Last Updated : 22 May, 2015 09:17 PM

 

Published : 22 May 2015 09:17 PM
Last Updated : 22 May 2015 09:17 PM

மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றம் அல்ல: கேரள உயர் நீதிமன்றம்

"ஆகையால், மாவோயிஸ்ட் என்பதற்காகவே போலீஸ் ஒருவரைக் கைது செய்து விட முடியாது. அதாவது, அவரது நடவடிக்கைகள் சட்டவிரோதமாக உள்ளது என்பது பற்றி போலீஸ் ஒரு குறிப்பிடத்தகுந்த காரணங்களை முன்வைப்பது அவசியம்” என்று கேரளா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஷியாம் பாலகிருஷ்ணன் என்பவரை கேரள சிறப்புக் காவல்துறையினர் மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி முகமது முஷ்டாக் கூறியதாவது:

மாவோயிஸ்ட்களில் அரசியல் கருத்தியல் நமது அரசியல் சாசன விதிமுறைகளுடன் ஒத்துப்போவதாக இல்லாவிட்டாலும் மாவோயிஸ்டாக இருப்பது குற்றம் அல்ல, மானுட விருப்பங்கள் குறித்து சிந்திப்பது மனித உரிமை.

தனிநபர் அல்லது அமைப்பு வன்முறையில் ஈடுபடுவது அல்லது வன்முறையை ஆதரிக்கிறது எனும் போது சட்டம் அவருக்கு எதிராகவோ அந்த அமைப்புக்கு எதிராகவோ நடவடிக்கை எடுக்கலாம்.

தனிநபர் சார்ந்த சிந்தனைகள் அல்லது கருத்துக்கள் சட்ட விதிமுறைகளின் படி பொதுமதிப்புகளுக்கு எதிராக செயல்படும் போது அந்த நடவடிக்கைகள் சட்ட விரோதம் என்று தீர்மானிக்கப்படலாம்.

எனவே, ஒருவர் மாவோயிஸ்ட் என்ற காரணத்தினாலேயே போலீஸ் அவரைக் கைது செய்ய முடியாது. அவரது நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என்று போலீஸ் நிரூபிக்க வேண்டியதுள்ளது” என்று இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட ஷியாம் பாலகிருஷ்ணனுக்கு 2 மாதங்களுக்குள் ரூ.1 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும், மேலும் இந்த வழக்கு தொடர்பான செலவாக ரூ.10,000 மாநில அரசு இழப்பீடு தொகையுடன் கொடுக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் மனுதாரர் போலீஸார் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கக்கோரியதையும் கோர்ட் நிராகரித்தது. சட்டம் தண்டிக்கக் கூடிய செயல்களில் அவர் ஈடுபட்டதாக அவரைக் கைது செய்யவில்லை என்பதைக் கூறிய கோர்ட், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது அவரது சுதந்திரத்திற்கு தடுப்பணை போடும் செயல் என்று கண்டித்துள்ளது.

அவர் மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

“மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையாக போலீஸின் இத்தகைய செயல்களை மாநில அரசு கண்மூடித் தனமாக ஆதரித்துள்ளது. ஒரு தனி நபரின் சுதந்திரம் என்பது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் காக்கப்படுவது அவசியம். காவல்துறையினர் இந்த விவகாரங்களில் கவனமாக இருந்திருக்க வேண்டும், தங்களுக்கு கொடுத்த அதிகாரத்தை பிரயோகிக்கும் போது உளவுத்துறையை நாடியிருக்க வேண்டும்.

இதனைச் செயல்படுத்தும் போது தவறு நிகழ்ந்தால் அதாவது தெரியாமல் தவறு நிகழ்ந்தால் கூட அதனை ஏற்றுக் கொண்டு ஒரு குடிமகனுக்கு கவுரவம் செய்வதன் மூலம் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று நீதிபதி மாநில அரசுக்கும், போலீஸ் துறைக்கும் அறிவுரை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x