Last Updated : 22 Jun, 2017 06:20 PM

 

Published : 22 Jun 2017 06:20 PM
Last Updated : 22 Jun 2017 06:20 PM

குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமார் தேர்வு: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, பிஹார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் கடந்த 19-ம் தேதி அறிவிக்கப்பட்டார். இவர் உத்தர பிரதேசத்தின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்தது. இதனை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன. “ராம்நாத் கோவிந்த் ஆர்எஸ்எஸ்காரர். அவரை ஒருபோதும் ஆதரிக்கமுடியாது” என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

எனினும் பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் கோவிந்தை ஆதரித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டம்

இந்தப் பின்னணியில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தரப்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, திமுக தரப்பில் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மாநிலங்களவை எம்.பி. பால்சந்திர முங்கர் ஆகியோரின் பெயர்கள் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டன.

மார்க்சிஸ்ட் தரப்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் பெயர்கள் பரிந்துரைக் கப்பட்டன. இறுதியில் மீரா குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியபோது, “குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமார் போட்டியிடுவார். அவருக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

மீரா குமார் பின்னணி

பிஹாரை சேர்ந்த முன்னாள் துணை பிரதமரும் தலித் தலைவருமான ஜெகஜீவன் ராமின் மகள் மீரா குமார். இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றிய அவர் கடந்த 1985-ல் அரசியலில் நுழைந்தார்.

ஐந்து முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2004-ல் மன்மோகன் சிங் அமைச்சர வையில் சமூகநலத் துறை இணை அமைச்சராகவும், 2009-ல் மத்திய நீர்வளத் துறை அமைச்சராகவும் பணி யாற்றி உள்ளார். கடந்த 2009 முதல் 2014 வரை மக்களவையின் முதல் பெண் சபாநாயகராக பதவி வகித்தார்.

முதல்வர் நிதிஷுக்கு நெருக்கடி

தலித் வேட்பாளர், பிஹார் ஆளுநராக பணியாற்றியவர் என்ற வகையில் ராம்நாத் கோவிந்துக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போது எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர். மீரா குமார் பிஹாரை சேர்ந்தவர். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் குடியரசுத் தலைவர் வேட் பாளர் விவகாரத்தில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. எனினும் நிதிஷ்குமாரை சந்தித்து, மீரா குமாருக்கு ஆதரவு அளிக்குமாறு கோரு வேன் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x