Last Updated : 14 Oct, 2016 01:25 PM

 

Published : 14 Oct 2016 01:25 PM
Last Updated : 14 Oct 2016 01:25 PM

நாட்டிலேயே முதன்முறை: உ.பி.யில் சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக 2 லட்சம் மாணவிகள் நியமனம்

இரண்டு லட்சம் மாணவிகளை 'சிறப்பு போலீஸ் அதிகாரிகள்' என நியமிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக அதற்கான சான்றிதழை, இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் 25 மாணவிகளுக்கு அம்மாநில முதல்வர் அகிலேஷ்சிங் யாதவ் அளிக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் படிப்பறிவு இல்லாத மற்றும் நலிந்த பெண்கள் பிரிவினர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘1090 பெண்கள் சக்தி வரிசை (Women Power Line) எனும் பெயரில் ஒரு திட்டம் அமலாகிறது.

பெண்களை மேம்படுத்தவும், தம்மை சுற்றி நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் இதில் முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம், உபியின் ஏழை மற்றும் நலிந்த பிரிவின் பெண்களுக்கு உதவுவது உத்தரப் பிரதேச அரசின் நோக்கம் ஆகும்.

எப்படி இயங்குவார்கள் இந்த சிறப்பு அதிகாரிகள்?

இதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 'சிறப்பு போலீஸ் அதிகாரிகள்' என தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் தம்மை சுற்றி வாழும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க உதவுவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அளிப்பார்கள். மற்ற சட்டபூர்வ நடவடிக்கைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உ.பி. போலீஸார் உதவுவார்கள்.

முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆளும் உபி அரசின் இந்த முடிவு இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது. தலைநகரான லக்னோவில் இன்று மதியம் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் முதல்கட்டமாக 25 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ்களை உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ்சிங் கலந்துகொண்டு அளிக்க உள்ளார். தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் பயிலும் மாணவிகளில் 2 லட்சம் பேர் படிப்படியாக இக் கவுரவப்பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இப்பணியை அம்மாணவிகள் படித்துக் கொண்டே செய்வது போல் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை கட்டுப்படுத்த உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவது நாட்டின் மாநிலங்களில் முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அடுத்த வருடம் வரவிருக்கும் உபியின் சட்டப்பேரவை தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x