Last Updated : 19 Feb, 2017 12:31 PM

 

Published : 19 Feb 2017 12:31 PM
Last Updated : 19 Feb 2017 12:31 PM

நான்தான் உ.பி.யின் உண்மையான பிள்ளை: மோடி, பிரியங்காவுக்கு மாயாவதி பதிலடி

'நான்தான் உ.பி.யின் உண்மையான பிள்ளை' என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். பிரதமர் நரேந்தர மோடி மற்றும் பிரியங்கா வதேராவிற்கு பதில் அளிக்கும் வகையில் அவர், ஜான்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நேற்று தெரிவித்தார்.

உ.பி.யில் ஏழுகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்டங்களில் உள்ள 69 தொகுதிகளில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மீதம் உள்ள நான்கு கட்டங்களுக்கானப் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இங்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

இதற்கானப் பிரச்சாரத்தில், இருநாட்களுக்கு முன் பாராபங்கியில் பேசிய பிரதமர் நரேந்தர மோடி, தான் உ.பி.யின் தத்துப்பிள்ளை எனக் கூறி இருந்தார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர், உ.பி.யின் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றதால் இவ்வாறு கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் மறுநாள் அமேதியின் காங்கிரஸ் பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா வதேரா, 'உ.பி.க்கு தத்துப்பிள்ளை தேவை இல்லை' எனக் கூறி மோடியை விமர்சித்திருந்தார். இந்த பிரச்சனையில் தன் பங்கிற்கும் நேற்று ஜான்சி பிரச்சாரத்தில் பேசிய மாயாவதி, 'நான் தான் உ.பி.யின் உண்மையான பிள்ளை' எனத் தெரிவித்துள்ளார்.

உ.பி.யின் முன்னாள் முதல்வரான மாயாவதி, அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ்சிங் யாதவையும் கிண்டலடிக்கத் தவறவில்லை. இதில் அவர், 'உ.பி.யின் ஊழல் முதல்வரான அகிலேஷ் தன் இரு மாமன்மார் மற்றும் அத்தையால் பாதுகாக்கப்பட்டு வருகிறார். இந்த மூவரும் தம் குழந்தையை சிறந்த முறையில் கட்டிக் காத்து வருகின்றனர். இதற்கு, நொய்டாவின் பல கோடி நிலம் விற்ற ஊழலில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட பொறியாளர் வழக்கு சாட்சி. இதற்கு முன் அகிலேஷ், காங்கிரஸ் ஆட்சியால் காப்பாற்றப்பட்டு வந்தார்' எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை மாமன்மார் எனவும் குறிப்பிட்ட மாயாவதி அத்தை என்பது யார் என வெளிப்படையாகக் கூறவில்லை. எனினும், அத்தை என அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குறிப்பிட்டதாகக் கூட்டத்தினர் புரிந்து கொண்டனர். இவர்களின் உண்மையான நிலை என்ன என்பதை உ.பி.வாசிகள் அறிவர் எனவும், அதனால் தம் மாநில உண்மை புதல்வியானத் தன்னை ஆசிர்வாதம் செய்துள்ளார்கள் என்றும் மாயாவதி தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்திய மாயாவதி, 'ஜாமியா மில்லியா மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகங்களுக்கான சிறுபான்மை அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்துள்ளது. இத்துடன், முத்தலாக் போன்ற முஸ்லிம் மதத்தின் உள்விவகாரங்களிலும் தலையிடுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசிற்கு எதிரான கொள்கைகளை கொண்டது பகுஜன் சமாஜ் என விளக்கம் அளிக்க விரும்புகிறேன்' எனக் கூறினார்.

உ.பி.யின் பின்தங்கிய பிரதேசமான புன்தில்கண்ட் பகுதிய தான் தனி மாநிலமாக அறிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக் காட்டிய மாயாவதி, அவர் முதல்வராக இருந்த போது 2010-ல் மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். புன் தில்கண்ட் பகுதியின் முக்கிய மாவட்டமாகக் கருதப்படும் ஜான்சி உட்பட 12 மாவட்டங்களின் 53 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக பிப்ரவரி 23-ல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x