Last Updated : 31 Oct, 2014 05:58 PM

 

Published : 31 Oct 2014 05:58 PM
Last Updated : 31 Oct 2014 05:58 PM

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்பு

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றார். பாஜக தலைமையிலான முதல் அரசு அமைந்த இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக சார்பில் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் களம் இறங்கி வெற்றி பெற்ற தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்வராக இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றார்.

இதன் மூலம் மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும் முதல் பாஜக ஆட்சியில் முதல்வர் என்ற பெருமையை தேவேந்திர பட்னாவிஸ் அடைகிறார். அவருக்கு அம்மாநில ஆளுநர் காக்கீதல் சங்கரநாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் எக்நாத் காட்சே, சுதிர் முங்குந்திவர், வினோத் தாவ்டே, சந்திரகாந்த் பாட்டீல், விஷ்னு ஸ்வரா, பிரகாஷ் மேத்தா, பங்கஜா முண்டே ஆகியோர் அமைச்சரவை உறுப்பினர்களாகவும் திலீப் காம்பில், வித்யா தாகூர் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

மும்பையின் வான்கடே மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற இதற்கான விழாவில் சுமார் 3000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

தேவேந்திர பட்னாவிஸ்(44) நாக்பூரில் பிறந்து இளம் வயதிலேயே மேயர் பதவி வகித்து அரசியலில் முன்னேற்றம் கண்டு மகாராஷ்டிர முதல்வராக உயர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிரத்தில் பாஜக-வின் வெற்றிக்கு வித்திட்டதில் பெரும் பங்கு வகித்த பட்னாவிஸ், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் இவரை பிரதமர் நரேந்திர மோடி, “தேவேந்திர பட்னாவிஸ், நாட்டிற்கு நாக்பூர் அளித்த பரிசு” என்று வர்ணித்தார்.

1989-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இளம் வயதிலேயே பட்னாவிஸ் இணைந்தார். 1997-ஆம் ஆண்டு தனது 27-வது வயதில் நாக்பூர் மேயர் பதவியைப் பெற்று இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிறகு 1,999-ஆம் ஆண்டு முதன் முதலாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக 3 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்..

சட்டத்தில் பட்டப்படிப்பும், வர்த்தக மேலாண்மைப் பட்டப்படிப்பும் கொண்டுள்ள பட்னாவிஸ் பொருளாதாரம் பற்றி 2 நூல்களை எழுதியுள்ளார்.

உத்தவ் தாக்கரே பங்கேற்றார்

இதனிடையே இந்த விழாவை சிவசேனா புறக்கணிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், பாஜக மூத்த தலைவர் நித்தின் கட்காரியின் அழைப்பை ஏற்று அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நித்தின் கட்காரியின் இறுதிக்கட்ட அழைப்பை ஏற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விழாவில் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x