Last Updated : 30 Jul, 2015 09:05 AM

 

Published : 30 Jul 2015 09:05 AM
Last Updated : 30 Jul 2015 09:05 AM

சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தாவுக்கு மகசேசே விருது

ஆசியாவின் நோபல் பரிசு எனப் போற்றப்படும் ராமன் மகசேசே விருது, இந்தியாவின் சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தா உட்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான மகசேசே விருது 5 பேருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தா, லாவோஸின் கொம்மலி சந்தாவோங், பிலிப் பைன்ஸின் லிகாயா பெர்னான்டோ- அமில்பங்க்ஸா, மியான்மரின் கியாவ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்படவிருப்பதாக, ராமன் மகசேசே விருது அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ராமன் மகசேசே நினைவாக இந்த விருது கடந்த 1957-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

அன்ஷு குப்தா, கார்ப்பரேட் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். அந்த வேலையை உதறிவிட்டு 1999-ம் ஆண்டு கூஞ்ச் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் பயன்படுத்திய ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை சேகரித்து, இயலாதவர்களுக்கு இலவசமாக அளித்து வருகிறது.

சஞ்சீவ் சதுர்வேதி (40), இந்திய வனப்பணிகள் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரி ஆவார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். பொது நிறுவனங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் அம்பலப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது அறிவிப்பு குறித்து சஞ்சீவ் சதுர்வேதி பேசியதாவது: நேர்மையான அதிகாரிகளுக்கு, தார்மீக ரீதியான ஊக்கத்தை அளிப்பதாக இந்த அறிவிப்பு உள்ளது. சுதந்திரமான நீதித் துறை காரணமாகவே என் னால் தாக்குப்பிடிக்க முடிந்துள் ளது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக செல்வாக்கு மிக்க நபர்கள் மீது நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். பிரதமரின், “லஞ்சம் வாங்கவும் மாட்டேன், யாரையும் வாங்க விடவும் மாட்டேன்” என்ற கோஷத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

ஊழலை இம்மியளவு கூட சகித்துக்கொள்ளக்கூடாது. நேர்மையான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை இருக்கக் கூடாது. நான், ஊழலுக்கு எதிராக செயல்பட்டவன் என்ற முறையில் பிரதமர் அலுவலகத்தின் செயல் பாடுகளில் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். எய்ம்ஸ் மருத்துவ மனையில் ஊழலை ஒழிக்க, தனிப்பட்ட முறையில் அபாயத்தை உணர்ந்தே செயல்பட்டேன். இதனை எனது இதயத்திலிருந்து சொல்கிறேன்.

எய்ம்ஸ் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக உரிய ஆதாரங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக எனக்கு நெருக்கடி அதிகரித்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சஞ்சீவ் சதுர்வேதி, ஹரியாணா அரசால், 5 ஆண்டுகளுக்குள் 12 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைமை ஊழல் கண்காணிப் பாளராக பணிபுரிந்த சஞ்சீவ் சதுர்வேதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அவர் விசாரணையைத் தொடங் கியதால்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இந்த விருதை 2006-ம் ஆண்டு பெற்றுள்ளார். சஞ்சீவ் சதுர்வேதியை டெல்லி அரசுப்பணிக்கு மாற்றும்படி அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x