Last Updated : 22 Nov, 2014 08:29 PM

 

Published : 22 Nov 2014 08:29 PM
Last Updated : 22 Nov 2014 08:29 PM

வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரலாம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

மாதாந்திர சம்பளம வாங்கும் நடுத்தர மக்கள் நேரடியாக வருமான வரி அதிகமாக கட்டிவருகிறாரகள். என்னை கேட்டால் அவர்களுக்கு நேரடி வரியை குறைத்து, சம்பளத்தொகை அவர்களுக்கு முழுமையாக செல்லும் போது, அவர்கள் அதிகம் செலவு செய்வார்கள். இதன் மூலம் மறைமுகமாக வரியினை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதாவது வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படலாம் என்பதை சூசகமாக அவர் தெரிவித்திருக்கிறார். அதேசமயத்தில் வரி ஏய்ப்பு செய்பவர்களை தப்ப விடக்கூடாது என்றும் கூறினார்.

மேலும் கிடைக்கும் வரிகளும் பாதி அளவுக்கு மறைமுக வரிதான். உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி என பல வரிகள் செலுத்திவருகிறார்கள். கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகையை 2 லட்ச ரூபாயிலிருந்து 2.5 லட்ச ரூபாயாக அவர் உயர்த்தினார். அரசாங்கத்திடம் பணம் இருந்தாலும் மேலும் இந்த தொகையை உயர்த்தலாம் என்றார்.

இப்போதைக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவை இல்லை. மற்ற இதர விலக்குகளை சேர்த்துக்கொண்டால் 3.5 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை வரி இல்லாமல் சமாளிக்கலாம்.

35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நபர், சரியான சேமிப்பை செய்தால் அவர் வரி கட்டத்தேவை இல்லை. ஆனால், வாடகை, குழந்தைகளின் செலவு ஆகிய காரணங்களால் இந்த எல்லைக்குள் இருப்பவர்கள் பலரால் சேமிக்க முடியவில்லை என்று தெரிவித்தார் ஜேட்லி.

இந்த நிலையில், அரசாங்கத்திடம் பணம் இருக்கும் பட்சத்தில் இந்த விலக்கினை இன்னும் அதிகரிக்கலாம். நானும் அதைதான் விரும்புகிறேன். ஆனால் தற்போதைய அரசின் வருமான சூழ்நிலையில் இது சவாலான விஷயம். கடந்த முறை என்னுடைய எல்லைகளை தாண்டியும் பல சலுகைகளை நான் வழங்கினேன் என்றார்.

நேரடியாக வருமான வரியாக வசூல் செய்வதை விட, அவர்களை செலவளிக்கும் பட்சத்தில் பொருளாதார பரிவர்த்தனைகள் அதிகரிக்கும், மறைமுக வரியும் உயரும் என்றார்.

நாட்டினுள் பதுக்கப்படும் கருப்புப் பணம்:

நாட்டினுள் பதுக்கப்படும் கருப்புப் பணம் அளவில் மிகப்பெரியது ஆனால் சுலபத்தில் கண்டுபிடித்து விடக்கூடியது. ஏனெனில் ஒருவர் ரியல் எஸ்டேட் செல்கிறார், நிலம் வாங்கச் செல்கிறார், சுரங்கத் தொழிலுக்குச் செல்கிறார், நகைக்கடைக்குச் செல்கிறார், ஆடம்பரப் பொருட்களுக்குச் செல்கிறார். இந்த இடங்களில் நாம் அதிகமாக கருப்புப் பண புழக்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுங்கள் அங்கும் கருப்புப் பணத்தை கண்டுபிடிக்க முடியும். எனவே வாங்குவோர், விற்போரை தடம் காணுவது எப்போதும் எளிதானது” என்றார் அருண் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x