Published : 27 Aug 2014 05:52 PM
Last Updated : 27 Aug 2014 05:52 PM

பிஹார் வெள்ள பாதிப்பின் மறுபக்கம்: பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியை நாடும் அவலம்

பிஹாரில் பல லட்சம் மக்கள் வெள்ளப்பெருக்கால் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அங்கு பெண்களின் நிலை மிகவும் அவலமாக உள்ளது.

பிஹாரின் பாட்னா, கோபால்கஞ்ச், கிழக்கு சம்பாரன், ஷேக்புரா உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளத்தால் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலர் இடமின்றி சாலையோரங்களிலும், கரையோரங்களிலும் முகாமிட்டு தங்களது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் என அனைத்து அவசிய தேவைகளுக்காகவும் அவர்கள் அரசின் உதவியை மட்டுமே நாடி வருகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, இயற்கை உபாதைகளை திறந்த வெளியில், அதுவும் மக்கள் கூடியிருக்கும் இடங்களிலேயே கழிக்கும் அவலம் அங்கு உள்ளது.

இதில், பெண்களின் நிலையில் மிகவும் மோசமானதாக உள்ளது. சுபால் மாவட்டத்தை சேர்ந்த பகவதி தேவி என்பவர் கூறும்போது, "வெள்ளத்தால் கிராமம் முழுவதும் மூழ்கி உள்ளது. இங்கு இருக்கும் கரையோரங்களில் தற்காலிகமாக நாங்கள் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளோம்.

வெள்ளப்பெருக்கு, கிராமங்களிலிருந்து எங்களை துரத்திவிட்டது. அது எங்களது விதி. வெள்ளத்தால் பாதிக்கப்படுவது எங்களுக்கு புதிதல்ல. ஆனால் தற்போது எங்களுக்கு இங்கு மிகப் பெரிய பிரச்சினையே, இயற்கை உபாதைகளை கழிப்பது தான். இதனை எங்களை போன்று சிரமப்படும் பெண்களை தவிர வேறு யாராலும் உணர முடியாது" என்கிறார்.

பாதிக்கப்பட்ட அதே பகுதியை சேர்ந்த 50 வயது மிக்க மல்தி கூறும்போது, "எனக்கு 3 மகள்கள் உள்ளனர். எங்களுக்கு வேறு வழி இல்லை. கண்களை மூடிகொண்டுதான் நாங்கள் அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x