எடுக்கிறேன்" என வென்ஸே கூறியுள்ளார்.

கடந்த வாரம் டார்ட்மண்ட் நகரில், "ஜெர்மனியில்ல் காதல் வயப்படுவது எப்படி?" என 11 இளைஞர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்.

இந்தப் வகுப்பு மாணவரில் ஒருவரான ஓமர், "அவர்களுக்குத் தெரிந்த மொழியைப் பேச முடியவில்லை என்றால் ஒரு பெண்ணை சந்திப்பது கடினமே. இங்கு கலாச்சார ரீதியாக, மத ரீதியாக பல வித்தியாசங்கள் இருக்கின்றன. எங்கள் நாட்டில் இப்படிப்பட்ட சுதந்திரம் இருந்ததில்லை. ஆனால் ஒரு ஜெர்மானியப் பெண்ணைத் திருமணம் செய்வதில் எனக்கு விருப்பமே. அவர் எனக்கு மொழியைக் கற்றுத் தர முடியும். இந்த நாட்டைப் பற்றியும், சட்ட திட்டங்களைப் பற்றியும் என்னை விட அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்" என்றார்.

சில ஜெர்மானிய பெண்கள் இந்த யோசனையை வரவேற்கின்றனர். ஜஸ்மின் ஆல்ப்ரிச் பேசுகையில் தனக்கு மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிடிக்கும் என்றும், ஜெர்மானிய ஆண்கள் அதிக பீர் அருந்துகின்றனர், அதிகமாக கால்பந்தாட்டத்தை பார்க்கின்றனர், அதிக வெண்மையாக இருக்கின்றனர் என்றும் தனது குறைகளை வெளிப்படுத்துகிறார்.

தங்களைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் தாண்டி வர வென்ஸேயின் பாடங்கள் உதவுவதாக அதில் பங்கெடுப்பவர்கள் கூறுகின்றனர்.

காதிப் அல் பான் என்பவர் பேசும்போது, "எங்களுக்கு இந்த வகுப்புகளினால் நல்ல பயன் கிடைக்கிறது. ஜெர்மன் பெண்கள் எப்படி சிந்திப்பார்கள், அவர்களிடம் எப்படிப் பேசுவது, அவர்கள் பாரம்பரியத்தை எப்படி புரிந்து கொள்வது என அவர் எங்களுக்கு சொல்லித் தருகிறார்" என்றார்.

இந்த வகுப்புகளுக்கு வென்ஸே வாங்கும் கட்டணம் அதிகம். தனி நபருக்கான ஒரு நாள் வகுப்புக்கு 1,400 யூரோக்களும், குழுவுக்கு 4,000 யூரோக்களும் கட்டணமாக வாங்குகிறார். இந்த மாதிரியான வகுப்புகளுக்கு ஜெர்மனியில் இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது போல டிவி, ரேடியோ உள்ளிட்ட ஊடகங்களிலும் இது குறித்து பேசி வருகிறார்.

இது குறித்து தான் தொடர்ந்து எழுதி வரும் வலைப்பக்கத்தை 5 லட்சத்துக்கும் அதிகமான ஜெர்மானியர்கள் பின் தொடர்வதாக வென்ஸே கூறுகிறார். இடம் பெயர்ந்தவர்களுக்கான வகுப்புகளை தனக்கு கிடைக்கும் நேரத்தில் இலவசமாக எடுக்கிறார். அந்த வகுப்புகளில் பெரும்பாலான இளைஞர்கள் பெண்களுடன் பேசுவது, டேட்டிங் செல்வது, செக்ஸ் உள்ளிட்ட விஷயங்களில் கத்துக்குட்டிகளாக இருப்பதாகவே நினைக்கிறார்.

புது வருடக் கொண்டாட்ட தாக்குதலின் பின்விளைவு

ஆனால் புது வருடக் கொண்டாட்டங்களின் போது சில அயல்நாட்டு இளைஞர்கள், முக்கியமாக வட ஆப்பிரிக்க இளைஞர்கள் சிலர் கொள்ளையிலும், பெண்களிடம் தவறாகவும் நடந்து கொண்டனர். அதனால், தஞ்சம் புகுந்த அகதிகளை ஜெர்மனியில் பரவலாக விரோதத்துடனே அணுகுகிறார்கள். இப்படியான விரோதம் பெரும்பாலும் சிரியா, இராக் மற்றும் அப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வரும் இளைஞர்களையே பாதிக்கிறது. இவர்களே இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையும் கூட. சென்ற வருடம் மட்டும் 8,90,000 மக்கள் ஜெர்மனியில் தஞ்சம் புக விண்ணப்பித்துள்ளனர். இந்த வருடம் மேலும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்கள் மீது வன்முறை, அவர்கள் தங்குமிடங்கள் மீதும் மசூதிகள் மீதும் தீ வைப்பு என சம்பவங்கள் அதிகரித்துள்ளன. புது வருட கொண்டாட்ட வன்முறைக்குப் பிறகு பல அகதிகள் பாகுபாட்டையும், வன்முறையையும் சந்தித்துள்ளதாகக் கூறுகின்றனர். அயல் நாட்டு அகதிகள் மீதான விரோத போக்கு ஜெர்மன் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இடம்பெயர்ந்தோரை வரவேற்கும் முடிவை எடுத்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் எதிர்கட்சியினருக்கு மக்களிடையே ஆதரவு கூடுவதில் இது தெரிகிறது.

சுவாரசியமான முதல் வகுப்பு

வென்ஸேயின் முதல் வகுப்பு சுவாரசியமாக துவங்கியுள்ளது.

என்ன சொல்லிக் கொடுப்பார்கள் எனத் தெரியாமல் கோட் சூட் சகிதமாக கைகளைக் கட்டிக் கொண்டு, வென்ஸேயை தீர்மானமில்லாமல் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தார்களாம் வகுப்புக்கு வந்திருந்தவர்கள்.

முதல் டேட் அன்று என்ன பேசலாம், எப்படி வாழ்த்தலாம் என பல யோசனைகளை வென்ஸே வழங்கியுள்ளார். பெண்களை போரடிக்காமல் ஆச்சரியப்படுத்துங்கள். அவர்களை நாடகங்களுக்கு, மலை ஏறுவதற்கு, இசை நிகழ்ச்சி என அழைத்துச் செல்லுங்கள். லண்டன், ஆம்ஸ்டர்டம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள். இவை வென்ஸேவின் சில அறிவுரைகள். இந்த வகுப்பில் செக்ஸ் குறித்தும் பாடம் எடுக்கப்பட்டுள்ளது.

வகுப்பு முடியும் போது, பலர் தாங்கள் நிறைய தெரிந்து கொண்டதாகவும், புதிதாக கற்றுக் கொண்ட திறமைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். ஆனால் காதிப் அல் பான், இந்த வகுப்பினால் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. முடிவில் அவர் சொன்னது இதுதான், "ஜெர்மன் கேர்ள்பிரெண்ட் கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஆனால் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் எனது தேசத்தைச் சேர்ந்த, எங்கள் கலாச்சாரத்தை, பண்பாட்டை பின்பற்றும் ஒரு பெண்ணைத் தான் திருமணம் செய்வேன்" என்றாராம்.

வென்ஸே இவரைப் போன்றவர்களுக்கு எப்படி வகுப்பெடுப்பார் என நினைக்கிறீர்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x