Published : 26 Jun 2017 01:03 PM
Last Updated : 26 Jun 2017 01:03 PM

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்: குற்றவாளி ப்ளாக்மெயில் செய்ததாக நடிகர் திலீப் புகார்

கொச்சியில் மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த இரண்டு மாதங்கள் கழித்து புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் நாதிர்ஷா ஆகியோர், வழக்கின் முதல் குற்றவாளியான பல்ஸர் சுனி என்கிற சுனில் குமார் சுரேந்திரன் தங்களை பணம் கேட்டு மிரட்டியதாக புகாரளித்துள்ளனர்.

நடிகர் திலீப் ஏற்கனவே இதுகுறித்து ஏப்ரல் 20 அன்றே மாநில போலீஸ் தலைவர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதில், விஷ்ணு என்பவர் நாதிர்ஷா மற்றும் திலீபின் நண்பர் அப்புன்னியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதில் இவர்களை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தாமல் இருந்ததற்கு ரூ.1.5 கோடி கேட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய நாதிர்ஷா, ”தொலைபேசியில் அழைத்தவர் தன்னை பல்ஸர் சுனி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மலையாள திரையுலகில் பலர், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை சம்பந்தப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றார்.

துறையில் சிலர் பெயர்களையும் கூறினார். அவர்கள் திலீபின் பெயரைச் சொல்ல சுனியை வற்புறுத்தினர் என்றார். இதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும் பணம் கேட்டு மிரட்டியதற்காக போலீஸ் புகார் அளித்துள்ளாம்” என்றார்.

இந்த தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு ஆதாரத்தோடு நடிகர் திலீப் வழக்கு பதிவு செய்துள்ளார். "விசாரணைக் குழு மேலும் சில விவரங்களைத் தேடி வருகிறது. இந்த புகாரின் நம்பகத்தன்மையை குழு சரிபார்க்கும்" என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த ஒலிப்பதிவு தடயவியல் ஆய்வுக்கு சென்று, பேசியவரின் குரல் ஒத்துப் போகிறதா என்று சரிபார்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், போலீஸ் குழு ஏற்கனவே விஷ்ணுவை விசாரித்து வருவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

காக்கநாடு மாவட்ட சிறை அதிகாரிகள், சுனியும் விஷ்ணுவும் ஒரே அறையில் சிறைபடுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர். விஷ்ணு ஒரு செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். தனது சிறைவாசத்தை முடித்து விஷ்ணு விடுதலையானார். அதுவரை சுனியுடன் சில வாரங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்துள்ளார்.

திலீபின் ஃபேஸ்புக்பதிவு

இந்த சர்ச்சை குறித்து நடிகர் திலீப் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், "அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றே விரும்புவேன். ஆனால் எனது புகழைக் கெடுக்க சில இணைய ஊடகங்களும், சமூக வலைதள குழுமங்களும் முயன்று வருகின்றன. சில டிவி சேனல்களின் மாலை நேர விவாதங்களின் நொக்கமும் எனது நற்பெயருக்கு களங்க விளைவிப்பதே. என்னை குறிவைப்பவர்களுக்கு நான் சொல்ல ஒரே விஷயம் தான் இருக்கிறது. நான் எந்த சோதனைக்கும் தயார். யாரையும் இந்த வழக்கில் சம்பந்தப்படுத்த அல்ல, நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திலீப், தனது பெயர் இந்த வழக்கில், சில ஊடகங்களால் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தப்படுவதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x