Last Updated : 21 Aug, 2014 05:33 PM

 

Published : 21 Aug 2014 05:33 PM
Last Updated : 21 Aug 2014 05:33 PM

"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம்

கோவாவில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை அம்மாநில உள்துறை அமைச்சகம் ‘நீக்ரோ’ என்று குறிப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நீக்ரோ என்ற வார்த்தையை ஒருவரைக் குறிக்கப் பயன்படுத்தியது தவறு என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறிய கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் அதன் பிறகு நீக்ரோ என்ற பதத்திற்கு அளித்த விளக்கம் விசித்திரமாக அமைந்துள்ளது.

"நீக்ரோ" என்று குறிப்பிட்டது காவல்துறையில் கிளார்க் ஒருவர். இந்த வார்த்தை எவ்வளவு மோசமானது என்பதை அவர்கள் அறியவில்லை. நீக்ரோ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. கறுப்பரினத்தைச் சேர்ந்த ஒருவரை குறிப்பதாக அது பயன்படுத்தப்படுவது மிகவும் தவறு, அது ஒரு இழிசொல், ஆகவே இந்த வார்த்தை யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். ஆனால் அதன் பிறகு இன்னொரு அர்த்தம் என்று அவர் கூறியது விசித்திரமானது.

“பிரேசிலில் உள்ள அமேசான் பகுதியில் ஓடும் நதியின் பெயர் நீக்ரோ. இது அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் நதி. மிகப்பெரிய நதியின் பெயர் நீக்ரோ. ஆகவே ஒரு நபரைக் குறிப்பதும் இதுவும் ஒன்றல்ல. ஆகவே இதனைத் தன்னிலே பெரிய இழிசொல்லாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்கிறார்.

கைது செய்தது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்காரரை, அவரை நீக்ரோ என்று போலீஸ் பதிவேட்டில் குறித்தாயிற்று. இந்த இடத்தில் அந்த போலீஸ் நதியின் பெயரையா நினைவில் கொள்வார். வார்த்தைப் பிரயோகத்திற்கு அந்தந்த கூற்றிடச் சூழல் உள்ளது.

ஆப்பிரிக்க நபர் ஒருவரைப் பார்த்து நீக்ரோ என்று கூறிவிட்டு, நான் நதியைத்தான் சொன்னேன் என்று கூறினால் அது எவ்வளவு பெரிய நரித்தனம்?

மேலும் ஸ்பானிய மொழியில் ரியோ நீக்ரோ என்று அழைக்கப்படும் அந்த நதியை ஆங்கிலத்தில் கறுப்பு நதி (Black River) என்றே அழைக்கின்றனர். உலகிலேயே மிகப்பெரிய கறுப்பு நீர் நதி என்ற பெயர் பெற்றது அந்த நதி.

நதி ஒன்றின் தன்மையைக் குறிக்க நீக்ரோ என்று பெயரிடப்பட்டுள்ளதன் பின்னணியில் நிறவெறி உள்ளதா என்று பார்க்க வேண்டியக் கட்டாயம் உள்ள நிலையில் நீக்ரோ என்று ஒரு நதி இருப்பதனால் அது கறுப்பு என்று ஒரு இனத்தைக் குறிக்கும் இழிசொல்லாகாது என்ற கோவா முதல்வரின் வாதத்தை என்னவென்று வர்ணிப்பது என்பது புரியவில்லை.

சரி, நவம்பர் 2013ஆம் ஆண்டு, கோவா அமைச்சர் தயானந்த் மந்த்ரேக்கர் நைஜீரியர்களை "கேன்சர்" என்றும் "காட்டு விலங்குகள்" என்றும் வர்ணித்ததற்கு கோவா முதல்வர் என்ன அபத்தக் காரணத்தைக் கூறுவார் என்று யோசிக்கவே வேடிக்கையாக உள்ளது.

கேன்சர் என்பது ஒரு நோயைக் குறிப்பதாகும் எனவே ஒரு தனிப்பட்ட நபருக்காக அது பிரத்யேகமாகப் பயன்படுத்த முடியாது என்றும் ஆகவே கேன்சர் என்ற வார்த்தை தன்னிலே இழிசொல் ஆகாது என்றும் கூறுவாராயிருக்கும்.

மேலும் பிரேசில், போர்ச்சுக்கல் நாட்டின் காலனியாதிக்கத்திலிருந்தது. பிரேசிலுக்கென்று தனிமொழி கிடையாது போர்த்துக்கீசிய மொழிதான் அங்கு பயன்படுத்தப்படுகிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுதுமே ஸ்பானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அவர்களின் பூர்விக மொழி அழிந்து முழுதும் ஸ்பானிய பெயர்களே அங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த காலனிய சக்திகள் நதி, தாவரங்கள், மனிதர்கள் என்று அனைவருக்கும் ஸ்பானிய நாமத்தையே சூட்டியது. இப்படியிருக்கையில் ஒரு நதி அதன் பூர்விக மொழியில் என்னவாக அழைக்கப்பட்டது என்று தெரியாத நிலையில் காலனி சக்திகள் அதன் கறுப்பு நிறத்தைப் பார்த்து நீக்ரோ என்று நதிக்குப் பெயர் சூட்டினால் அது அந்த நதியின் பெயர் ஆகிவிடுமா?

கொஞ்சம் வரலாற்றை அறிந்து கொண்டு பேசுவது எப்போதுமே நல்லது. அதுவும் முதல்வர் பொறுப்பில் உள்ள ஒருவர் இதுபோன்ற அபத்த விளக்கங்கள் கொடுப்பது வேதனையான ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x