Last Updated : 22 Jun, 2017 01:00 PM

 

Published : 22 Jun 2017 01:00 PM
Last Updated : 22 Jun 2017 01:00 PM

குடியரசுத் தலைவர் தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் கொடுத்த அதிர்ச்சிக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஆலோசனை

ஐக்கிய ஜனதாதளம் தங்களது ஆதரவை தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அளித்திருப்பதையடுத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.

ஆனால் நிதிஷ் குமாரின் அறிவிப்பு ஏற்படுத்திய அதிர்ச்சியில் எதிர்க்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. நிதிஷ் குமார் முடிவை அடுத்து காங்கிரஸ் மற்றும் தேஜகூ அல்லாத பிற கட்சிகள் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக ஒன்றிணைப்பது எப்படி என்ற நோக்கில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் ஆதரவு குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மணீஷ் திவாரி கூறும்போது, “நாட்டின் உயரிய பதவிக்கான தேர்தல் வருகிறது. எதிர்கட்சிகள் ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நான் இது குறித்து யூகங்களை வெளியிடுவது சரியாகாது” என்றார்.

வாஜ்பாயியைச் சந்தித்து ஆசி பெற்ற ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாய்பாயியைச் சந்தித்து ஆசி பெற்றார். தன் மனைவியுடன் இவர் சென்றார். நேற்று அத்வானி, மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மரியாதை நிமித்தமாக ராம்நாத் கோவிந்த் சந்தித்தார்.

எதிர்க்கட்சிக் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் மீரா குமார்?

இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவர் மீரா குமார் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்ததும் ஊகங்களைக் கிளப்பியுள்ளது.

ஆனால் இடதுசாரித் தரப்புகளோ காங்கிரஸ் இன்னமும் எந்த ஒரு பெயரையும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதிக் கட்சியின் நரேஷ் அகர்வால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுக்கும் என்றார். இந்நிலையில் லக்னோவில் யோகா தினத்தில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டதும் பல ஐயங்களை எழுப்பியுள்ளது. ஆனாலும் எதிர்க்கட்சியினரில் ஒருபிரிவினர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக வேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வின் கருத்தியல் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஒரு தலித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததனால் எதிர்க்கட்சியினருக்கு தெரிவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. தலித் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக இன்னொரு தலித் வேட்பாளரையே நிறுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், முன்னாள் அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

எதிர்க்கட்சியினர் கூட்டம் முக்கியத்துவமற்றது: ஐக்கிய ஜனதாதளம்

ஐக்கிய ஜனதாதளச் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி, தங்கள் ஆதரவைத் தெரிவித்த பிறகே எதிர்க்கட்சிக் கூட்டம் எங்களுக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகிவிட்டது என்றார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. எனவே காவிக்கட்சிக்கு எதிரான போராட்டத்தில் எதிர்க்கட்சியினருடந்தான் ஐக்கிய ஜனதாதளம் நிற்கும் என்றார் தியாகி.

டி.ராஜா, நிதிஷ் குமார் முடிவைப் பற்றிக் கூறும்போது, நிதிஷ் குமார் இதனை அறிவிப்பதற்கு முன்பாக முதலில் எதிர்க்கட்சியினரை கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஆனால் நிதிஷ் முடிவினால் எதிர்க்கட்சியினரின் ஒற்றுமை ஒரு போதும் பாதிக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x