Last Updated : 17 Apr, 2015 04:52 PM

 

Published : 17 Apr 2015 04:52 PM
Last Updated : 17 Apr 2015 04:52 PM

மத்திய அரசுடனான இடைவெளியை குறைக்க விரும்புகிறேன்: ரகுராம் ராஜன்

வாஷிங்டனில் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்திய பொருளாதாரம், சீனாவை விஞ்சும் இந்தியா போன்ற கருத்துகள் பற்றி விரிவாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்...

மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே சில விவகாரங்கள் உள்ளன. அதற்காக ஒருவரை ஒருவர் அணுகி வருகிறோம் என்று கூறிய ரகுராம் ராஜன், பொதுக்கடன் மேலாண்மை ஆணையம் (PDMA) என்ற விவகாரத்தில் மோடி அரசுடன் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக சூசகமாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு வாங்கும் கடன்களை நிர்வகிப்பதில் மத்திய ரிசர்வ் வங்கியின் பங்கை குறைத்து பொதுக்கடன் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்த முயற்சி செய்வது பற்றி ஏற்கெனவே ரகுராம் ராஜன் தனது விமர்சனங்களை பல்வேறு அரங்கில் சூசகமாகத் தெரிவித்து வந்தார்.

நேர்காணலிலிருந்து சில பகுதிகள்...

சீனாவின் வளர்ச்சியை இந்தியா கடந்து விடும் என்று ஐ.எம்.எப். தெரிவித்ததையடுத்து நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. சீனா போன்று வளர்ச்சியை இந்தியா அடையுமா?

நாம் கொஞ்சம் எதிர்பார்ப்புகளையும், உற்சாகத்தையும் தணிப்போம். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சீனாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 மடங்கு அதிகம். ஆனால் நாடுகள் செல்வம் கொழிக்கத் தொடங்கிய பிறகே வளர்ச்சியில் சற்றே பின் தங்கிவிடும். ஆனால் ஐ.எம்.எஃப் கூறுவதை ஆமோதிக்கிறேன், வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். கடந்த காலங்களில் சீனா கண்ட வளர்ச்சியை பார்க்கும் போது இந்தியா அதனை பிடிக்க கடினமாகவே இருந்தது. ஆனால் இப்போது செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பயணத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம், நீண்ட நாட்களுக்கு இந்த வளர்ச்சி பாதை நீடிக்கும் என்று நம்புவோமாக. சீனாவை விட நம் நாடு ஏழை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இப்போதைய வளர்ச்சி விகிதத்தில் நாம் வளர்ச்சியடைய முடியாது. ஆனால் பெரிய அளவிலான கொள்கை வகுத்தல் மூலமும், வளர்ச்சியின் பாதையில் இருக்கும் தடைகளை அகற்றுவதன் மூலமும் வளர்ச்சியை நீடித்து இருக்கச் செய்ய முடியும்.

வளர்ச்சி விவகாரத்தில் மோசமான விஷயம் என்னவெனில் கிடுகிடுவென குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்டு அதன் பிறகு தேக்கமடைவதே. அரசு நீண்ட கால வளர்ச்சிக்காக திட்டங்களை வகுத்து வருகிறது. நிச்சயம் ஆர்பிஐ உதவி செய்ய முயற்சி செய்கிறது.

பொதுக்கடன் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் இடர்பாடுகள் என்ன? குறிப்பாக அரசு கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விலகாத ஒரு அமைப்பாக அது இருந்தால் அதன் விளைவுகள் என்ன?

பல நாடுகளை எடுத்துக் கொண்டால் பொதுக்கடன் மேலாண்மை ஆணையமாக மத்திய வங்கி செயல்படுவது பற்றி கவலைகள் உள்ளன. அரசு கடன்களின் மீது பிடிமானம் இருக்கும். அல்லது அரசு கடன்களின் மீதான செலவுகளை குறைக்க நிதிக்கொள்கையை செயல்படுத்துவோம். அரசின் இத்தகைய கவலைகளில் அர்த்தமில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் கவலைகள் ஊதிப்பெருக்கப் படுகின்றன.

உதாரணமாக, ஆர்.பி.ஐ.-யை நான் பார்த்தவரையில், பணவீக்கம் என்ற ஒரு விவகாரம் தவிர மற்ற விவகாரங்களுக்காக நிதிக்கொள்கையை ஆர்.பி.ஐ. மாற்றியதில்லை. இந்த முரண்கள்... அல்லது இத்தகைய முரண்கள் பற்றிய பார்வை இருக்குமேயானால் பொதுக்கடன் மேலாண்மை ஆணையம் போன்ற தனிப்பட்ட அமைப்பை உருவாக்குவதில் ஒரு தர்க்கம் உள்ளது. ஆனால், இந்த அமைப்பும் அரசுக்கு நெருக்கமாக இருந்தால்...நாம் இன்னொன்றையும் கவனத்தில் கொள்வது அவசியம், இன்றைய பொருளாதாரத்தில் அரசு ஏகப்பட்ட அமைப்புகளை, நிறுவனங்களை தன் வசம் வைத்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள், எல்.ஐ.சி. என்று அரசுக்கு ஏகப்பட்ட பொறுப்புகள் உள்ளன. எனவே ஆர்.பி.ஐ.யில் உள்ள முரண் அரசுடன் நெருங்கிய தொடர்புடைய இத்தகைய அமைப்புகளுக்கும் மாற்றப்பட்டு விடக்கூடாது. (அதாவது, அது அதற்கென்று தனிப்பட்ட கொள்கைகள் உள்ளன, ஆர்.பி.ஐ. கட்டுப்பாட்டினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அரசு யோசிக்கத் தொடங்கினால். அது பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள், எல்.ஐ.சி. உள்ளிட்ட அமைப்புகளிடத்திலும் காணப்படலாம்.. எனவே அரசின் இதே கொள்கைகள் இத்தகைய நிறுவனங்கள் மீதும் மாற்றப்பட்டால்... என்கிறார் ரகுராம் ராஜன்.)

எனவே ஒரு பொதுக்கடன் மேலாண்மை ஆணையம் உருவாக்கி அதன் பயன்களை முழுதும் அறுவடை செய்ய வேண்டுமெனில், அது தனிப்பட்ட கடன் மேலாண்மை அமைப்பாக இருத்தல் அவசியம். இது கடனை ஒருவரின் கைகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்காது. எனவே முற்றிலும் தொழில்நேர்த்தியுடன் கூடிய ஒரு தனிப்பட்ட அமைப்பு ஆட்சியதிகார நெரிசல் இல்லாத அமைப்பாக இருந்து அரசின் கடன் கடனை நிர்வகித்து, வடிவமைத்து சரியான இடத்தில் நிலைகொள்ளச் செய்யவும் வேண்டும். பல நாடுகளில் இப்படித்தான் உள்ளது. முரண்கள் இருபக்கமும் உள்ளது.

இவ்வாறு தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் பேட்டியில் கூறியுள்ளார் ஆர்.பி.ஐ. ஆளுநர் ரகுராம் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x