Last Updated : 27 Oct, 2016 12:08 PM

 

Published : 27 Oct 2016 12:08 PM
Last Updated : 27 Oct 2016 12:08 PM

பணத்துக்காக இந்திய ராணுவ ரகசியங்களை விற்ற 2 பேர் கைது: உளவு பார்த்த பாக். தூதரக அதிகாரி சிக்கினார்

48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர், இந்தியா வில் உளவு பார்த்த குற்றச் சாட்டின் கீழ் தீவிர விசாரணை செய்யப்பட்டார். அவரை 48 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பணத்துக்காக ராணுவ ரகசியங்களை அவருக்கு விற்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் பதான்கோட், உரி ராணுவ முகாம்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியா பாகிஸ்தான் உறவில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணியாற்றுபவர் மெகமூத் அக்தர். இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்காக, இந்தியாவில் தொடர்ந்து உளவு பார்த்து வந்துள்ளார். இந்தியா வின் முக்கிய பகுதிகள், ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங் களை சேகரித்து வந்துள்ளார். இதை யடுத்து அக்தரை இந்திய உளவுத் துறையினர் தொடர்ந்து கண்கா ணித்து வந்தனர். அதில் அவர் உளவு பார்ப்பது உறுதியானது.

இதையடுத்து டெல்லி போலீஸார் உடனடியாக நேற்று அக்தரை கைது செய்தனர். மேலும் ராஜஸ்தானைச் சேர்ந்த மவுலானா ரம்ஸான், சுபாஷ் ஜாங்கீர் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தானில் இருந்தபடியே அக்தரை அடிக்கடி தொடர்பு கொண்டு வந்துள்ளனர். இந்திய ராணுவம் பற்றிய ரகசியங்களை இவர்கள் அக்தருக்கு வழங்கி வந்துள்ளனர்.

மெகமூத் அக்தரிடம், இந்திய ராணுவம் பற்றிய பல ரகசிய ஆவணங்களை கொடுக்கும் போது 2 பேரையும் போலீஸார் கையும் களவுமாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் களின் எண்ணிக்கை, இடங்கள் பற்றிய தகவல்கள், வரைபடங்கள், முக்கிய ஆவணங்களை போலீ ஸார் பறிமுதல் செய்தனர். அதன் பின், அக்தரிடம் போலீஸார் பல மணி நேரம் தீவிரமாக விசாரித்தனர். தூதரக அதிகாரிக்கு உரிய சலுகை, அதிகாரம் அவருக்கு இருப்பதால், விசாரணை முடிந்ததும் அக்தரைப் போலீஸார் விடுவிடுத்தனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் இணை ஆணையர் (குற்றப் பிரிவு) ஆர்.எஸ்.யாதவ் கூறும்போது, ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் மெகமூத் அக்தர் உளவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களாக அவருடைய நடவடிக் கைகளை ரகசியமாக கண்காணித் தோம். உளவு பார்ப்பது உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், அவரை கைது செய்தோம். அத்துடன் ஜோத்பூரை சேர்ந்த சோயிப் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள் ளது. அவரை விரைவில் கைது செய்வோம். உளவு பார்த்தது உறுதி செய்யப்பட்டதால் மெகமூத் அக்தர் 48 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படுவார்’’ என்றார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று கூறும் போது, ‘‘பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித்தை, மத்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் தனது அலுவலகத்துக்கு அழைத்து மெகமூத் அக்தரின் உளவு நடவடிக்கை குறித்து எடுத்து ரைத்தார். அத்துடன் இந்தியாவுக்கு வேண்டப்படாத நபராக அவரை மத்திய அரசு அறிவித்துள்ளது என்று பாஸித்திடம் கூறிவிட்டார்’’ என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் மறுப்பு

டெல்லியில் பாகிஸ்தான் தூதரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறும்போது, ‘‘தூதரக அதிகாரிகளுக்குள்ள அதிகாரங் களை மீறி, மெகமூத் அக்தரை போலீஸார் பலவந்தப்படுத்தி கைது செய்து விசாரணை நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள் அடிப்படை ஆதாரமற் றவை. பொய்யானவை. பாகிஸ் தானுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள இந்தியா முயற்சிக்கிறது.

மேலும் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதை சர்வதேச பார்வையில் இருந்து திசை திருப்பவும், பதற்றத்தை அதிகரிக்கவும் இந்தியா இதுபோல் செயல்படுகிறது’’ என்று கூறி யுள்ளது.

இதற்கிடையில், அக்தர் மீதான குற்றச்சாட்டை பாகிஸ்தான் தூதர் பாஸித் திட்டவட்டமாக மறுத்துள் ளார்.

இளம்பெண்களுக்கு வலை

டெல்லி போலீஸார் மேலும் கூறியதாவது:

பாகிஸ்தான் தூதரகத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மெகமூத் அக்தர் நியமிக் கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ் தானின் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள ககுதா கிராமத்தைச் சேர்ந்த வர். கடந்த 2013-ம் ஆண்டு ஐஎஸ்ஐ.யில் பணியாற்றி உள்ளார். அப்போது 40 பலூச் படைப் பிரிவில் ஹவில்தாராக இருந்துள்ளார்.

விசா பிரிவில் அவர் பணியாற்றியதால், தனக்காக உளவு பார்க்க கூடியவர்கள் யார் என்பதை அவரால் எளிதில் கண்டறிய முடிந் திருக்கிறது. குறிப்பாக ஏழைகள், இளம்பெண்களுக்கு பண ஆசை காட்டி ஐஎஸ்ஐ.க்காக உளவு பார்க்க வைத்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

உதவியவர்கள் யார்?

எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ளவர்களின் உதவியில்லாமல், அக்தர் மற்றும் அவரின் கூட்டாளிகளால் உளவுத் தகவல்களை பெற்றிருக்க முடியாது. எனவே, இவ்விவகாரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பாகிஸ்தான் தூதரகத்திலும், அக்தர் தனி ஆளாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, மேலும் சிலர் இவ்விவகாரத்தில் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x