Published : 20 Oct 2014 06:17 PM
Last Updated : 20 Oct 2014 06:17 PM

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பலி, 10 பேர் படுகாயம்

ஆந்திராவில் முறைகேடாக இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தபல்லி மண்டலம் பாகதிப்ப கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இதில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவும் பகலுமாக பணியாற்றி வந்தனர். சிறுவர்கள் முதல் பெண்கள், ஆண்கள் என கொத்தபல்லி மண்டலத்தை சேர்ந்த பலர் இங்கு பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயங்கர வெடி சத்தத்துடன் தீ 40 அடிக்கும் மேல் கொழுந்து விட்டு எரிந்தது. வெடி சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் போலீஸ், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 8 பேர் பெண்கள் .

இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி உள்ளதால் இவர்களை அடையாளம் காண உதவுமாறு உறவினர்களுக்கு போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் போலீஸாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவ இடத்துக்கு கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் நீது பிராசாத் மற்றும் வருவாய், போலீஸ் துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

காயமடைந்தவர்களை காக்கிநாடா அரசு மருத்துவ மனையில் கொண்டு போய் சேர்ந்தனர். தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். இது தவிர காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கும்படியும், விபத்து குறித்து விசாரணை நடத்தவும் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x