Last Updated : 17 Dec, 2014 03:02 PM

 

Published : 17 Dec 2014 03:02 PM
Last Updated : 17 Dec 2014 03:02 PM

பெஷாவர் தாக்குதல் சம்பவம் எதிரொலி: பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு அறிவுரை - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக் குழந்தைகள் மீதான கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, நம் நாட்டின் அனைத்து மாநிலங் களும் பாதுகாப்பை, குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு நேற்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறும்போது, “இது தொடர்பான அறிவுரை உள்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

பெஷாவர் தாக்குதலை தொடர்ந்து நம் நாட்டில் எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை குறித்த கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். என்றாலும் இந்த அறிவுரை தொடர்பான விவரங் களை அவர் தெரிவிக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி யிலும், பாகிஸ்தானின் பெஷாவரிலும் நடந்த தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து, இந்தியாவில் அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை இரவு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் அபாயம் உள்ள பகுதி களில் பாதுகாப்பை பலப் படுத்த அனைத்து நடவடிக்கை களும் எடுக்க வேண்டும், தேவையான இடங்களில் காவல் துறை அடையாள அணிவகுப்பு நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, இதற்கு முன் கடந்த 2010-ம் நாட்டின் அனைத்து புகழ்பெற்ற பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டது. மும்பை தாக்குதல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பிறகு இந்த அறிவுரை வழங்கப்பட்டது. இப்போது தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளுக் கும் மீண்டும் விதிமுறை களை வழங்கியுள்ளோம்.

தீவிரவாத தாக்குதல் நேரிட்டால் குழந்தைகளை எவ்வாறு பத்திர மாக வெளியேற்றுவது என்பதற் கான திட்டங்களை வகுக்க வேண்டும், குழந்தைகள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்படுவதை எவ்வாறு தடுப்பது, ஆபத்து நேரங் களில் எச்சரிக்கை ஒலி எழுப்புவது, கதவு மற்றும் ‘கேட்’களை மூடுவது என்பது குறித்தெல்லாம் திட்டமிடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

சில பள்ளிகளுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் போலீஸ் மற்றும் நிர்வாகத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று இப்பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி, மும்பையில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள உறைவிடப் பள்ளிகளுக்கு இந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

இதனிடையே டெல்லியில் பல்வேறு பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார் நேற்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, பள்ளிகளுக்கு வெளியே மற்றும் சுற்றுப்புற பகுதியில் ரோந்துப் பணியை உடனடியாக அதிகரிக்க உள்ளோம். இதில் புகழ்பெற்ற பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம். பள்ளி முதல்வர்களுடன் உள்ளூர் காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x