Published : 28 Sep 2016 08:30 PM
Last Updated : 28 Sep 2016 08:30 PM

காவிரி பிரச்சினை: தமிழகத்துக்கு நீர் திறந்து விடும் முடிவை கர்நாடகா ஒத்திவைப்பு

நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியின் தலைமையில் வியாழனன்று நடைபெறும் இருமாநில கூட்டத்திற்குப் பிறகு தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இது குறித்து புதனன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “கர்நாடக அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதனை மாநிலத்தின் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

இது தொடர்பாக கடந்த 23-ம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் காவிரி நீரை குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் அன்று ஒருமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடைபிடிக்க முடிவெடுக்கப்பட்டது.

மதச்சார்பற்ற ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளன.

நாளை (வியாழன்) புதுடெல்லியில் இருமாநில அமைச்சர்கள் கூட்டம் உமாபாரதி தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நான், நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

எனவே இந்தக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகத்திற்கு நீர்திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார் சித்தராமையா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x