Published : 18 Oct 2014 10:55 AM
Last Updated : 18 Oct 2014 10:55 AM

நிகழ்நேரப் பதிவு: ஜெ. - பெங்களூர் டூ சென்னை

| நிகழ்நேரப் பதிவு நிறைவுபெற்றது |

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, பெங்களூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை மாலை சென்னை திரும்பினார். இது தொடர்பான மணித்துளிச் செய்திப் பதிவுகள் இதோ...

6.00 PM: விமான நிலையத்தில் இருந்து பொதுமக்கள் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தடைந்தார்.

5.43 PM: கோட்டூர்புரம் விநாயகர் கோயில் வழியாக வந்த ஜெயலலிதாவின் கார் ஒரு சில நொடிகள் கோயில் முன் நிறுத்தப்பட்டது. ஜெயலலிதா காரில் இருந்தவாறே சாமி தரிசனம் செய்து கொண்டார்.

5.25 PM: "ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது போல அதிமுக-வினர் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் உற்சாகமாக கொண்டாடட்டும். உண்மை உச்ச நீதிமன்றத்தின் வழியாக டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகும். அவர் ஜாமீனில் தான் விடுவிக்கப்பட்டுள்ளார்" என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். | படிக்க: >அதிமுக-வின் கொண்டாட்டம் தொடரட்டும்: சுப்பிரமணியன் சுவாமி

5.05 PM: சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு சுமார் 13 கி.மீ. தூரம் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதாவும் தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

5.05 PM: ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

4.40 PM: 21 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை திரும்பும் ஜெயலலிதாவை வரவேற்க விமான நிலையம் முதல் போயஸ் கார்டன் வரை அதிமுகவினர் மனிதச் சங்கிலியாக மழையை பொருட்படுத்தாமலும் காத்திருக்கின்றனர்.

4.15 PM: ஜெயலலிதா தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். எந்தவிதமான விரும்பத்தகாத செயல்களும் நடைபெறவில்லை. எல்லாம் சுமுகமாகச் சென்றது. கடந்த 27-ம் தேதி முதல் காவல்துறை அதிகாரிகள், சிறப்புப் படையினர் என அனைத்துக் காவலர்களும் பொறுமையாகவும் நேர்த்தியாகவும் செயல்பட்டனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என பெங்களூர் ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார். | படிக்க: >27-ம் தேதி முதல் சிறப்பான பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு பாராட்டு: பெங்களூர் ஆணையர் எம்.என்.ரெட்டி

4.10 PM: பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் ஜெயலலிதா.

4.04 PM: பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா கார் மூலம் ஹெ.ஏ.எல் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

3.45 PM: முன்னதாக பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து வெளியேவரும் ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.கள், மேயர்கள் உள்பட 500-க்கு மேற்பட்டோர் சுமார் 4 மணி நேரம் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.

3.25 PM: ஜேமர் கருவிகள் பொருத்தப்பட்ட காரில் ஜெயலலிதா விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

3.24 PM: ஜெயலலிதா, பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து இந்துஸ்தான் ஏரோனாடிகல்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) விமான நிலையத்துக்குச் செல்கிறார். வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

3.16 PM: ஜெயலலிதா 11 பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர சிறையில் இருந்து வெளியேறினார். வழி நெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

3.15 PM: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

3.15 PM: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியேறினார்.

3.10 PM: சிறைத்துறை அதிகாரியிடம் ஜெயலலிதா ஜாமீன் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டதால், அவரை ஜாமீனில் விடுவிக்கும் நடைமுறைகள் தொடங்கின.

2.45 PM: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | படிக்க: >ஜெயலலிதாவுக்கு மீண்டும் இசட் பிளஸ் பாதுகாப்பு: பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

2.44 PM: அதிமுக வழக்கறிஞர்கள் 4 வாகனங்களில் சிறைச்சாலைக்குள் சென்றனர்.

2.40 PM: சிறைத்துறை நடைமுறைகள் முடிந்து ஜெயலலிதா 3.30 மணியளவில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2.38 PM: சரியாக 2.38 மணிக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல் பரப்பன அக்ரஹார சிறைச்சாலை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

2.30 PM: ஜெயலலிதா வரும் போது மேள தாளத்துடன் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் அதிமுகவினர் சென்னை விமான நிலையம் முதல் போயஸ் கார்டன் வரை ஆங்காங்கே திரண்டுள்ளனர்.

2.10 PM: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தபால் ஊழியர் வெங்கடேஷ் என்பவர் தீர்ப்பு நகலை பரப்பன அக்ரஹார சிறைக்கு போலீஸ் வாகனத்தில் எடுத்துச் சென்றார்.

2.05 PM: இதேபோல், அதிமுக எம்.பி.களும், அனைத்து மாநகராட்சி மேயர்களும் சிறை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.

2.00 PM: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பி.பழனியப்பன் உள்பட அனைத்து அமைச்சர்களும் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் ஜெயலலிதா வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

1.40 PM: நீதிபதி கையெழுத்திட்ட தீர்ப்பு நகல் பிற்பகல் 2.30 மணியளவில் பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் சிறைத்துறை நடைமுறைகளை முடித்து ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்படுவார்.

1.32 PM: ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பிறப்பித்த உத்தரவின் நகல், பதிவாளருக்கு கிடைத்தது.

1.20 PM: பரப்பன அக்ரஹார சிறைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. செய்தியாளர்களுக்கு அமைக்கப்பட்ட கூடாரங்கள் சேதமடையும் அளவுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழையைப் பொருட்படுத்தாமலும் அதிமுகவினர் குவிந்துள்ளனர்.

1.10 PM: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் இன்னும் அதிமுக வழக்கறிஞர்களுக்கு கிடைக்கவில்லை. |படிக்க: >தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை: அதிமுக வழக்கறிஞர்கள் காத்திருப்பு

12.55 PM: ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து ஏராளமான அதிமுகவினர் பெங்களூர் விரைந்து வருகின்றனர். வாகனங்கள் அதிக அளவில் வருவதால் பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. | படிக்க: >குவியும் அதிமுகவினர்: பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி

12.50 PM: ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியேறுவதை காண அதிமுகவினர் ஏராளமானோர் குவிந்திருப்பதால், நிலைமையை கருத்தில் கொண்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என எம்.என்.ரெட்டி தெரிவித்தார்.

12.44 PM: சிறை வளாகத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.

12.35 PM: ஜெயலலிதா, பிற்பகல் 3.30 மணிக்கு மேல் சிறையில் இருந்து வெளியேறுமாறு அவரது ஜோதிடர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

12.20 PM: பிற்பகல் 3 மணியளவில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்படுவார்.

12.07 PM: பிற்பகல் 2 மணிக்குள், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற உத்தரவு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்திற்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12.06 PM: இளவரசிக்கு அன்பம்மாள், லோகேஷ் ஆகியோரும், சுதாகரனுக்கு புகழேந்தி, ராஜேந்திரன் ஆகியோரும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

12.05 PM: சசிகலாவுக்கு லட்சுமிபதி, ராஜ் ஆகியோர் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

12.00 PM: ஜெயலலிதாவுக்கு ஜெயபால், குணஜோதி ஆகியோர் தலா ரூ.1 கோடிக்கான சொத்து பத்திரம் வழங்கினர் அதனை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஏற்றுக் கொண்டார்.

11.50 AM: சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

11.48 AM: உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று, ஜெயலலிதாவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி குன்ஹா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

11.40 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமீன் ஆணையை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.

11.30 AM: இன்று பிற்பகல் ஜெயலலிதா சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11.20 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம், ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவின் நகல் அளிக்கப்பட்டது.

11.15 AM: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தமிழகத்தில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்தடைந்தார்.

11.14 AM: பெங்களூர் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

10. 50 AM: பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தைச் சுற்றி அதிமுகவினர் அதிகளவில் திரண்டு வருவதால் ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

10.40 AM: ஜாமீன் சூரிட்டி வழங்க ஒருவருக்கு 2 பேர் வீதம் மொத்தம் 8 பேர் தேவைப்படுவதால் அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னேற்பாடாக மேலும் 8 பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

10. 25 AM: காலை 11 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, நீதிமன்றம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. 20 AM: ஜெயலலிதாவை வரவேற்பதற்காக வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம், பரணிகுமார், பழனிக்குமார்,செல்வக்குமார் ஆகியோர் காலையில் இருந்து காத்திருக்கின்றனர்.

10.15 AM: பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10.10 AM: சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலையாவதை ஒட்டி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் ஏராளமான அதிமுகவினர் இனிப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. படிக்க: >சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்: வழக்கை தாமதிக்கக் கூடாது என நிபந்தனை

இதைய‌டுத்து 21 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு அவர் இன்று ஜாமீனில் விடுதலை ஆகிறார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x