Last Updated : 20 Oct, 2014 09:49 AM

 

Published : 20 Oct 2014 09:49 AM
Last Updated : 20 Oct 2014 09:49 AM

தேசியவாத காங். உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை: பாஜக

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் நிருபர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிர மக்கள் எந்தவொரு கட்சிக்கும் பெரும் பான்மை பலத்தை அளிக்க வில்லை. இதனால் யாராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது.

இந்த நேரத்தில் மகாராஷ்டிர மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஆட்சி அமைக்கும் திறன் கொண்ட கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.

பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே அந்தக் கட்சி ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். மகாராஷ்டிரத்தில் ஸ்திரமான அரசு அமைய வேண்டும். வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்காகவே பாஜகவை ஆதரிக்க முன்வந்து ள்ளோம் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியபோது, தேசியவாத காங்கிரஸின் ஆதரவு குறித்து பரிசீலிப்போம், இந்த விவகாரத்தில் மாநிலத்தின் நலனுக்கு ஏற்ப முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

கூட்டணி இல்லை: பாஜக

இந்தச் சூழலில், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க கூடுதல் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதாவது: "காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழலை விமர்சித்துத்தான் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தோம்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதுபோன்றதொரு கூட்டணியை அமைத்தால், எங்களுக்கு வாக்களித்தவர்களை அவமதித்தது போலாகும். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான இறுதி முடிவை கட்சி முடிவு செய்யும். தேர்தலில் பிரச்சாரத்தின்போது சிவசேனாவை விமர்சித்து நாங்கள் பேசவில்லை. அக்கட்சியை விமர்சிக்க மாட்டோம் என்பதை தனது பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்" என்றார் பிரகாஷ் ஜவடேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x