Last Updated : 25 Apr, 2015 12:02 PM

 

Published : 25 Apr 2015 12:02 PM
Last Updated : 25 Apr 2015 12:02 PM

நேபாளத்தில் பூகம்பம்: 918 பேர் பலி; மீட்பு நடவடிக்கை தீவிரம்

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இது காலை 11.44 மணியளவில் நிகழ்ந்தது. இதில் கடைசியாகக் கிடைத்த தகவல்களின் படி 918 பேர் பலியாகியுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்திற்கு இதுவரை 918 பேர் பலியாகியுள்ளனர். 4 நாடுகளில் பலி எண்ணிக்கை விவரமாகும் இது. நேபாளத்தில் மட்டும் 876 பேர் பலியாகியுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 34 பேர் பலியாக திபெத்தில் இருவரும், வங்கதேசத்தில் இருவரும், சீன-நேபாள எல்லையில் 2 சீனர்களும் பலியாகியுள்ளனர். பூகமத்தின் தீவிரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

இரண்டாவது முறையாக 1.30 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவானது.

இந்நிலையில் நேபாள பூகம்பத்தில் 450க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேபாளத்தில் 688 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் காத்மண்டுவில் மட்டும் 181 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 20 பேரும், திபெத்தில் 6 பேரும், வங்கதேசத்தில் 2 பேரும், சீனா-நேபாள எல்லையில் 2 சீனர்கள் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

சாலைகளில் பெருமளவு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டடங்கள் பல முற்றிலும் தரை மட்டமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே நேபாள நிலநடுக்கத்தில் பெருமளவில் உயிரிப்பலி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனால் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியில், இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவானது.

நிலநடுக்கத்தால் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் சேத நிலவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் மாவட்டம், உத்தரப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா, பிஹார், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதியில் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நில நடுக்கம், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பொகாரா எனும் பகுதியில் இருந்து 80 கி.மீ., தொலைவில் பூமிக்கு அடியில் 31 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டரில் 7.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவதாக ஏற்பட்ட நில நடுக்கம் லாம்ஜங்க் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்க எதிரொலி: எவரெஸ்ட் பனிப்பாறைச் சரிவுக்கு 8 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் எவரெஸ்ட் சிகரம் பகுதியில் பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டு அதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் நிறைய பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறைய காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

மலையேறும் வீரர்களுக்கு மிகவும் அபாயகரமான பகுதியாகக் கருதப்படும் கும்பு ஐஸ்ஃபால் மற்றும் அடிவார முகாம் பகுதிக்கு இடையே பனிப்பாறை சரிவு ஏற்பட்டது. இங்குதான் மலையேறும் வீரர்கள் முகாமிடுவது வழக்கம், மிகவும் அபாயகரமான பகுதி, என்று நேபாள் மலையேறு கூட்டமைப்பின் ஆங் ஷெரிங் என்பவர் தெரிவித்தார்.

நேபாள் மலையேறு துறை அதிகாரி ஞானேந்திர ஷ்ரேதா கூறும் போது, “8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எண்ணிக்கையில் வராத பலர் மாயமாகியுள்ளனர். அடிவார முகாமில் 30 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் எவரெஸ்டின் பிற பகுதிகளிலும் கடும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து டென்மார்க்கை சேர்ந்த மலையேறு வீரர் கார்ஸ்டன் லிலிலுண்ட் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: பனிச்சர்வில் பலர் தூக்கி அடிக்கப்பட்டு கால்கல் கைகள் என எலும்பு முறிவு ஏற்பட்டோரை நாங்கள் பார்த்து வருகிறோம். அடிவார முகாம்கள் சில பனிச்சரிவில் அடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

இவரும் பெல்ஜிய சகாவுமான ஜெல் வெய்ட் என்பவரும் 5,000 மீ உயரத்தில் கும்பு ஐஸ்ஃபால் அருகே அடிவார முகாமில் பூகம்ப தருணத்தில் இருந்துள்ளனர்.

நேபாள பாரம்பரியச் சின்னமான 9 அடுக்கு தராஹரா கோபுரம் தரைமட்டம்

நேபாள் நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரியச் சின்னமான 9 அடுக்குகள் கொண்ட தராஹரா கோபுரம் பூகம்பத்தில் தரை மட்டமானது.

சனிக்கிழமை நண்பகல் 11.41 மணியளவில் நேபாளத்தை இமாலயத்தின் மிகப்பெரிய பூகம்பம் புரட்டிப் போட்டது. இதில் நூற்றாண்டுக் கணக்கில் பழைமையான் கோயில்கள் பல இடிந்து விழுந்தன.

குறிப்பாக யுனெஸ்கோ அங்கீகரித்த வரலாற்றுப் பாரம்பரியச் சின்னமான 9 அடுக்குகள் கொண்ட தராஹரா கோபுரம் பூகம்பத்தில் தரைமட்டமானது.

இந்த இடிபாடுகளுக்கு அடியிலும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோபுரம் 1832-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பார்வையாளர்களுக்கு இது திறந்து விடப்பட்டுள்ளது. 8-வது தளத்திலிருந்து பார்க்கக் கூடிய வசதியும் செய்யப்பட்டிருந்தது.

டெல்லி முதல்வர் வேண்டுகோள்:

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ட்விட்டரில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். "நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்பு டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம். அதிகாரிகள் சேத விவரங்களை திரட்டி வருகின்றனர். பொதுமக்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

கொச்சியில் நில அதிர்வு:

கொச்சியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக எர்ணாகுளம் மாவட்ட கூடுதல் நீதிபதி பி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மம்தா பிரார்த்தனை:

நிலநடுக்கம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. நேபாள மக்களின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.



சென்னையிலும் உணரப்பட்டது:

சென்னையில் கோடம்பாக்கம், நந்தனம் போன்ற பகுதிகளில் ஒரு சில வினாடிகளுக்கு நில அதிர்வு ஏற்ப்பட்டது. மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற அச்சத்தில் அலுவலகங்கள், வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் சிறிது நேரம் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினர்.

பிரதமர் ஆதரவுக்கரம்:

நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.

நேபாள விமான நிலையம் மூடல்:

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பூகம்பத்தைத் தொடர்ந்து அங்குள்ள காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து காலை 11.30 மணிக்கு நேபாளத்துக்கு புறப்பட்ட விமானம் திருப்பி வரவழைக்கப்பட்டது.

பிஹாரில் 17 பேர் பலி:

பிஹார் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகினர். மேலும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.

பிஹார் மாநிலத்தில் பாகல்பூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவரும். சீதாமாரி, தார்பாங்கா, வைஷாலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகினர்.

நிலநடுக்கம் ஏற்ப்பட்டதால் தொலைபேசி, மின்சார சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மாநில பேரிடர் மேலாண்மை வாரியச் செயலர் பியாஸ் ஜி கூறும்போது, "பாட்னா, கயா, சீதாமாரி, நாலந்தா, பக்சார், பூர்னியா, பெகுசராய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது" என்றார்.

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்

நிலநடுக்கம் தொடர்பாக பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆந்திராவில் மிதமான நில அதிர்வுகள்:

நேபாள நிலநடுக்க எதிரொலியாக ஆந்திராவின் பல பகுதிகளிலும் மிதமான நில அதிர்வு ஏற்பட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பல இடங்களில் சில வினாடிகளுக்கு பூமி குலுங்கியது. அமலாபுரத்தில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் பொருட்கள் கடுமையாக குலுங்க அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

சிக்கிமில் நிலச்சரிவுகள்:

பூகம்ப விளைவாக சிக்கிம் மாநிலத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ஆனாலும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மங்களூரு, கொல்கத்தா, குஜராத்தில் நில அதிர்வுகள்:

நேபாள பூகம்பத்தின் தாக்கம் காரணமாக மங்களூரு, கொல்கத்தா, குஜராத்தில் சில இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டதில் மக்கள் பீதியடைந்தனர். மேற்கு வங்கத்தில் ஒருவர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளன.

உ.பி.யில் 6 பேர் பலி: நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

நேபாள நிலநடுக்கத்தின் தாக்கமாக உத்திரப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கட்டடம் இடிந்து விழுந்தது மற்றும் சுவர்கள் பல இடிந்தன. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 12 பேர்களுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரில் 8 வயது சிறுமியும் அடங்குவார்.

உயிரழந்தோர் குடும்பத்துக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார். படுகாயமடைந்தோருக்கு ரூ.50,000 தொகையையும், சிறு காயமடைந்தோருக்கு ரூ.20,000 தொகையையும் நிவாரணமாக அறிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x