Published : 24 Apr 2015 08:31 PM
Last Updated : 24 Apr 2015 08:31 PM

மாநிலங்களவையில் நிறைவேறியது திருநங்கைகள் மசோதா: திருச்சி சிவா முயற்சிக்கு திமுக பாராட்டு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த திருநங்கைகள் உரிமை மசோதா வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க வகை செய்யும் இந்தத் தனிநபர் மசோதா நிறைவேறியது, மிக அரிதான ஒன்று என்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் குறிப்பிட்டார்.

திருச்சி சிவாவின் இந்த முயற்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளுக்கு தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க வகை செய்யும் 'திருநங்கைகள் உரிமை மசோதா 2014' என்ற மசோதாவை மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்தார்.

அப்போது அவர் பேசும்போது, "அனைவருக்கும் மனித உரிமை பற்றி பேசுகிறோம். ஆனால், சிலர் புறக்கணக்கப்படுகின்றனர். பாலின அடையாளம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் மனித உரிமைகள் உள்ளன. வாழ்வின் அனைத்து பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்து பாதுகாத்து சமமான சமுதாயம் ஏற்படுத்துவதற்கான சட்டம் ஏற்படுத்த நான் தாக்கல் செய்த மசோதா வழிசெய்யும்.

திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 29 நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டும் இல்லை" என்றார் திருச்சி சிவா.

இந்த மசோதா பற்றி குறிப்பிட்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி, திருநங்கைகளுக்கான உரிமைகள் விஷயத்தில் அனைவரும் ஆதரவாக இருப்பதால், அவை பிரிந்து நிற்பது சரியானதாக இருக்காது என்றார்.

பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அப்போது அவையில் இல்லை.

19 மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் வந்திருந்த நிலையில் மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.

45 ஆண்டுகளில் முதல் முறை...

உச்ச நீதிமன்றம் (கிரிமினல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துதல்) தொடர்பாக 1970-ம் ஆண்டு தான் ஒரு தனிநபர் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் 45 ஆண்டுகளில் இப்போது ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் பெருமிதம்:

திமுக பொருளாளர் ஸ்டாலின் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தனி நபர் தீர்மானம் மூலம் கொண்டு வந்த "திருநங்கையர்களின் உரிமைகள் தொடர்பான மசோதா 2014" மாநிலங்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்நாள் வரலாற்றில் மிக முக்கிய நாள்.

கடந்த 45 வருடங்களுக்குப் பிறகு தனி நபர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று இப்படி நிறைவேற்றப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை.

வேறுபட்ட அரசியல் நிலவும் இந்த சூழ்நிலையில், இது போன்ற முக்கியமான மசோதாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதுடன் செயல்பட்டிருப்பது இதயத்திற்கு இனிமையான செய்தியாக அமைந்திருக்கிறது.

திருநங்கையரின் முன்னேற்றத் திட்டங்களுக்கு தேசிய அளவிலான கொள்கை உருவாக்கவும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கவும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா பெரிதும் உறுதுணையாக இருக்கும். அவர்களின் நல் வாழ்விற்காகவும், இந்த சமுதாயத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கும் திமுக என்றும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இவர்களுக்கு திருநங்கைகள் என பெயர் சூட்டி, வாரியம் அமைத்து, தொழில் துவங்க வழி வகுத்து, பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்ற காரணமாக இருந்தது தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே வேளையில், இது மக்களவையிலும் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே, திமுக உறுப்பினர் திருச்சி சிவாவின் முயற்சிக்கு, நாடு முழுவதுமுள்ள திருநங்கைகள் அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x