Last Updated : 25 Oct, 2014 07:02 PM

 

Published : 25 Oct 2014 07:02 PM
Last Updated : 25 Oct 2014 07:02 PM

ரூ.80,000 கோடிக்கான பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

ரூ.80,000 கோடி மதிப்பு கொண்ட பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.50,000 கோடி மதிப்புள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பீரங்கியைத் தாக்கும் இஸ்ரேலிய ஏவுகணைகள் 8,000, மற்றும் தொழில் நுட்ப ரீதியாக மேம்பாடு செய்யப்பட்ட டோர்னியர் கண்காணிப்பு விமானங்கள் 12 ஆகியவற்றை வாங்கவும் இந்தத் திட்டத்தின் கீழ் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக இந்தியக் கப்பற்படையின் மேம்பாடுகள் முக்கியத்துவம் பெற்றன.

முக்கியமாக, இந்தியாவிலேயே 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க எடுக்கப்பட்ட முடிவு பெரியதாகக் கருதப்படுகிறது.

அடுத்ததாக, 8,356 பீரங்கித் தாக்குதல் ஏவுகணைகளை ரூ.3,200 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவெடுக்கப்பட்டது. யு.எஸ். ஜாவ்லின் ஏவுகணைக்குப் பதிலாக இஸ்ரேல் ஏவுகணைகளை வாங்க முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஏவுகணைகளைச் செலுத்தும் 321 லாஞ்சர்ஸ்களையும் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எச்.ஏ.எல். நிறுவனத்திடமிருந்து ரூ.1,850 கோடி ரூபாய் மதிப்புள்ள டோர்னியர் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு விமானங்களை வாங்கவும் முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

362 இன்ஃபாண்ட்ரி போர் வாகனங்களை மேடக்கில் உள்ள துப்பாக்கித் தொழிற்சலையிலிருந்து வாங்க ரூ.662 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கப்பற்படையில் தற்போது 13 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. 1999-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி 2030ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 30-ஆக உயர்த்தப்பட வேண்டும்.

தேசப் பாதுகாப்பே அரசின் முக்கியத்துவம்:

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே அருண் ஜேட்லி பேசும்போது, " தேசப்பாதுகாப்பே இந்த அரசின் பிரதானம், இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளையும் சிக்கல்களையும் அடையாளம் கண்டு அவற்றை தீர்ப்பது அவசியம்." என்றார்.

நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் புதிய முயற்சிக்கு இங்கு இருக்கும் திறனுள்ள துறைமுகங்களை அடையாளம் காண சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x