Last Updated : 30 Jul, 2016 09:57 AM

 

Published : 30 Jul 2016 09:57 AM
Last Updated : 30 Jul 2016 09:57 AM

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை அரசு அதிகாரிகள், என்ஜிஓக்களுக்கு அவகாசம்: 6-வது முறையாக கெடு நீட்டிப்பு

மத்திய அரசு அதிகாரிகள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதியுதவி பெறும் என்ஜிஓக்கள், அவற்றின் நிர்வாகிகள் ஆகியோர் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் சட்ட விதிகளின் படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட சொத்து விவரங்கள் மட்டுமின்றி, வாழ்க்கை துணை, வாரிசுகள் என குடும்பத்தாரின் பெயரில் உள்ள சொத்து குறித்த தகவல்களையும் ஆண்டுதோறும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இச்சட்ட விதி அமலுக்கு வந்ததில் இருந்து, ஒவ்வொரு முறையும் சொத்து விவரங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜூலை 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், 6-வது முறையாக மீண்டும் இத்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை சார்பில் நேற்று முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது. வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியை புதிய காலக்கெடுவாக நிர்ணயித்திருப்பதாக, அந்த அறி விப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ.1 கோடி அரசு நிதியுதவி மற்றும் ரூ.10 லட்சத்துக்கு மேல் வெளிநாட்டு நன்கொடை பெறும் என்ஜிஓக்கள் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் படி, என்ஜிஓ அமைப்புகள் மட்டு மின்றி, அவற்றின் நிர்வாகிகள், இயக்குனர், மேலாளர், செய லாளர் உள்ளிட்டோரும், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமானது.

என்ஜிஓக்களையும், அவற்றின் நிர்வாகிகளையும் இச்சட்ட வரம்புக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து, தொழில் துறையினர் மற்றும் எம்பிக்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து மனு அளித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த புதன்கிழமை, லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத் திருத்த மசோதா, எவ்வித விவாதமோ, முன்னறிவிப்போ இன்றி, இரு அவைகளிலும் நிறைவேறியது.

இதையடுத்து, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் என்ஜிஓக்கள் சொத்துக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடுவை மத்திய அரசு நேற்று நீட்டித்துள்ளது. லோக்பால் சட்டம் அமலுக்கு வந்த பின், 2014-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அதே ஆண்டு செப்டம்பர் 15 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அப்போது முதல்முறையாக, டிசம்பர் மாதம் வரை கெடு நீட்டிக்கப்பட்டது. பின்னர், 2015 ஏப்ரல் 30 என்றும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 15 என்றும் நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னரும், இந்தாண்டு ஏப்ரல் 15-ம் தேதியும், பின்னர் ஜூலை 31-ம் தேதியும் என இரண்டு முறை கெடு நீட்டிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x