Published : 01 Sep 2014 03:11 PM
Last Updated : 01 Sep 2014 03:11 PM

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா?- சிபிஐ-யிடம் விளக்கம் கோரியது டெல்லி நீதிமன்றம்

தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என சிபிஐ-யிடம் டெல்லி சிறப்பு நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள தலாபிரா நிலக்கரிச் சுரங்கத்தை ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், கடந்த வாரம் குமார் மங்கலத்திற்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்வதாக அறிக்கை தாக்கல் செய்தது.

இதனையடுத்து, சிபிஐ அறிக்கை மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, டெல்லி சிறப்பு நீதிமன்றம், சிபிஐ மூன்று விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியது.

அவை: ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என விளக்க வேண்டும். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிற்காக ஏதாவது விதிமுறைகள் தளர்த்தப்பட்டனவா அல்லது புதிதாக ஏதாவது சேர்க்கப்பட்டனவா என தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புதிதாக ஏதாவது மாற்றம் செய்யப்பட்ட பட்சத்தில் அதில் கிரிமினல் செயல்பாடுகள் இருந்தனவா என்பதற்கு விளக்கமளிக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட சிபிஐ விசாரணை அதிகாரி, பிர்லா குழுமத்திற்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவில், 1993 ல்இருந்து 2009 ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும் இதுவரை நிலக்கரி எடுக்காத சுரங்கங்களில் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்கள் குறித்து செப்டம்பர் 1-ல் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x