Last Updated : 22 Jul, 2016 02:22 PM

 

Published : 22 Jul 2016 02:22 PM
Last Updated : 22 Jul 2016 02:22 PM

29 வீரர்களுடன் சென்னையில் இருந்து அந்தமான் சென்ற இந்திய விமானப்படை விமானம் நடுவானில் மாயம்

தேடும் பணியில் 17 கப்பல்கள் | தொழில்நுட்ப கோளாறு காரணமா?

சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் நடுவானில் மாயமானது. அதில் இருந்த 29 பேரின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் 17 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் இருந்து 2 விமானிகள், கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 29 பேருடன் ஏஎன்32 வகை விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு புறப்பட்டுச் சென்றது. 8.46 மணிக்கு வானில் 23,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அதன் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.

பதற்றமடைந்த விமானப்படை அதிகாரிகள் உடனடியாக விமானத்தை தேடும் பணியை முடுக்கிவிட்டனர். சென்னையில் இருந்து விமானம் பறந்த பாதையில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் துணையுடன் விமானப் படை வீரர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து இந்திய விமானப் படை செய்தி தொடர்பாளரான விங் கமாண்டர் அனுபம் பானர்ஜி கூறும்போது, ‘‘வழக்கமான தபால் சேவைக்காக தாம்பரத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு விமானம் புறப்பட்டது. விமானம் 11.30 மணிக்கு போர்ட் பிளேரில் தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால் வானில் 23,000 அடி உயரத்தில் பறந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டு ரேடார் கண்களில் இருந்து மறைந்தது’’ என்றார்.

இந்திய விமானப்படை சார்பில் இரு ஏஎன்32 விமானங்கள், ஒரு சி130 ரக விமானம், கடற்படை சார்பில் கடலோர கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இரு பி8ஐ விமானம் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் சென்னையில் இருந்து ஐசிஜிஎஸ் சாகர், சமுத்ர பெஹ்ரேதார் கப்பல் களும், போர்ட்பிளேரில் இருந்து ஐசிஜிஎஸ் ராஜ்ஸ்ரீ மற்றும் ஐசிஜிஎஸ் ராஜ்வீர் ஆகிய கப்பல்களும் விமானம் மாயமான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு, அவசர நடவடிக்கைக்காக போர்ட் பிளேரில் ஐசிஜிஎஸ் விஷ் வஸ்த் என்ற கப்பல் தயார்நிலை யில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர கிழக்கு படைப் பிரிவின் 13 கப்பல்களும், இரு விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வங்காள விரிகுடா கடலின் முழு பரப்பிலும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டிருப் பதாக கடற்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் டி.கே.சர்மா தெரிவித்துள்ளார். ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கரும் விமானத்தை கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் முடுக்கிவி டப்பட்டுள்ளன என தெரிவித்துள் ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேடுதல் பணியில் விமானப்படைக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி தேசிய பேரிடர் மீட்பு படைக்கு உத்தர விட்டுள்ளார்.

இதற்கிடையில் மாயமான அந்த விமானத்தில் ஏற்கெனவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந் ததாகவும், இதன் காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான இந்த விமானம் நிரப்பப்பட்ட எரி பொருளை கொண்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை பறக்கும் திறன் படைத்தது என கூறப்படு கிறது.

விவரம் அளிக்க மறுப்பு

விமானம் மாயமானது தொடர் பாக விசாரணை நடத்த, தமிழக அரசு சார்பில் தாம்பரம் ஆர்டிஓ எஸ்.ராஜேந்திரன், தாசில் தார் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று மாலை விமானப்படைத் தளத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பின் நிருபர்களிடம் தாம்பரம் ஆர்டிஓ ராஜேந்திரன் கூறியதாவது:

12 தமிழர்கள்

முதல்கட்ட விசாரணையில் 6 விமானிகள் உட்பட 29 பேர் அதில் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. இதில் 12 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வேறு தகவல்கள் எதையும் அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நாளை (இன்று) காலை தகவல்களை சொல்வதாக கூறுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாம்பரம் விமானப் படை தளத்தில் ஏஎன்32 ரகத்தின் 20 விமானங்கள் நிறுத்தப்பட்டுள் ளதாகவும், அதில் ஒன்றுதான் தற்போது மாயமாகி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x