Last Updated : 25 Apr, 2015 09:24 AM

 

Published : 25 Apr 2015 09:24 AM
Last Updated : 25 Apr 2015 09:24 AM

வயர்லெஸ் கருவியை தவறாக பயன்படுத்தியதாக கேஜ்ரிவால் கார் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

அவசரத் தேவைக்காக தரப்பட்ட வயர்லெஸ் கருவியை தவறாகப் பயன்படுத்தியதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கார் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு முதல்வர் அலுவலகத்துக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கார் ஓட்டுநராக இருப்பவர் ஜே.கே.வஷிஷ்ட். முதல்வர் படையின் அங்கமான இவருக்கு அவசரத் தேவைக்காக மாநில அரசு சார்பில் வயர்லெஸ் கருவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வஷிஷ்ட் இந்த வயர்லெஸ் கருவி மூலம், “முதல்வரின் கூட்டங்களில் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டாம்” என்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு உத்தரவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

காவல் துறைக்கு வஷிஷ்ட் இவ்வாறு உத்தரவிட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி முதல்வர் அலுவலகத்துக்கு டெல்லி காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வயர்லெஸ் கருவியில் வஷிஷ்ட் அளித்த தகவலின் ஒலிநாடா பதிவு உட்பட முழு சம்பவம் குறித்து அறிக்கை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பவும் டெல்லி காவல்துறை திட்டமிட்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை டெல்லியின் எல்லைப்புறத்தில் உள்ள பவானா எனும் இடத்தில் நடைபெறும் ஒரு விழாவுக்குச் செல்ல கேஜ்ரிவால் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, காலை 10.38 மணிக்கு டெல்லியில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் படையிடம் இருந்து ஒரு அவசர செய்தி வந்தது.

“நகரில் நடைபெறும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் முதல்வரின் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை அனுமதிக்கக் கூடாது. இதனை சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் முழுபொறுப்புடன் செயல்படுத்த வேண்டும்” என முதல்வருக்கான ரகசிய எண்ணுடன் கூடிய வயர்லெஸ் கருவி மூலம் இந்த உத்தரவு வந்தது. இந்த தகவல் அடுத்த அரைமணி நேரத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “முதல்வர் தாம் கலந்துகொள்ள வேண்டிய பவானா நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை தவிர்க்க விரும்பினார். இதை தகவலாக அப்பகுதி போலீஸாருக்கு அனுப்பும்படி தன் தனிச்செயலாளர் மற்றும் அரசியல் ஆலோசகரான பிபவ் குமாரிடம் கூறியுள்ளார். பிபவ் குமார் இதை ஓட்டுநர் வஷிஷ்டிடம் அவரது வயர்லெஸ் மூலமாக தலைமைச் செயலக கட்டுப்பாட்டு அறைக்கு கூறிவிடும்படி தெரிவித்துள்ளார்.

வஷிஷ்ட் அதை தவறாகப் புரிந்துகொண்டு, அனைத்து மாவட்டங்களின் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அனுப்பி விட்டார். தலைமைச் செயலக கட்டுப்பாட்டு அறையில் இருந்துதான் பிற கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் அனுப்பவேண்டும். மேலும் இத்தகவலை அனுப்புவதா வேண்டாமா என காவல்துறை உதவி ஆணையர் அந்தஸ்து அதிகாரிதான் முடிவு செய்யவேண்டும். இந்நிலையில் வஷிஷ்ட் இவ்வாறு செய்தது அதிகாரத்தை மீறிய செயல்” என்றனர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியினரிடம் கேட்டபோது அதிகாரப்பூர்வமாக பேச மறுத்தனர். வஷிஷ்ட் அனுப்பிய தகவலை, டெல்லி தலைமைச் செயலக காவல்துறை அதிகாரிகள் தடுத்திருக்க முடியும் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் கருதுகிறது. தங்கள் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு காரணம் எனவும் அக்கட்சி வட்டாரம் குற்றம் சுமத்துகிறது. இந்தப் பிரச்சினையால் டெல்லி அரசு மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான மோதல் வலுக்கும் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x