Last Updated : 31 Aug, 2016 06:43 PM

 

Published : 31 Aug 2016 06:43 PM
Last Updated : 31 Aug 2016 06:43 PM

ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார்: ஹரியாணா அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

வர்த்தக வளாகங்கள் கட்டுவதற்கு ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததில் நடந்த முறைகேடுகள் குறித்த தனது அறிக்கையை விசாரணை கமிஷன் தலைவர் திங்ரா ஹரியாணா அரசிடம் சமர்ப்பித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா. இவரது கணவர் ராபர்ட் வதேரா. இவர் ஹரியாணா, டெல்லி, ராஜஸ்தான், மாநிலங்களில் பல இடங்களில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி உள்ளார். அந்த இடங்களில் வர்த்தக வளாகங்கள் கட்டி விற்றுள்ளார். மேலும், பல நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் விலைக்கு விற்றுள்ளார்.

இந்த நில பேரங்களில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையில் ஹரியாணா அரசு கமிஷன் அமைத்தது.

கடந்த ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட இந்த கமிஷன் வதேராவின் நிறுவனம் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் வர்த்தக வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில், தனது விசாரணை அறிக்கையை ஹரியாணா அரசிடம் நீதிபதி திங்ரா நேற்று சமர்ப்பித்தார்.

அதில், 6 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக குர்காவ்ன் செக்டார் 83-ல் வர்த்தக வளாகங்கள் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் திங்ரா கூறும்போது, ‘‘நில ஒதுக்கீட்டில் நடந்த பல்வேறு முறைகேடுகள், அதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளேன். அதுபற்றிய விவரங்களை இப்போது வெளியிட முடியாது. ஹரியாணா அரசு வெளியிடும் போது தெரிய வரும்’’ என்றார். கமிஷனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகும்படி ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை
இதற்கிடையில், ‘‘அரசியல் பழி வாங்கும் நோக்கில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது’’ என்று வதேரா குற்றம் சாட்டி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x