Published : 30 Mar 2015 01:16 PM
Last Updated : 30 Mar 2015 01:16 PM

பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் மாளவியாவுக்கு பாரத ரத்னா: குடும்பத்தினரிடம் வழங்கினார் பிரணாப் முகர்ஜி

விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவரும் கல்வியாளருமான மதன் மோகன் மாளவியாவுக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார். விருதை அவரது குடும்பத்தார் பெற்றுக் கொண்டனர்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தர்பார் அரங்கில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாளவியா வுக்கு மரணத்துக்கு பிந்தைய பாரத ரத்னா விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார். மாளவியா சார்பில் அவரது குடும்பத்தினர் விருதை பெற்றுக் கொண்டனர்.

அத்வானிக்கு பத்ம விபூஷண்

அடுத்தபடியாக, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பஞ்சாப் முதல்வரும் ஷிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கி கவுரவித்தார் பிரணாப் முகர்ஜி.

பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் பத்திரிகை யாளர்களான ஸ்வபன் தாஸ் குப்தா மற்றும் ரஜத் சர்மா, தமிழகத் தைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

இறுதியாக பல்வேறு துறை களில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, எழுத்தாளர்-பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, மருத்துவர் ரந்தீப் குலேரியா, கார்ட்டூனிஸ்ட் பிரான் குமார் சர்மா (மரணத்துக்கு பிந்தைய விருது) ஷட்டில் வீராங்கனை பி.வி.சிந்து, ஹாக்கி வீரர் சர்தாரா சிங் மற்றும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அருணிமா சின்ஹா ஆகியோர் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தமிழகத்தைச் சேர்ந்த கன்னியா குமரி அவசரளா மற்றும் பி.வி.ராஜராமன் ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர்.

வாஜ்பாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 27-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவரது இல்லத் துக்கே சென்று பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார்.

பத்ம விருதுகள் வழங்கும் இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 1861-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்த மாளவியா, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸில் (ஐஎன்சி) சேர்ந்தார். பின்னர் 1909-ம் ஆண்டு முதல் 1918 வரை ஐஎன்சி தலைவராக பொறுப்பு வகித்தார்.

வலதுசாரி அமைப்பான இந்து மகாசபையை நிறுவியவர்களுள் இவரும் ஒருவராக திகழ்ந்தார். சிறந்த கல்வியாளராகவும் விளங் கிய மாளவியா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உருவாக காரணமாக இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x