Published : 17 Sep 2014 10:15 AM
Last Updated : 17 Sep 2014 10:15 AM

தேர்தல்களில் தனித்துப் போட்டியிட முடிவு: கூட்டணியைத் தவிர்க்கிறது பாஜக

இனி வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களில் பாஜக தனித்து போட்டியிட விரும்புவதாககூறப்படுகிறது. இதன் காரணமாகவே அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா புதிய கூட்டணிகளையும் தவிர்த்து வருகிறார்.

நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் 25-க்கும் அதிகமான கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. அதில், தனிப்பெரும் கட்சியாகவே 282 இடங்களில் வெற்றி பெற்றது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாகக் கூறப்பட்ட மோடி அலை உள்ளிட்ட காரணங்கள் தற்போதும் தொடர்வதாக அமித் ஷா கருதுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே, தம்மிடமிருந்து பிரியும் கூட்டணிக் கட்சிகள் பற்றி பாஜக அதிகம் கவலைப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “பாஜகவை நாடுதழுவிய தனிப்பெரும் அரசியல் கட்சியாக மாற்ற அமித் ஷா விரும்புகிறார். மாநிலங்களில் பொதுமக்கள் கூட்டணி ஆட்சியை விரும்புவதில்லை என்பது மற்றொரு காரணம். மிக அவசியம் என்ற பட்சத்தில் சிறிய அளவிலான கூட்டணியை ஏற்படுத்தலாம் என மோடியுடன் சேர்ந்து ஷா முடிவு எடுத்துள்ளார்’’ என்றனர்.

வரும் அக்டோபரில் ஹரியாணா சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்த ஜன்ஹித் காங்கிரஸுடன் தனது உறவை பாஜக முறித்துக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜகவின் நீண்டகால கூட்டணிக் கட்சியான சிவசேனாவுடனான தொகுதிப் பங்கீடுகள் முடிவுக்கு வந்தபாடில்லை.

பஞ்சாபில் பாஜக ஆதரவுடன் ஆட்சி செலுத்தும் சிரோமணி அகாலிதளம், ஹரியாணா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது. மேலும், ஊழல் புகாரில் சிக்கி சிறை சென்ற முன்னாள் முதல் அமைச்சர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சியுடன் சிரோமணி அகாலிதளம் கூட்டணி வைத்துக் கொண்டதை பற்றி பாஜகவும்பெரிய அளவில் கவலைப்படவில்லை.

அதேபோல், வரவிருக்கும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் அம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை தம் கட்சியுடன் பாஜக இணைக்க விரும்புகிறது. இணைப்பு சாத்தியமில்லை என்ற நிலையில், கூட்டணியாக சேர்த்துக் கொள்ளவும் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

பிஹாரில் ஏற்கெனவே இருக்கும் கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்தி மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகியவை சிறிய கட்சிகளாகவே உள்ளன. கடந்த 2004-ல் நடந்த மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் பல சட்டசபைத் தேர்தல்களில் கூட்டணியை முறித்துக்கொண்டு தனியாக போட்டியிட்டது காங்கிரஸ். இதனால், பிஹார் உட்பட சில மாநிலங்களில் வாக்குகள் பிரிந்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x