Last Updated : 27 Sep, 2016 04:09 PM

 

Published : 27 Sep 2016 04:09 PM
Last Updated : 27 Sep 2016 04:09 PM

காவிரியில் 6,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்- இரு மாநில முதல்வர்கள் சந்திக்க அறிவுரை

தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் சந்தித்துப் பேச மத்திய அரசு நடவடிக்கை எடுக்க‌ வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 20-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திற‌ந்துவிடவேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு கடந்த 23-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மாற்றங்களைக் கோரி கர்நாடக அரசு புதிய மனுவை தாக்கல் செய்தது. இதற்கு பதிலடியாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத‌ கர்நாடகாவின் மனுவை விசாரிக்கக் கூடாது என கோரியது.

இந்நிலையில் காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதாடியதாவது:

உச்ச நீதிமன்றம் 3 முறை தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு தீர்ப்பை முழுமையாக நிறை வேற்றாமல் இருந்து வருகிறது. கடந்த 23-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டப்பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த கர்நாடக அரசு மீது இந்திய அரசியல மைப்பு சட்டம் 142-ம் பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் முன்வைத்த வாதம் வருமாறு:

கர்நாடக அணைகளில் குடிநீருக்கே போதிய அளவில் நீர் இல்லை. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடிய வில்லை. கர்நாடக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகை யிலேயே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியல் சாசனம் சட்டப் பேரவைக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படியே, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது’’என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இவ்வழக்கில் கர்நாடகா அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக் குரியது. இந்திய கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும் எந்த மாநிலமும் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க முடியாது என கூறமுடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத் துக்கு காவிரி நீரை திறக்காத கர்நாடகா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறது. கூட்டாட்சி தத்துவத்தின்படி மத்திய அரசுடனும் மற்ற மாநில அரசுகளுடனும் கர்நாடகா சுமுக உறவை பேண வேண்டும். மாநில அரசுகளுக்கு இடையே பிரச்சினை எழும்போது மத்திய அரசு அதனை தீர்த்து வைக்க வேண்டும். மாநில அரசுகளும் எல்லா பிரச்சினைகளுக்கும் நீதிமன் றத்தை அணுகாமல், தங்களுக்கு இடையேயான பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும். அப்போது தான் பிரச்சினை பெரிதாகும் முன்பே தீர்வு காண முடியும். இதனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிட வில்லை என்றாலும் பேச்சுவார்த்தை என்னும் வழியை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக முதல்வரும் கர்நாடக முதல்வரும் வருகிற 30-ம் தேதிக்குள் சந்தித்து பேச மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.

அதற்கு மத்திய அரசின் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ‘‘அடுத்த இரு நாட்களுக்குள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்துப் பேச மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அனைத்து மாநிலங்களுடன் மத்திய அரசு சுமுகமான உறவை பேணுவதால் இந்த சந்திப்பை கட்டாயம் ஏற்பாடு செய்ய முடியும்’’ என தெரிவித்தார்.

மீண்டும் தமிழகத்துக்கு நீர்

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘‘கர்நாடக அரசின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. எந்த மாநில சட்டப்பேரவையின் தீர்மானமும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றினால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மாண்பை பாதிக்கும். எனவே கர்நாடக அரசு அடுத்த இரு நாட்களுக்கு (28 மற்றும் 29-ம் தேதி) தலா 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். இந்தத் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கிறதா என உச்ச நீதிமன்றம் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் தயங் காது. கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் முதல்வர் சித்தராமையாவிடம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்ல வேண்டும். தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட சொல்லி, தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்’’ என்றனர்.

அதற்கு வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன், ‘‘கர்நாடக சட்டப் பேரவையில் அனைத்துக்கட்சி யினரின் ஒப்புதலோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி, முதல்வர் சித்தராமையாவால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க முடியாது. இதனை அமல்படுத்தினால் சட்டச்சிக்கல் ஏற்படும்’’ என்றார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டப்பேரவை தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதற்கான நடவடிக் கையை எடுங்கள். இந்திய கூட்டாட்சி தத்துவத்தின்படி மாநில அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கீழ்ப்படிந்து நடந்துக் கொள்ள வேண்டும்’’ எனக்கூறி, வழக்கை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கர்நாடகாவில் போராட்டம்

உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினரும் அரசியல் கட்சியி னரும் விவசாய சங்கத்தினரும் நேற்று போராட்டத்தில் குதித்தனர். பெங்களூருவில் கன்னட ரக்ஷன வேதிகே, ஜெய்கர்நாடகா ஆகிய அமைப்பினர் ஆங்காங்கே சாலை களில் டயர்களை எரித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

மண்டியாவில் பெங்களூரு- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் விவசாய சங்கத்தினரும் காவிரி பாது காப்பு குழுவினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாண்ட வபுரா, மத்தூர் ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரின் போராட்டத் தால் நேற்று மாலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மீண்டும் பெங்களூரு- மைசூரு போக்குவரத்து முற்றிலு மாக முடங்கியுள்ளது.

கன்னட அமைப்பினரின் போராட் டத்தை தொடர்ந்து பெங்களூரு, மண்டியா, மைசூரு, கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெங்களூரு, மண்டியா, மைசூரு ஆகிய பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப் படை, மத்திய பாதுகாப்பு படை மற்றும் கர்நாடக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x