Published : 06 May 2015 04:12 PM
Last Updated : 06 May 2015 04:12 PM

சல்மான் கானுக்கு சிறை: இந்தி திரை நட்சத்திரங்கள் உருக்கம்

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது தங்களை கலங்கச் செய்துள்ளதாக இந்தித் திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

கடந்த 2002 செப்டம்பர் 28-ம் தேதி இரவு, தாறுமாறாக ஓடிய நடிகர் சல்மான் கானின் கார் பந்த்ரா பகுதியில் ஒரு பேக்கரியின் வெளியே படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் நூருல்லா மெஹ்பூப் ஷெரீப் என்பவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு தற்போது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சலமான் கானுக்கு வழங்கப்படும் தீர்ப்பு குறைந்தபட்ச அளவில் இருக்க வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் பலர் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வந்தனர். அதோடு சக இந்தி நடிகர்களும் தீர்ப்பை மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது வந்திருக்கும் தீர்ப்பு தங்களை கலங்கச் செய்துள்ளதாக இந்தி திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள், ரசிகர்களை என பலர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சல்மான் கான் தீர்ப்பு குறித்து தங்களது கருத்துக்களை @BeingSalmanKhan, #WithSalman, #SalmanVerdict என பல ஹேஷ்டேகில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதில், #WeLoveYouSalmanKhan என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானில் ட்ரெண்டாகியது.

இது குறித்து இந்தி நடிகையும் பாஜக எம்.பி-யுமான ஹேமா மாலினி கூறும்போது, "மிகவும் வருத்தமாக இருக்கிறது. சல்மானுக்கு குறைந்த அளவில் தண்டனை கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டிருந்தேன். சல்மான் மற்றும் அவரது குடும்பத்திரோடு வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.

பிரபல இயக்குநர் சுபாஷ் கய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "நாம் அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை மதித்தாக வேண்டும். சல்மான் கான் மிக நல்ல மனிதர். விதியை எதிர்த்து போராடக் கூடிய சக்தி அவருக்கு உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் அணில் ஷர்மா கூறுகையில், "சல்மான் கானுக்கான இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அவரது நல்ல உள்ளத்துக்கு கடவுள் துணை நிற்கட்டும்"

சல்மான் கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீதிமன்ற தீர்ப்பின் மீது கருத்து கூற விரும்பவில்லை. அவரை திரைப்பட உலகம் பிரிவது கடினம். இந்தி திரைப்பட உலகில் மிகவும் நல்ல மனிதர் அவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இசை அமைப்பாளர் வாஜித் அலி கூறும்போது, "மிகவும் மோசமான தருணம். தீர்ப்பை கேட்டு அதிர்ந்துவிட்டேன். சல்மான் பாய் மிகவும் எளிமையானவர். உண்மையானவர். இதனை அவர் கடந்து வருவார். அது ஒரு விபத்து மட்டுமே. எவருக்குமே ஒரு மோசமான நாள் வரும். வழக்கில் சல்மான் கான் என்ற நடிகர் குற்றம்சாட்டப்பட்டார் என்பதாலேயே பரபரப்பாக பேசப்படுகிறது" என்றார்.

நடிகர் சக்தி கபூர், "சட்டம் கூறுவதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். மிகவும் அசாதாரன தருணம். சல்மான் கானின் குடும்பத்தினர் சட்டத்தை மதிப்பவர்கள். ஏற்கெனவே அவர்கள் 13 ஆண்டு காலம் மனதளவில் சித்திரவதையை அனுபவித்துவிட்டனர். சல்மான் கான் மனிதநேய பணிகள் நிறைய செய்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு அவர் மிகவும் நெருக்கமானவர்"

நடிகை ஹன்சிகா மோத்வானி, " நெஞ்சை உடைக்கும் தீர்ப்பு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது"

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, "என்ன சொல்வதேன்றே தெரியவில்லை. என்ன ஆனாலும் நாங்கள் அவரோடு இருப்போம் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். அவர் நல்ல மனிதர். அவரிடமிருக்கும் நல்ல குணம் என்றும் மாறாது"

நடிகை பரிநீத்தி சோப்ரா, "என்ன நடக்கப் போகிறது என்பதை நினைத்து பார்த்தாலே வேதனையாக உள்ளது. நாங்கள் உங்களோடு இருப்போம். நீதிபதி சல்மான் கானை தாண்டி அவரது நல்ல உள்ளத்தை பார்ப்பார் என்று நினைத்தேன்"

அலியா பட், " நமக்கு நெருங்கியவர்கள் தண்டிக்கப்பட்டால் மிகவும் வருத்தமாக இருக்கும். அவர்கள் தவறே செய்திருந்தாலும் வருத்தம் இருக்கத்தான் செய்யும். எப்படி இருந்தாலும் நாங்கள் உங்களோடு இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x