Published : 26 May 2016 09:16 PM
Last Updated : 26 May 2016 09:16 PM

நான் பிரதமர் இல்லை; நாட்டின் பிரதான சேவகன்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

அரசு டாக்டர்கள் ஓய்வு வயது 65 - மோடி அறிவிப்பு

*

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நான் பிரதமர் இல்லை. நாட்டின் பிரதான சேவகன். எனது 2 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

எனது ஆட்சியில் மாநில அரசுகளுக்கு 65 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 35 சதவீத நிதியை மட்டுமே பெற்றுள்ளது. இது மிகப்பெரிய சாதனை.

நாடு மாற்றத்தை சந்தித்து வருகிறது. ஆனால் சிலரின் வாழ்க்கையில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அடிப்படை வசதிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

புதிய பள்ளிகள் திறப்பது, மருத்துவமனைகள் கட்டுவது, சாலைகள் அமைப்பது ஆகிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும்.

விவசாயிகளின் பிரச்சினைகளை மத்திய அரசு நன்கு அறிந்து வைத்துள்ளது. அவர்களின் முகத்தில் துயரை துடைக்க உறுதிபூண்டு செயல்படுகிறோம்.



கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை சில சர்க்கரை ஆலைகள் முறையாக வழங்குவது இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. அந்த சர்க்கரை ஆலைகள் உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கவேண்டும். இல்லையெனில் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.



வரும் 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான திட்டங்களை மும்முரமாக செயல்படுத்தி வருகிறோம்.



கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு மீது சிறு ஊழல் புகார்கூட எழவில்லை. எதிர்க்கட்சிகளால்கூட எங்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. எனது அரசில் ஏதாவது ஒரு சிறு தவறு நிகழ்ந்தால் அது தொலைக்காட்சிகளில் 24 மணி நேரமும் விமர்சிக்கப்படுகிறது. இதுபோன்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். அரசின் ஒவ்வொரு நாள் செயல்பாடு, ஒவ்வொரு பைசாவும் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.



சமூகத்தில் பெண்கள் முன்னேறவில்லை என்றால் இந்த நாடு முன்னேறாது. எனவே பெண் குழந்தைகளின் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.



நாடு முழுவதும் டாக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. சில மாநிலங்களில் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 60 ஆகவும் வேறு சில மாநிலங்களில் 62 ஆகவும் உள்ளது. நாட்டில் புதிதாக மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப டாக்டர்களின் எண்ணிக்கை இல்லை. போதிய டாக்டர்கள் இல்லாமல் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது.



எனவே நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு இந்த வாரமே மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்.



ஏழை கர்ப்பிணிகளின் நலனுக்காக இந்திய டாக்டர்கள் ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் ஓராண்டில் 12 நாட்கள் ஏழை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக சிகிச்சை கிடைக்கும்.



நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் சமையல் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்து ஏழைகளின் வீடுகளில் காஸ் அடுப்பை எரியச் செய்துள்ளன. அதேபோல டாக்டர்களும் மாதம் ஒரு நாள் ஏழை கர்ப்பிணிகளுக்கு சேவையாற்ற வேண்டுகிறேன்.



இவ்வாறு பிரதமர் பேசினார்.



மத்திய அரசின் 2 ஆண்டு நிறைவையொட்டி நாடு முழுவதும் 198 நகரங்களில் மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து உரையாற்ற உள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை ஷில்லாங், மே 29-ம் தேதி கர்நாடகாவின் தாவல்கிரி, ஜூன் 2-ம் தேதி ஒடிஷாவின் பலாசூர் நகரங்களில் மோடி பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x