Last Updated : 19 Feb, 2017 01:49 PM

 

Published : 19 Feb 2017 01:49 PM
Last Updated : 19 Feb 2017 01:49 PM

வேலைவாய்ப்புபெற மோடி உதவவில்லை என புகார்: முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வது ஏன்? - உ.பி. அமைச்சர் ஆசம் கான் சர்ச்சை பேச்சு

‘‘முஸ்லிம்களின் வேலைவாய்ப் புக்கு பிரதமர் மோடி எந்த உதவியும் செய்யவில்லை. அதனால் வேறு வேலை இன்றி அதிக குழந்தைகளை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்’’ என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ஆசம் கான் பேசியுள்ளார். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. ஆளும் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இந்நிலையில், மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரும் சமாஜ்வாதி மூத்த தலைவருமான முகமது ஆசம் கான் அலகாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

முஸ்லிம் சமூகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி எந்த உதவியும் செய்யவில்லை. முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர கவனம் செலுத்தவில்லை. வேலை எதுவும் இல்லாததால், முஸ்லிம்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். முஸ்லிம்கள் ஏன் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்ற கேள்விக்கு வேலை இல்லாததுதான் காரணம்.

முஸ்லிம்களுக்கு பிரதமர் மோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருந்தால், அவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இவ்வாறு ஆசம் கான் பேசினார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், உ.பி. பாஜக பொதுச் செயலாளர் விஜய் பகதுார் பதக் நேற்று கூறும்போது, ‘‘நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று 2 ஆண்டுகள்தான் ஆகின்றன. இதை ஆசம் கான் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இன்னும் ஏன் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வியை, அவர் காங்கிரஸ் கட்சியிடம் கேட்க வேண்டும். ஏனெனில், கடந்த காலங்களிலும் இந்த தேர்தலிலும் காங்கிரஸுடன்தான் சமாஜ்வாதி ஒட்டி உறவாடி வருகிறது’’ என்று பதில் அளித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x