Last Updated : 24 Oct, 2014 10:00 AM

 

Published : 24 Oct 2014 10:00 AM
Last Updated : 24 Oct 2014 10:00 AM

பெங்களூரில் தொடரும் சோக‌ம்: 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பள்ளி ஊழியர் கைது

பெங்களூரில் உள்ள ‘ஆர்க்கிட் இண்டர்நேஷனல்' பள்ளியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிற‌து. இது தொடர்பாக அந்த பள்ளியின் உதவியாளர் குண்டன்னா (45) கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் பள்ளி மாணவிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் படுவதை கண்டித்து பெற்றோர் களும் சமூக நல அமைப்புகளும் மாணவ அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ள‌ன.

பெங்களூரை அடுத்துள்ள ஜாலஹள்ளியில் ‘ஆர்க்கிட் இண்டர்நேஷனல் பள்ளி' இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் 4 வயதான சிறுமி ஒருவர் எல்.கே.ஜி. படித்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி பிற்பகல் வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிய போது அழுதுகொண்டே இருந்துள்ளார்.

மேலும் அச்சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். பாதிக்கப்பட்ட சிறுமியை உயர் சிகிச்சைக்காக ஹெப்பாலில் உள்ள‌ கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜாலஹள்ளி காவல் நிலையத்தில் கடந்த 22-ம் தேதி புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்தவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பெற்றோர் போராட்டம்

இது குறித்த தகவல் பரவிய‌தை அடுத்து ‘ஆர்க்கிட்' பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அந்த பள்ளியின் முன்பு குவிந்தனர். தீபாவளி விடுமுறை காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்தாலும் அதன் வாயிலின் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெங்களூர் மாநகர காவல் ஆணைய‌ர் எம்.என்.ரெட்டி, பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக எம்.என்.ரெட்டி கூறிம்போது, ‘‘பள்ளியில் நடந்திருக்கும் சம்பவம் குறித்து விசாரிக்க உதவி காவல் ஆணையர் சாரா பாத்திமா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டிருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

எனவே பள்ளியிலுள்ள அனைத்து சிசிடிவி கேமராக் களையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இது தொடர் பாக பேசுவதற்கு பள்ளி நிர்வாகம்-பெற்றோர் ஒருங்கி ணைப்புக் குழு அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது''என்றார்.

இதனிடையே வியாழக்கிழமை பள்ளியின் முன்பு இளைஞர் காங்கிரஸாரும் மாணவர் அமைப் புகளை சேர்ந்தவர்களும், பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பள்ளி நிர்வாகத்துக்கும் போலீஸாருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறியதாவது:

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். பள்ளி நிர்வாகங்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அரசின் உத்தரவுகளை அமல்படுத்தாத பள்ளிகளின் மீது க‌டும் நடவடிக்கை எடுக்க‌ப்படும்'' என்றார்.

பள்ளி ஊழியர் கைது

இவ்வழக்கில், ‘ஆர்க்கிட் இண்டர்நேஷனல்' பள்ளியின் அலுவலக உதவியாளர் குன்டண் ணாவுக்கு (45) தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ள‌து. எனவே அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் கண்காணிக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இரையாகும் சிறுமிகள்

பெங்களூரில் கடந்த 4 மாதங்களில் 3 பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக விப்கியார் பள்ளியில் 6 வயது சிறுமியும் அதையடுத்து வேறொரு பள்ளியில் 8 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x