Last Updated : 22 May, 2015 07:33 AM

 

Published : 22 May 2015 07:33 AM
Last Updated : 22 May 2015 07:33 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: அனல் பறக்க விவாதம் நடத்திய அரசு வழக்கறிஞர்கள்

மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இப்போதும் தீவிரமாக பேசப்படுவதற்கு காரணம் அரசு வழக்கறிஞர்கள் தான். நல்லம்ம நாயுடு தலைமையிலான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை அதிகாரிகளும், 259 அரசு தரப்பு சாட்சிகளும் கொண்டுவந்து கொட்டியவற்றை தேர்ந்தெடுத்து வழக்கு தொடுத்தது அரசு வழக்கறிஞர்கள் தான். 1997-ல் ஜவஹர், கே.இ.வெங்கட்ராமன், ஏ.வி. சோமந்தரம் ஆகிய மூவரும் 1,500 ரூபாய் ஊதியம் பெற்று, இரவு பகலாக உழைத்து பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட அரசு சான்று ஆவணத்தை தயாரித்தனர்.

திமுக ஆட்சியில் வேகமாக வேலை பார்த்த அரசு வழக்கறிஞர் கள், 2001 ஆட்சி மாற்றத்துக்கு பிறகு ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக வரிசையாக ராஜினாமா செய்தனர். ஜெயலலிதாவின் ஆட்சியால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் சந்திரசேகர், வெளிப்படையாகவே குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று அன்பழகன் உச்ச நீதிமன்றத்துக்கு போனார். 2003 நவம்பர் 18-ம் தேதி அரசு வழக்கறிஞர் நடத்தையை காரணம் காட்டி ஜெயலலிதா வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அந்த தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் எஸ்.என்.வரைவா, ஹெச்.கே. சீமா ஆகிய இருவரும் பின் நாட்களில் பவானி சிங் இவ்வழக்கில் வாதிடுவார் என்பதை கனவிலும் நினைத்திருக்க‌மாட்டார்கள்!

அசராத பி.வி.ஆச்சார்யா

நாட்டின் மிக மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பி.வி.ஆச்சார்யா ஏறக்குறைய 60 ஆண்டுகள் தனது வாழ்க்கையை சட்டநூல்களுடன் கழித்திருக்கிறார். மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்த ஆச்சார்யா, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக 5 முறை இருந்துள்ளார். ஆனால் அரசியல் அழுத்தத்தின் காரணமாக ஒரு முறைகூட அந்த பதவிகாலத்தை முழுமையாக நிறைவு செய்த‌தில்லை.

ஜெயலலிதா வழக்கை விரைவில் முடிக்க ஆச்சார்யா தான் சிறந்த ஆள் என கர்நாடக உயர்நீதிமன்றம் ஆணித்தரமாக நம்பியது. இதன் காரணமாக 2005-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி இவ்வழக்கில் ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஆச்சார்யா வழக்கில் ஆஜரான நாளில் இருந்து எதிர்த் தரப்புக்கு அடுத்தடுத்த‌ அதிர்ச்சிகள் காத்திருந்தன. 1997-ல் திமுக ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சியம் அளித்த 70-க்கும் மேற்பட்ட சாட்சிகள் 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பிறழ் சாட்சியங்களாக பல்டி அடித்தனர். அதனை ஆட்சேபிக்காத அப்போதைய அரசு வழக்கறிஞர் சந்திர சேகர் பிறழ் சாட்சிகளின் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்ய அனுமதித்தார். ஆனால் வழக்கு பெங்களூரு வந்ததும் முதல் வேலையாக ஆச்சார்யா பிறழ் சாட்சியம் அளித்தவர்களை மீண்டும் நீதிமன்றத்துக்கு வரவைத்தார்.

பெயரை மாற்றிக் கொண்டு, ஊரை மாற்றிக்கொண்டு, தொழிலை மாற்றிக் கொண்டு இருந்த சாட்சிகள் மீண்டும் நீதிமன்ற படி ஏறினர். ஆச்சார்யா நடத்திய குறுக்கு விசாரணையில், பிறழ்சாட்சியம் அளித்தவர்கள் ஆளும் கட்சியின் அழுத்தத்தின் காரணமாக பொய் சாட்சியம் அளித்தது தெரியவந்தது. இதனை அப்படியே பதிவு செய்த நீதிபதி ஏ.எஸ்.பச்சாப்புர்ரே அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா சிறப்பாக செயல்பட்டுள்ளார் என நீதிமன்றத்திலேயே பாராட்டினார்.

இதையடுத்து ஜெயலலிதா தரப்பு ஆவணங்கள் மொழிப் பெயர்ப்பு, மொழிபெயர்ப்பில் பிழை திருத்தம், மீண்டும் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பு என 2 ஆண்டுகள் வாய்தாக்களை வாங்கி குவித்தன. அனைத்துக்கும் பொறுமையாக இருந்த ஆச்சார்யா குற்றவியல் நடைமுறைச்சட்டம் 313-ன் படி குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும் என மனு போட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்போதைய ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ‘‘வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஜெயலலிதாவிடம் கேள்வி எழுப்ப வேண்டும்''என்றார். அதற்கு ஆச்சார்யா சிரித்துக்கொண்டே, ' ஜெயலலிதாவால் சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வரமுடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?'' என கிடுக்கிப்பிடி போட்டார். இதையடுத்து நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா, ‘‘ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும்'' என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் வரலாற்றில் முதன் முதலாக 2010-ம் ஆண்டு ஜெயலலிதா நீதிமன்றத்தில் 4 நாட்கள் நேரில் ஆஜராகி 1339 கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்தார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆண்டு கணக்கில் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு திக்கி திணறி பதில் அளித்தனர். நீதிபதி குன்ஹா விதித்த தண்டனை எதிர்த்தரப்புக்கு எத்தனை கடினமான ஒன்றாக இருந்திருக்குமோ, அதே அளவு கடினமாக இருந்தது இந்த பதில் அளிக்கும் படலம். அதற்கு ஒரே காரணம் ஆச்சார்யா.

சிறப்பாக செயல்பட்டு வந்த ஆச்சார்யா, பாஜக மேலிடம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக‌ திடீரென அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து பவானிசிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங்கின் நியமனம் செல்லாது எனக்கூறி கடந்த 27-ம் தேதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் நீதிபதிகள் கொண்ட அமர்வு என உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த 6 மணி நேரத்தில் உடுப்பியில் இருந்த ஆச்சார்யா பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்டு, அரசு வழக்கறி ஞராக நியமிக்கப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு உள்ள அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக 18 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். ஆனால் மே 11-ம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என விடுவித்ததைத் தொடர்ந்து ஆச்சார்யா, 'எனது 58 வருட வழக்கறிஞர் தொழிலில் இப்படி ஒரு தீர்ப்பை பார்த்ததில்லை''என‌ அனல் கக்கினார்.

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கூட்டுத்தொகை உட்பட பல அடிப்படை குளறுபடிகள் இருக் கின்றன. கர்நாடக அரசு காலம் தாழ்த்தாமல் மேல்முறையீடு செய்ய வேண்டும் என 16 பக்கத்தில் அழுத்தம் திருத்தமான பரிந்துரை கடிதத்தையும் அனுப் பினார். கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வதற்கு பரிசீலித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆச்சார்யா மேல்முறையீட்டுக்கு தேவையான குறிப்புகளை தயா ரித்துக் கொண்டிருக்கிறார்.

அரசு வழக்கறிஞர்கள் விவரம்

1. ஏ.வி.சோமசுந்தரம், கே.இ.வெங்கட்ராமன், ஜவஹர் ( 1997 முதல் 2001 வரை )

2. சந்திர சேகர் ( 2001 முதல் 2003 நவம்பர் வரை)

2. பி.வி.ஆச்சார்யா, சந்தேஷ் சவுட்டா (2005 பிப் 19-ம் தேதி முதல் 2013 ஜனவரி 31 வரை)

3. பவானிசிங், முருகேஷ் எஸ். மரடி (2013, பிப்ரவரி 2 முதல்-2015 ஜனவரி 31 வரை )

4.பவானிசிங், சதீஷ் கிர்ஜி (2015 பிப்ரவரியில் இருந்து ஏப்ரல் 27 வரை)

5. பி.வி.ஆச்சார்யா, சந்தேஷ் சவுட்டா (ஏப்ரல் 27,2015 முதல் தற்போது வரை)

( இன்னும் வருவார்கள் )

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x