Published : 01 Sep 2014 10:03 AM
Last Updated : 01 Sep 2014 10:03 AM

சுவிஸ் வங்கிகளிலிருந்து ரூ.25 லட்சம் கோடியை திரும்பப் பெற்ற வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்

கடந்த 6 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்திருந்த சுமார் ரூ.25 லட்சம் கோடியை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெளியே எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச ஆலோசனை குழுமமான பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸின் (பிடபிள்யூசி) சுவிட்சர்லாந்து பிரிவு அந்நாட்டின் 90 தனியார் வங்கிகளின் ஆண்டு அறிக்கைகளை ஆய்வு செய்தது. இதன் அடிப்படையிலும் அந்நாட்டு மத்திய வங்கியான எஸ்என்பி உள்ளிட்ட இதர பொது புள்ளி விவரங்களின் அடிப்படையிலும் பிடபிள்யூசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 6 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளிலிருந்து சுமார் ரூ.25 லட்சம் கோடியை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெளியில் எடுத்துள்ளனர். இதில் இந்தியர்க ளுக்கு சொந்தமானது எவ்வளவு தொகை என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

இந்தத் தொகையில், ரகசிய கணக்கு விவரத்தை வெளியிட்ட தற்காக வாடிக்கையாளர்களுக்கு அபராதமாக செலுத்தியது ரூ.7 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.18 லட்சம் கோடி வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த தொகையாகும்.

சுவிஸ் வங்கிகளுடனான உறவை முறித்துக் கொண்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், அந்தத் தொகையை வேறு நாட்டு வங்கியிலோ அல்லது தங்களது சொந்த நாட்டிலோ முதலீடு செய்துள்ள னர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

கருப்பு பணத்துக்கு அடைக்கலம் கொடுப்பதாக சுவிட்சர்லாந்து வங்கிகள் மீது உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்துடன் சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ள தங்கள் நாட்டினர் பற்றிய விவரங்களை வழங்குமாறு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இதையடுத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட நாடுகளுடனான வரி தவிர்ப்பு ஒப்பந்தங்களில் திருத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சுவிஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்துள்ள பணத்தை வெளியில் எடுத்து வருகின்றனர்.

சுவிட்சர்லாந்து தேசிய வங்கியின் (எஸ்என்பி) 2013 புள்ளிவிவரப்படி அந்நாட்டு வங்கிகளில் உள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் முதலீடு ரூ.90 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. எனினும், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் முதலீடு 40 சதவீதம் அதிகரித்து ரூ.14 ஆயிரம் கோடியாகி உள்ளது.

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x