Published : 04 Mar 2015 10:26 AM
Last Updated : 04 Mar 2015 10:26 AM

நாடாளுமன்றத் துளிகள்: விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பு

69 தொண்டு நிறுவனங்களுக்குத் தடை

உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு: வெளிநாடு களிலிருந்து நிதியுதவி பெற 69 தொண்டு நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், ஆந்திரத்தில் 14, தமிழகத்தில் 12, குஜராத் மற்றும் ஒடிஸாவில் தலா 5, உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரளத்தில் தலா 4, டெல்லியில் 3 தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காது கேளாதோருக்கு கல்லூரி

சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் கிருஷ்ணபால் குர்ஜார்: நாட்டின் ஐந்து மண்டலங்களிலும், காது கேளாத மாணவர்களுக்கான கல்லூரிகளை தொடங்கும் திட்டத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஜனவரி 29-ம் தேதி ‘செக்டார்’ திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கும் கல்லூரிகளுக்கு நிதியுதவி அளித்து, தேவையான உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.

விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பு

வேளாண்மைத் துறை இணையமைச்சர் மோகன்பாய் குண்டாரியா: கடந்த 2014-ம் ஆண்டு வேளாண்மை பொய்த்துப் போனதால் 1,109 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது, அதற்கு முந்தைய ஆண்டை விட 26 சதவீதம் அதிகமாகும்.

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 986 விவசாயிகளும், தெலங்கானாவில் 84 விவசாயிகளும், ஜார்க்கண்டில் 29 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு 879 விவசாயிகளும், 2012-ம் ஆண்டு 1,046 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடனைத் திருப்பச் செலுத்த முடியாதது, சாகுபடி ஏமாற்றியது, வறட்சி, சமூக பொருளாதார மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விமான சேவை விதிமுறையில் திருத்தம்

விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு: விமானப் போக்குவரத்துத் துறையில் தற்போதுள்ள 5/20 விதிமுறை மற்றும் வழித்தட பரவல் வழிகாட்டு நெறிமுறைகளை (ஆர்டிஜி-எஸ்) மறுசீராய்வு செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற எளிதில் அணுக இயலாத பகுதிகளுக்கு விமான சேவை கட்டாயம் என்பதுடன், விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வெளிநாடுகளுக்கு இந்திய விமானங்கள் பயணிக்க அனுமதியளிக்கப்படும். 31 விமான நிலையங்களை கடந்த ஓராண்டில் எந்த விமானமும் பயன்படுத்தவில்லை. விதிகளை சீராய்வு செய்வதால் இந்நிலை தவிர்க்கப்படும். இந்த திருத்தங்கள், இந்திய விமான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதுதொடர்பாக விமான நிறுவனங்களின் கருத்துருக்கள் பரிசீலனையில் உள்ளன.

சுகாதார திட்டங்கள் தொடரும்

சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா: மாநிலங்களுக்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சுகாதாரத் திட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. மத்திய அரசு தொடங்கிய சுகாதார திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மருத்துவச் சேவைகளைத் தொடர்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. மருத்துவம் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், அவற்றுக்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரத்துறையின் செயல்பாடு இன்னும் சிறப்பாகவே இருக்கும்.

கண்காணிப்பின் கீழ் 600 சேனல்கள்

தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர்: கடந்த 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மின்னணு ஊடக கண்காணிப்பு மையம் (இஎம்எம்சி), தற்போது 600 வெவ்வேறு தொலைக்காட்சி சேனல்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. நிகழ்ச்சி மற்றும் விளம்பர விதிமுறைகளை மீறியது தொடர்பாக நடப்பாண்டில் மட்டும் 3 விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு விதிமீறல் மீது, ஒரு வாரத்துக்கு சேனலை ஒளிபரப்பத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் பாக். நிறுவனத்துக்கு சொத்து

நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா: ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் அசையா சொத்து வாங்கும்போது ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறுவது கட்டாயம். அவ்வாறு அனுமதி பெறாமல், பாகிஸ்தானைச் சேர்ந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம், டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆறு மனைகள், கார் நிறுத்தங்களை வாங்கியுள்ளது. இது அமலாக்கப்பிரிவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சர்களுடன் சந்திப்பு

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோ வால்: விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இம்மாத இறுதியில் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு சில இடங்களில் மட்டுமே உள்ளது. இத்துறை யில் செய்ய வேண்டியவை ஏராளமாக உள்ளன. திறன்மிகு நகரங்களில், விளையாட்டு உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

ரேஷன் பொருள் வாங்க ஆதார் அட்டை

மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் உரியவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதில் முறைகேடாக வேறு யாரும் பயனடையக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே ரேஷனில் பொருட்கள் வாங்குவோர் விவரத்தை கணினிமயமாக்கி, அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென்று கூறியுள்ளோம்.

எனவே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவோர் தங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக அங்கு பதிவு செய்ய வேண்டியது விரைவில் அவசியமாகும். அப்போதுதான் பொருட்களை வாங்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x