Last Updated : 31 Mar, 2015 08:37 AM

 

Published : 31 Mar 2015 08:37 AM
Last Updated : 31 Mar 2015 08:37 AM

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-12: தீர்ப்பெழுத தினமும் 18 மணி நேரம் உழைக்கும் நீதிபதி

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று கவனித்து கொண்டிருக்கிறது.18 ஆண்டுகளாக நீண்ட இவ்வழக்கை தினமும் 18 மணி நேரம் ஆராய்ந்து தீர்ப்பை நிதானமாக எழுதி கொண்டிருக்கிறார் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி.

1991-1996 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக்குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடுத்தது.1997-ல் சென்னை சிங்காரவேலர் மாளிகையில் தொடங்கிய வழக்கு விசாரணை 2003-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ஆவணங்கள் மொழிப்பெயர்ப்பு, சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கம், இரு தரப்பு வாதம் எல்லாம் முடிந்து கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வெளியானது.

நீதிபதி குன்ஹா தனது 1,136 பக்க தீர்ப்பில்,''ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ரூ.53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 முறைகேடான வழிகளில் சம்பாதித்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.1991-1996 காலகட்டத்தில் ஜெயலலிதா தரப்பின் வருவாய் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாகவும், செலவு 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாயாகவும் இருந்துள்ளது. இதன்படி பொது ஊழியரான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவித்தது ஊழல் தடுப்புச்சட்டம் 13 (i)(e) பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம்.

இதே போல ஜெயலலிதா தனது சகாக்களான‌ சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டதும் நிரூபணமாகி உள்ளது.

சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகியோர் ஜெயலலிதா குற்றம் புரிய உடந்தையாக இருந்துள்ளனர். எனவே நால்வரும் குற்றவாளிகள் என அறிவிக்கிறேன். நான்கு குற்றவாளிகளுக்கும் தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கிறேன்''என குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுச்சதிக்கு ஆதாரமில்லை

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஜெயலலிதா தரப்பு,''ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது, சாட்சிகள் விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் உள்ளிட்ட அனைத்திலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் 32 தனியார் நிறுவனங்களுக்கும் தனித்தனியாக சொத்துகள் இருந்தன. அந்த சொத்துகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை இருக்கிறது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மொத்த சொத்தையும் ஒன்றாக மதிப்பீடு செய்து வழக்கு தொடுத்துள்ளது. அதே போல நீதிபதி குன்ஹாவும் நால்வரின் சொத்தையும் ஒன்றாக கருதி தீர்ப்பு எழுதி இருப்பது தவறானது.

1991-1996 காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் தங்களுக்கு கிடைத்த வருமானத்துக்கும், சேர்த்த சொத்துகளுக்கும், செலவுக்கும் முறையான வருமான வரி செலுத்தியுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வருமான வரி தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது நால்வரும் தங்களது வருமானத்துக்கு உட்பட்டு சொத்துகள் வாங்கியதாக வருமான வரித் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது.

நால்வரின் சொத்தும் தனியாக வாங்கப்பட்டது என்பதால் பொது ஊழியரான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிக்கவில்லை என்பது நிரூபணம் ஆகும். எனவே ஊழல் தடுப்பு சட்டம் 13(1) (ஈ) பிரிவின்படி ஜெயலலிதாவை தண்டிக்க முடியாது.

அரசு தரப்பில் கூட்டுச்சதியை தக்க ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் கூட்டுச்சதியை நிரூபிக்கவில்லை. கூட்டுச்சதிக்கு ஆதாரம் இல்லாத போது குற்றம் செய்ய உடந்தையாக இருந்ததாகவும் தண்டிக்க முடியாது.

அதே போல த‌மிழக லஞ்ச ஒழிப்புத்துறை இவ்வழக்கில் சுதாகரனின் திருமண செலவு, கட்டிட மதிப்பீடு,விவசாய வருமான மதிப்பீடு,நில மதிப்பீடு ஆகியவற்றில் நடைபெற்ற குளறுபடிகளை 99 சாட்சிகள் மூலம் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளோம். இதேபோல 1992-ல் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வந்த ரூ.2.15 கோடி, நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு டெபாசிட் மூலம் வந்த ரூ.14.1 கோடி, விவசாயம், கட்டிடங்கள் மூலம் வந்த வருமானம் மற்றும் செலவுகளை 384 சான்று ஆவணங்கள் மூலம் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். எனவே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும்''என வாதிட்டனர்.

அரசுத் தரப்பு வாதம்

அரசு வழக்கறிஞர் பவானிசிங்,ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்தது, சசிகலா,சுதாகரன்,இளவரசியுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்தது தொடர்பாக‌ 6 நாட்கள் அரசு தரப்பு சாட்சியங்களை வாசித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார்தான் மணி கணக்கில் விவரித்தார்.

இறுதி நாளன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தமும், குணசீலனும் தயாரித்த 200 பக்க எழுத்துப்பூர்வ அறிக்கை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “1991-க்கு முன் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ரூபாயாக இருந்த ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 1996-க்கு பின் 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 396.59 ரூபாயாக அதிகரித்திருந்தது.1991-1996 காலகட்டத்தில் நால்வரின் மொத்த வருமானம் ரூ.9 கோடியே 34 லட்சத்து 26 ஆயிரத்து 53.56,செலவு 11 கோடியே 56 லட்சத்து 56 ஆயிரத்து 833.41 ரூபாயாக இருந்துள்ளது.

இவை யாவும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் 32 தனியார் நிறுவனங்கள் கூட்டுச்சதி செய்து, முறைகேடாக வாங்கப்பட்டவை. இவ்வழக்கில் இரு தரப்பு சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கம், இறுதிவாதம் ஆகியவற்றை பதிவு செய்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எங்களது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா நால்வரையும் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்கினார். அதே தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்''என குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீவிரம்

18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி 41 நாட்களில் விசாரித்து முடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

.தற்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 9 பீரோக்களில் இருந்த 67 ஆயிரம் பக்க ஆவணங்களையும்,ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட 2.15 லட்சம் பக்க ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பை நிதானமாக எழுதி வரும் குமாரசாமி, அதற்காக தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார்.

வரும் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியக்கத்தக்க வாசகர்களின் வரவேற்பு

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஜெயலலிதா வழக்கு தொடர்பான இத்தொடரை எவ்வித ஆதரவும் பாராபட்சமும் இன்றி நீதிக்கான பொதுமேடையாகவே,'தி இந்து' வெளியிட்டது.

நடுநிலைமையைக் கடைப்பிடித்த அதேசமயம், நீதித்துறை எல்லையையும் மீறாமல் கவனமாகக் கையாண்டது.

'ஜெயலலிதா சொத்துக்குவிப்பு டைரி' தொடர் 5 முக்கிய அம்சங்களை முன்வைத்து எழுதப்பட்டது. ஜெயலலிதா தரப்பு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் குற்றச்சாட்டு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு முன் வைத்த மறுப்பு வாதம், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு, அதை ஆழமாக மறுத்த ஜெயலலிதா தரப்பின் மேல்முறையீட்டு வாதம், இறுதியாக அதனை நிராகரிக்கக் கோரும் அரசு தரப்பு வாதம் ஆகியவை வரிசையாக அடுக்கப்பட்டன.

இந்த தொடருக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பும், எழுப்பிய சந்தேகங்களும், ஆக்கப்பூர்வ விவாதங்களும் வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தன. கடிதம், இணையதளம், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாக எழுப்பப்ப‌ட்ட கேள்விகள் வாசகர்களின் புத்திசாலித்தனத்தை பறைச்சாற்றின. இத்தகு வாசகர்களைப் பெற்றதற்காக ‘தி இந்து’ பெருமை கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x