Published : 23 Jul 2014 02:35 PM
Last Updated : 23 Jul 2014 02:35 PM

டெல்லியில் திஹார் சிறைக் கைதிகளின் கைவண்ணத்தால் களைகட்டும் ஓட்டல்!

வெயில் மண்டையைப் பிளக்கும் மதிய நேரம். வங்கி வைப்பகர் கவுரவ் குப்தா தனது மதிய உணவை சாப்பிட ஒரு குளிரூட்பட்ட ஓட்டலுக்கு செல்கிறார். அங்குள்ள வசதி, உணவு, சூழல் அனைத்தும் சராசரி உணவகத்தின் குணாதிசியங்களாக இருந்தது, அங்குள்ள சர்வர்களை தவிர. அவர்கள் வெறும் சர்வர்கள் மட்டுமல்ல, தெற்காசியாவிலுள்ள மிகப் பெரிய சிறைச்சாலையான திஹாரில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகள்!

ஒத்திகை முயற்சி

இம்மாதம் முதல் வாரத்தில் திஹார் சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கான ஒரு முயற்சியாக இந்த ஓட்டல் தொடங்கிப்பட்டுள்ளது. ஓர் உணவகம் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வமான அனுமதி பெறாத நிலையில், சிறை கைதிகளின் விடுதியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அழகான உள்கட்டமைப்பு, கைதிகளால் வரையப்பட்ட ஓவியங்கள், 50 பேர் உட்காரும் அளவிற்கான இடம், அருகிலுள்ள ஓட்டல் நிர்வாகப் பள்ளியிலிருந்து பயிற்சி பெற்ற கைதிகள் என சிறந்த முறையில் அமைத்திருக்கிறது இந்த உணவகம்.

பாராட்டத்தக்க கூட்டு முயற்சி

"இங்கு உணவு சுமாராக இருக்கிறது. ஆனால் சுகாதாரம் பொறுத்தவரையில், மிக நேர்த்தியாக கையாளுகிறார்கள். கைதிகளைப் பணியில் அமர்த்தியிருப்பது நல்ல விஷயம்" என்று குப்தா கூறுகிறார்.

இந்த உணவகத்தின் நிர்வாகி மொஹமத் அசிம் பேசும்போது, "இங்கு தினமும் 50 வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். இங்கு பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் தினக்கூலி ரூ.74 தரப்படுகிறது. இங்கு சமோசா, பீன்ஸ் போன்ற சைவ உணவுகள் அதிகமாக வழங்கப்படுகின்றன. இங்கு இருப்பதிலேயே அதிகபட்சமாக 'டிலக்ஸ் தாலி' ரூ.150-க்கு விற்கப்படுகிறது. குறைந்தப்பட்சமாக சமோசா ரூ.10-க்கு விற்கப்படுகிறது" என்று தெரிவிக்கிறார்.

மேலும், இங்கு ஒருமுறை வந்து உணவு சாப்பிடுபவர்கள், மீண்டும் வருகிறார்கள் என்று கூறும் அசிம், ஒரு கொலைக் குற்றத்திற்காக 14 ஆண்டுகள் திஹார் சிறையிலிருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. சிறையிலிருந்து விடுதலையாகி இந்த உணவகத்தில் பணிபுரிய வேண்டுமெனில், கைதிகள் குறைந்தபட்சம் 'ஒழுக்கமாக' 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பள்ளி உயர்கல்வியும் கற்றிருக்கவேண்டும். மேலும், 2 ஆண்டுகளில் விடுதலையாகவுள்ள கைதிகள் சிறையிலிருந்து தப்பிப்பதை தவிர்க்க, இங்கு பணியில் அமர்ந்துக்கிறார்கள்.

கைதிகள் சிறையிலிருந்து உணவகம் செல்ல சைக்கிள் பயன்படுத்துகிறார்கள் அல்லது நடந்து செல்கிறார்கள். அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் என்று கூறும் அதிகாரிகள், அவர்களுடன் யாரையும் காவலுக்கு அனுப்புவதில்லை.

விருந்தாளிகள் கருத்துப் புத்தகத்தில், பெரும்பாலான கருத்துகள் கைதிகளுக்கு ஊக்கமூட்டும் வகையில் உள்ளன. "உணவு மிகவும் சுவையாக இருந்தது. வாடிக்கையாளர்களை நடத்தும் விததிற்கும், சுகாதாரத்திற்கும் 10/10 மார்க் போடலாம்", என்று பூமிகா தபஸ் எழுதியுள்ளார்.

இந்த உணவகத்திற்கு கிடைக்கும் வருவாய், சிறை கைதிகளின் நலனுக்கும், தொழிற்கல்வி பயிற்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று திஹார் சிறைச்சாலையின் பிரதிநிதி சுனில் குப்தா தெரிவிக்கிறார்.

சீரமைக்கப்பட்ட சிறை

ஒரு காலத்தில் ஊழல், போதைப்பொருள் உபயோகம், சக கைதிகளை துன்புறுத்தல் போன்ற அநீதிகளுக்கு பெயர்போன திஹார் சிறை தற்போது தொழிற்கல்வி பயிற்சிகள், ஓவியங்கள் வரைத்தல் போன்ற கைதிகளின் மறுவாழ்விற்கான பயிற்சிகள் கிட்டதட்ட 13,552 கைதிகளுக்கு அளிக்கப்படுகின்றன.

"கைதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், சிறை வாழ்வைப் பற்றி பொதுமக்களுக்கு நேர்மறை சிந்தனையை உருவாக்கவும்தான் இந்த உணவகம் அமைத்ததற்கான காரணம்.", என்று தெரிவிக்கிறார், சுனில் குப்தா.

இதே போன்ற ஓர் முயற்சி, 2 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் எடுக்கப்பட்டது. அதில், அங்குள்ள கைதிகள் சிறைச்சாலைக்கு முன் தாங்கள் தயாரித்த உணவுகளை விற்பதும், வாகனத்தில் எடுத்துசென்று விற்பதுமான முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x