Published : 30 Jul 2014 09:07 AM
Last Updated : 30 Jul 2014 09:07 AM

சிவில் சர்வீஸ் திறனறிவுத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கலாமா?- மத்திய அரசு தீவிர பரிசீலனை

சர்ச்சையில் சிக்கியுள்ள சிவில் சர்வீஸ் திறனறிவுத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கலாமா? அல்லது அதில் இடம்பெறும் ஆங்கில மொழி கேள்விகளை நீக்கிவிடலாமா? என்று மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தேர்வு முறையில் மாற்றம்

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட 23 வகையான மத்திய அரசின் உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் நடத்தப்படும் இத்தேர்வு, முதல்நிலை, மெயின், நேர்காணல் என 3 நிலைகளைக் கொண்டது ஆகும்.

இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

முதல்நிலைத் தேர்வில் 2011-ம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, முன்பிருந்த விருப்ப பாடத்தாள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக சி-சாட் எனப்படும் சிவில் சர்வீஸ் திறனறிவுத் தேர்வு சேர்க்கப்பட்டது. மேலும், மதிப்பெண் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு பொது அறிவு தேர்வுக்கு 200 மதிப்பெண், சி-சாட் தேர்வுக்கு 200 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.

மாணவர்கள் கடும் எதிர்ப்பு

சி-சாட் தேர்வில் ஆங்கில மொழிக்கும், ஆராயும் திறனுக்கும் (ஆப்டிடியூட்) அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறி கிராமப்புற மாணவர்களும், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சி-சாட் தேர்வில் மாணவர்கள் பரிச்சயமாகும் வகையிலும், 2013-ல் மெயின் தேர்வில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தினா லும், இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு, அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பில் 2 ஆண்டுகள் சலுகை அளிக்க முன்வந்தது.

அந்த 2 ஆண்டு வயது சலுகையுடனே இந்த ஆண்டுக் கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

தொடர் போராட்டம்

இதற்கிடையே, கிராமப்புற மாணவர்களும், இந்தி பேசும் மாநில மாணவர்களும் சி-சாட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த தேர்வை நீக்க வேண்டும் என்றும் வயது வரம்பு சலுகை 4 ஆண்டுகள் வழங்க வேண்டும் என்றும் கூறி டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்

சி-சாட் தேர்வில் திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக ஏற்கெனவே 3 நபர் குழு உரிய வழிவகைகளை ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வரும் மாணவர்களின் போராட் டம் டெல்லியில் தீவிரமடைந் துள்ளது.

இத்தகைய சூழலில், சி-சாட் எனப்படும் திறனறிவுத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப் பெண் நிர்ணயிக்கலாமா? (தற்போது சி-சாட் தேர்வு மதிப்பெண், பொதுஅறிவுத்தாள் மதிப்பெண் அடிப்படையில்தான் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்) அல்லது இத்தேர்வில் சர்ச்சைக்குரிய ஆங்கில மொழி வினாக்களை நீக்கிவிடலாமா? அல்லது ஒட்டுமொத்தமாகவே இந்த தேர்வை நீக்கிவிடலாமா? என்று மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்ச்சிக்கு கணக்கிடப்படாது

200 மதிப்பெண் கொண்ட சி-சாட் தேர்வுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் அதில் தேர்வர்கள் எடுக்கும் மதிப்பெண் முதல் நிலைத் தேர்வு தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது. பொதுஅறிவு தேர்வின் மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

மெயின் தேர்வில் தமிழ் உள் ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம் (ஒவ் வொன்றுக்கும் தலா 300 மதிப்பெண்) ஆகிய தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்ணை மெயின் தேர்வு தேர்ச்சிக்கு கணக்கில்கொள்ள மாட் டார்கள். அவற்றில் தேர்ச்சி பெற் றாலே போதுமானது.

இருப்பினும், மொழித்தாள் மற்றும் ஆங்கில தாளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வர்களின் இதர தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x