Last Updated : 05 Sep, 2015 09:30 AM

 

Published : 05 Sep 2015 09:30 AM
Last Updated : 05 Sep 2015 09:30 AM

ஷீனா போராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் இந்திராணி? - ஊடகங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு

ஷீனா போராவை கொலை செய்த குற்றத்தை இந்திராணி ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த தகவல் இந்திராணியின் வழக்கறிஞருக்கே தெரியாது என்று கூறப்படுகிறது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திராணி, ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியை 3-வது திருமணம் செய்தார். இந்திராணி ஏற்கெனவே 2 பேரை திருமணம் செய்தவர். முதல் கணவர் சித்தார்த் தாஸ் மூலம் பிறந்தவர்கள் ஷீனா போரா, மைக்கேல். இரண்டாவது கணவர் சஞ்சீவ் கண்ணா மூலம் பிறந்தவர் வித்தி. இந்த விவரங்களை பீட்டரிடம் இந்திராணி மறைத்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷீனா கொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் ஷீனா அமெரிக்கா சென்றுவிட்டதாக பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றி உள்ளார் இந்திராணி. இந்த வழக்கில் கார் டிரைவர் ஷியாம் ராய் அளித்த தகவலால் ஷீனா கொலை செய்யப்பட்டது 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் வந்தது. இந்த வழக்கில் இந்திராணி, 2-வது கணவர் சஞ்சீவ், ஷியாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இறுதியில் இந்திராணியை போலீஸார் கைது செய்ததில் இருந்து அவர், “ஷீனா உயிரோடுதான் இருக்கிறார், அமெரிக்காவில் வசிக்கிறார்” என்று தொடர்ந்து கூறி வந்தார். மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போது கூட, தனக்கு எதுவும் தெரியாது என்றார் இந்திராணி. இந்நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீஸார் உறுதியாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், பீட்டர் முகர்ஜிக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கி வரும் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, ‘‘கொலை குற்றத்தை இந்திராணி ஒப்புக் கொண்டது பற்றி பீட்டருக்கு எதுவும் தெரியாது. சில சேனல்கள்தான் அவ்வாறு செய்திகளை பரபரப்பாக வெளியிட்டுள்ளன.

இந்திராணியின் வழக்கறிஞர் கூட என் அலுவலகத்தில்தான் அமர்ந்திருந்தார். அவருக்கு கூட இந்திராணி குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்ற தகவல் தெரியவில்லை. போலீஸாருக்கும் ஊடகங்களுக்கும் மட்டும் தெரியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x