Published : 18 Apr 2014 04:16 PM
Last Updated : 18 Apr 2014 04:16 PM

தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி தொடர்கிறது: பாஜக

ஆந்திரத்தில் தேசிய ஜனநாயக அணியில் குழப்பம் நிலவி வந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் இன்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, பாஜக செய்தித் தொடர்பாளரும், ஆந்திர மாநில பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், "தெலுங்கு தேசம் கட்சியுடான எங்கள் கூட்டணி தொடர்கிறது" என்றார்.

ஆந்திரத்தின் சீமாந்திராவில் பாஜகவுக்கு 15 சட்டப்பேரவை தொகுதிகளும், 5 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் பாஜக நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் மீது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி கொண்டுள்ளது.

இதனை பகிரங்கமாகவே தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிரணியினர் பயனடையும் வகையில் சில இடங்களில் பலவீனமான வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தெலுங்கானாவில் மட்டும் பாஜக உடனான கூட்டணி நீடிக்கிறது என்றும், சீமாந்திராவில் கூட்டணி முறிந்துவிட்டது என்றும் சந்திரபாபு நாயுடு மறைமுகமாக தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜக கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்படுவதைத் தடுக்க, ஹைதராபாத் விரைந்த பிரகாஷ் ஜாவடேகர் இன்று சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தெலுங்கு தேசம் கட்சியுன் கூட்டணி தொடர்வதாக பிரகாஷ் ஜவடேகர் கூறினாலும், சந்திரபாபு நாயுடு தரப்பில் இருந்து இன்னும் உறுதியான அறிவிப்பு வராததால், கூட்டணியில் குழப்பம் நீடித்துள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி, பாஜகவில் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த என்.டி.ஆரின் மகளுமான புரந்தேஸ்வரிக்கு ராஜம்பேட்டா தொகுதி ஒதுக்கப்பட்டதுதான் தெலுங்கு தேசம் கட்சியின் அதிருப்திக்கு முக்கியக் காரணம் எனத் தெரிகிறது.

புரந்தேஸ்வரியின் சகோதரியை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்துள்ள போதிலும், இரு குடும்பத்தாரிடையே பிரச்னை நீடிப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x