Published : 22 Nov 2014 10:13 AM
Last Updated : 22 Nov 2014 10:13 AM

கலாச்சார காவல் தேவையில்லை: நடிகர் மோகன்லால் அறிவுரை

கலாச்சார காவல் பணி தேவை யில்லை என்று மலையாள நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது வலை தளத்தில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள் வருமாறு:

பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவை குறித்து அரசியல் தலைவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால் கலாச் சாரத்தை காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். சில அமைப்புகளும் இதில் ஈடுபடுகின்றன.

பெங்களூர் நகரை ஓய்வூதிய தாரர்களின் சொர்க்கபுரி என்று அழைப்பார்கள். இப்போது அந்த நகரம் காதலர்களுக்கும் சொர்க்கமாக விளங்குகிறது. மாணவர்களும் மாணவிகளும் பேசுவதற்கு தடை விதிப்பது அழகல்ல.

அதேநேரம் முத்தப் போராட்டம் என்ற பெயரில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதனால் யாருக்கு என்ன பயன்?

ஆண், பெண் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. நட்பு, அன்பு, சகோதரப் பாசம், தாய்-மகன் உறவு என எத்தனையோ பாச உறவுகள் உள்ளன. அவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மைக்காலமாக சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவை குறித்து அரசியல் கட்சிகள் எவ்வித அக் கறையும் கொள்ளவில்லை. இது போன்ற சமூகவிரோத செயல் களை தடுக்க போராட வேண்டும்.

முத்தமிடுவதற்கும், முத்த மிடாமல் இருப்பதற்கும் நமக்கு உரிமை உண்டு. ஆனால் என் பார்வையில் நீ முத்தமிடக் கூடாது என்று உத்தரவிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஒருவேளை அதுபோன்ற காட்சிகள் அநாகரிகமாக தெரிந்தால் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடலாம். அதுதான் அறிவார்ந்தது.

இவ்வாறு மோகன்லால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x