Published : 27 May 2016 12:55 PM
Last Updated : 27 May 2016 12:55 PM

கோடிகளில் விளம்பரம்: மோடி அரசை சாடும் ஆம் ஆத்மி; கேஜ்ரிவால் மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை யொட்டி விளம்பரங்களுக்காக மட்டுமே ரூ.1000 கோடி பணத்தை மோடி அரசு செலவழித்துள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.

பாஜக மீது ஆம் ஆத்மி விமர்சனத்தை முன்வைத்துள்ள நிலையில், அதே விளம்பர வியூகத்தைக் மேற்கோள்காட்டி, கேஜ்ரிவால் மீது காங்கிரஸ் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "மோடி அரசு 2-ம் ஆண்டு நிறைவு விழாவுக்காக மட்டும் ரூ.1000 கோடி செலவழித்துள்ளதாக தகவல். டெல்லி அரசு ஓராண்டு முழுமைக்கும் ரூ.150 கோடிக்கும் குறைவாகவே செலவழிக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் ஆம் ஆத்மி மூத்த தலைவர்களுள் ஒருவரான அசுதோஷ் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "2-ம் ஆண்டு நிறைவு விழாவை மோடி அரசு 8000 திரையரங்குகளிலும், அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்திக் கொண்டாடுகிறது.

ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக இவ்வளவு செலவு தேவையா? இவற்றில் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டுமே மோடி அரசு எவ்வளவு செலவழித்துள்ளது என்பது தெரிய வேண்டும். தொலைக்காட்சி ஊடகங்கள் இதைப் பற்றியும் விவாத நிகழ்ச்சிகள் நடத்துமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மி செய்வது சரியா?

பாஜக மீது ஆம் ஆத்மி விமர்சனத்தை முன்வைத்துள்ள அதே வேளையில் காங்கிரஸ் கட்சி, கேஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் மக்கான், "ஆம் ஆம்தியின் அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு 'மினி மோடி'. அவர், டெல்லி மக்கள் கடுமையான குடிநீர் பற்றாக்குறை, மின் வெட்டில் சிக்கித் தவித்தபோது மற்ற மாநில ஊடகங்களில் ஆம் ஆத்மி அரசு குறித்து விமரிசையாக விளம்பரம் செய்து மக்கள் பணத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தார். கடமையைச் செய்யாமல் பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

எந்த அக்கறையும் இல்லாமல் மோடி கோடிக்கணக்கில் விளம்பரங்களுக்கு பணத்தை செலவழிப்பதுபோலவே கேஜ்ரிவாலும் மக்கள் நலனைக் கருதாமல் விளம்பரம் செய்து வருகிறார்.

மற்ற மாநிலங்களில் காலூன்றும் முயற்சியை விட்டுவிட்டு ஏற்கெனவே ஆட்சியில் உள்ள டெல்லியை மேம்படுத்த கேஜ்ரிவால் ஏதாவது செய்ய வேண்டும்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் ஆகியும் அங்கு ஊழல் ஒழிக்கப்படவில்லை, விலைவாசி ஏற்றம் கட்டுப்படுத்தப்படவில்லை, வேலையின்மை பிரச்சினையும் சீர் செய்யப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x