Last Updated : 10 Dec, 2015 02:57 PM

 

Published : 10 Dec 2015 02:57 PM
Last Updated : 10 Dec 2015 02:57 PM

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு: சல்மான் கானை விடுவித்தது உயர் நீதிமன்றம்

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஒருவர் உயிரிழக் கவும், நான்குபேர் பலத்த காயமடையவும் காரணமாக இருந்தார் எனக் கூறி தொடரப் பட்ட வழக்கில் சல்மான் கானை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதன்மூலம் விசாரணை நீதிமன்றம் அளித்த 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரி அருகே, சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான் கானின் கார் மோதியது. இதில், நூருல்லா மெஹபூப் ஷெரீப் என்பவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

காரை சல்மான் கான் குடிபோதையில் ஓட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 13 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக் கில் மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில், "சல்மான் கான் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள் ளன. கார் ஓட்டிய போது அவர் மது அருந்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. மது அருந்தியதால் அலட்சியமாக கார் ஓட்டியுள்ளார். மேலும், அவரிடம் ஓட்டுநர் உரிமமும் இல்லை. இதன் மூலம் அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது” எனக் கூறி அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டது.

முன்னதாக, சல்மான் கானின் டிரைவர் அசோக் சிங் தான்தான் விபத்து ஏற்படுத்தியதாக கடந்த ஏப்ரல் மாதம் கூறினார்.

இதனிடையே, உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி நேற்று வழங்கிய தீர்ப்பில், “சல்மான் கானின் மேல்முறையீடு ஏற்கப்படுகிறது. சல்மான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. வலுவான சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே ஒருவரை குற்றவாளி என அறிவித்துவிட முடியாது. சல்மான் கான் குற்றம் செய்ததற்கான உறுதியான ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே அவரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது” எனக் கூறினார்.

கண்கலங்கிய சல்மான்

வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்ததைக் கேட்ட சல்மான் கான் கண் கலங்கினார்.

முன்னதாக, கர்ஜத் அருகே படப்பிடிப்பில் இருந்த சல்மான் கான், பாதியில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தனக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு சல்மான் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x