Last Updated : 24 Jul, 2016 09:11 AM

 

Published : 24 Jul 2016 09:11 AM
Last Updated : 24 Jul 2016 09:11 AM

திரையரங்குகளை முற்றுகையிட்டு கன்னட அமைப்பினர் போராட்டம்: கர்நாடகாவில் ‘கபாலி’க்கு எதிர்ப்பு - ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

கர்நாடகாவில் கபாலி திரைப் படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து, திரையரங்குகளை முற்றுகையிட்டு கன்னட அமைப் பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயல், சிவமொக்கா, மண்டியா, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் வெளியானது.

இந்நிலையில் கபாலி திரைப் படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து கன்னட சலுவளி கட்சி, கன்னட ரக்சன வேதிகே உள்ளிட்ட 15 கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னட சலுவளி கட்சியின் தலைவரும், கன்னட அமைப்பு களின் கூட்டமைப்பு தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடிகர் ரஜினியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இதையடுத்து, சேஷாத்ரி புரத்தில் உள்ள நட்ராஜ் திரையரங்கை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஜினியை கண்டித்து கோஷம் எழுப்பி, அங்கிருந்த பேனர்களை கிழித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள் கன்னட அமைப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸாரும், கன்னட அமைப்பினரும் தாக்கியதில் 30-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தனர்.

இதேபோல பல இடங்களில் உள்ள திரையரங்குகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

வாட்டாள் நாகராஜ், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நடிகர் ரஜினி கர்நாடகாவில் பிறந்தவ‌ராக இருந்தாலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டார். கன்னட மக்களுக்கு துரோகம் இழைத்த ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தை இங்கு திரையிட அனுமதிக்க முடியாது. இந்தத் திரைப்படம் இங்குள்ள 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருப்பதால், கன்னட திரைப்படங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எதற்காக தமிழ் திரைப்படத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்? இதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x