Last Updated : 16 Sep, 2014 10:50 AM

 

Published : 16 Sep 2014 10:50 AM
Last Updated : 16 Sep 2014 10:50 AM

நடிகை மைத்ரி சொல்வதெல்லாம் பொய்: ரயில்வே அமைச்சரின் மகன் கார்த்திக் கவுடா வாக்குமூலம்

தன் மீதான பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக கன்னட திரைப்பட நடிகை மைத்ரி சொல்வதெல்லாம் பொய்யான தகவல் என மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா பெங்களூர் போலீஸாரிடம் விளக்கம் அளித்தார்.

3-ம் நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் 80 முக்கிய கேள்விகளும் 45 துணைக் கேள்விகளும் கேட்கப்பட்டு, விளக்கங்கள் பதிவு செய்யப்பட்டதாக ஆர்.டி.நகர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கார்த்திக் தன்னை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடிகை மைத்ரி புகார் அளித்தார்.

இவ்வழக்கில் முன்ஜாமீன் பெற்ற கார்த்திக் கவுடா, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகி போலீஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதனைத் தொடர்ந்து அவருக்கு அம்பேத்கர் மருத்துவ கல்லூரியில் ரகசியமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

ரகசிய திருமணம் நடக்கவில்லை

இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு கார்த்திக் கவுடா தனது வழக்கறிஞருடன் ஆர்.டி.நகர் காவல் நிலையத் திற்கு வந்தார். அவரிடம் 3-ம் நாளாக பெங்களூர் மாநகர காவல்துறை துணை ஆணையர் ஓம் பிரகாஷ் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அப்போது கார்த்திக் கவுடாவிடம் நடிகை மைத்ரியுடன் நடைபெற்ற ரகசிய திருமணம், தொலைப்பேசி உரையா டல், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், ‘‘நடிகை மைத்ரி கவுடா எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். நான் அவரை நல்ல தோழியாக நினைத்து பழகினேன். ஆனால் அவர் பணத்திற்கு ஆசைப்பட்டு எனது பெயரையும் எனது தந்தையின் (சதானந்த கவுடா) பெயரையும் கெடுத்து விட்டார்.

மைத்ரி கவுடாவை மங்களூரில் உள்ள எனது பண்ணை வீட்டில் ரகசிய திரு மணம் செய்துகொள்ளவில்லை. அவர் திருமணம் நடைபெற்றதாகக் கூறும் ஜூன் 5-ம் தேதி, நான் பெங்களூரில் இருந்தேன்.

நண்பராக இருக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து மைத்ரி தற்போது வழக்கு தொடுத்திருக்கிறார். வீடியோ, ஆடியோ ஆதா ரங்கள் எல்லாம் ஜோடிக் கப்பட்டவை. அவர் சொல்வதெல்லாம் பொய்.

எனக்கும் நடிகை மைத்ரி கவுடாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அவரோடு பேசி 3 மாதங்கள் ஆகி விட்டன. எனக்கு மற்றொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் எனது திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தோடும், பணம் பறிக்கும் நோக்கத்தோடும் புகார் கொடுத் துள்ளார்'' என விளக்கம் அளித்தார்.

மாதத்திற்கு இருமுறை ஆஜர்

இதனைத் தொடர்ந்து தான் பெங்களூர் மாநகர 8-வது அமர்வு நீதிமன்றத்தில் செலுத்திய ரூ.2 லட்சம் பிணைத் தொகைக்கான ஆவணத்தை போலீஸாரிடம் கார்த்திக் சமர்ப்பித்தார்.

மாதந்தோறும் 15 மற்றும் 30-ம் தேதிகளில் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் கார்த்திக் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். கர்நாடகத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x